உகண்டா ஜனாதிபதித் தேர்தலில் யுவேரி முசேவெனி வெற்றி: வரலாறு காணாத ஊழல் மோசடி என பொஆபி வைன் குற்றச்சாட்டு

105

கலாநிதி றவூப் ஸெய்ன்

உகண்டாவின் ஜனாதிபதித் தேர்தலில் நேற்று வெளியான முடிவுகளின்படி யுவேனி முசேவெனி வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணைக்குழு நேற்று அறிவித்தது. 1986 ஆம் ஆண்டிலிருந்து ஜனாதிபதியாக இருந்து வரும் முசேவெனி கடந்த தேர்தலில் 5.85 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளார். இது 58.64 வீதமாகும். எதிர்க்கட்சி வேட்பாளர் பொபி வைன் 3.48 மில்லியன் வாக்குகளைப் பெற்றுள்ளதோடு, அது 34.83 வீதம் என உகண்டாவின் தேசிய தொலைக்காட்சியில் தேர்தல் ஆணையகம் அறிவித்தது. இதன்படி உகண்டா குடியரசின் ஜனாதிபதியாக மீண்டும் முசேவெனி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.

இம்முறை தேர்தலில் 38 வயதான பொபி வைன் வெற்றி பெறுவார் என்று பெருமளவு எதிர்பார்க்கப்பட்டது. உகண்டாவின் இளம் தலைமுறையினர் அனைவரும்போல் அவருக்கு ஆதரவாக இருந்ததோடு, ஓர் அரசியல் மாற்றம் நாட்டில் நிகழும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. நாட்டின் சர்வதிகாரத்தையும் பரந்துபட்ட ஊழலையும் முடிவுக்குக் கொண்டு வரும் இளம் தலைவராக பொபி வைன் பார்க்கப்படுகிறார்.

76 வயதான முசேவெனி தான் நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவர் என்றும் நாட்டின் ஸ்திரப்பாட்டையும் பொருளாதார அபிவிருத்தியையும் தனக்கே ஏற்படுத்த முடியும் என்றும் கூறி இம்முறை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். ஆனால், அவரது 35 ஆண்டு கால ஆட்சியில் அரசியல் ஸ்திரப்பாடோ பொருளாதார அபிவிருத்தியோ ஏற்படவில்லை.

உகண்டாவின் ஊழல் பெருச்சாளி என்று அறியப்பட்ட முசேவெனி தனது சர்வதிகாரத்தைத் தக்கவைப்பதற்கு இராணுவத்தைப் பயன்படுத்தி வருவதோடு, ஒவ்வொரு தேர்தலிலும் ஊழல் செய்து வருகின்றார் என குற்றம் சாட்டப்படுகின்றது.

உகண்டா பாராளுமன்ற உறுப்பினர் ரொபட் யகுலாவி தேர்தலில் முறைகேடு இடம்பெற்றதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் பொபி வைனின் வீடு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பதாகவே இராணுவத்தினரால் முற்றுகையிடப்பட்டது. சர்வதேச ஊடகவியலாளர்கள் எவரும் அவரது வாசஸ்தலத்தில் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

அல்ஜஸீராவிடம் கருத்துத் தெரிவித்த பொபி வைன், வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு இராணுவ அதிகாரிகள் தனக்கு அனுமதியளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளதோடு, உகண்டாவின் வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான தேர்தல் முறைகேடு இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவப் பிரதிப் பேச்சாளர் லியோ எகீகி, ரொய்டரிடம் கருத்து வெளியிட்டபோது “பொபி வைனின் வீட்டுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது சொந்தப் பாதுகாப்பைக் கருதியே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்க ஒன்றியம் மற்றும் கிழக்காபிரிக்க சமூகம், தேர்தல் கண்காணிப்புக் குழுக்களை உகண்டாவுக்கு அனுப்பியிருந்தது. அவை ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் குறித்து இதுவரை அறிக்கையிடவில்லை. பொலிஸார் தேர்தலோடு தொடர்பான 42 வன்முறை சம்பவங்களைப் பதிவுசெய்துள்ளனர்.

இதற்கு முன்னைய தேர்தலை விட இம்முறை தேர்தலில் அதிக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள. நவம்பரில் தேர்தல் பிரச்சாரங்கள் இடம்பெற்றபோது பாதுகாப்புப் படையினர் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது கடும் அடக்குமுறையைப் பிரயோகித்ததோடு, கலவரங்களையும் மூட்டிவிட்டதாக குற்றம் சாட்டப்படுகின்றது. அதில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் பொபி வைன் அரச படைகளால் கைதுசெய்யப்பட்டார். தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள பொபி வைன், தனக்கு உயிராபத்து ஏற்பட்டுள்ளதாக தொலைபேசி மூலம் சர்வதேச ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

1962 இல் பிரிட்டனிடமிருந்து உகண்டா அரசியல் சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து அங்கு இராணுவப் புரட்சி வெடித்தது. 1979 ஆம் ஆண்டு வரை இராணுவ சர்வதிகாரம் நீடித்தது. 1980 இல் சர்ச்சைக்குரிய முதல் தேர்தல் இடம்பெற்றது. மட்டுமன்றி, அடுத்த ஐந்தாண்டுகளில் நாட்டில் சிவில் யுத்தமொன்று மூன்றது. 1986 இல் தற்போதைய ஜனாதிபதி யுவேனி முசேவெனி அதிகாரத்திற்கு வந்தார்.

உகண்டாவின் 20 ஆண்டு கால கொடூரமான கிளர்ச்சி ஒன்று வடக்குப் பிராந்தியத்தில் நடந்தது. HIV தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெற்றுள்ள கிழக்காபிரிக்க நாடான உகண்டாவில் ஜனநாயகம் இன்னும் மீளவில்லை என்பது கவலைக்கிடமானது.

உகண்டா குடியரசு

தலைநகர் கம்பாலா

சனத்தொகை 5.6 மில்லியன்

பரப்பு 241038 சதுர கி.மீ.

மொழி – ஆங்கிலம், சவாகிலி (உத்தியோகபூர்வ மொழிகள்)

லுகண்டா, பந்து, மிலோடிக் என்பன ஏனைய மொழிகள்

பிரதான சமயங்கள் – கிறிஸ்தவம், இஸ்லாம்

ஆயுள் எதிர்பார்ப்பு – 54 ஆண்டுகள் (ஆண்), 55 ஆண்டுகள் (பெண்)

நாணயம் – உகண்டா ஷிலிங்

எல்லைப்புற நாடுகள் – தென் சூடான், கென்யா, தன்சானியா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மதிப்பீட்டின்படி உகண்டாவின் மொத்த சனத்தொகையில் 14 வீதமானோர் முஸ்லிம்களாவர். ஆனால், அந்நாட்டில் இயங்கும் முஸ்லிம் சிவில் சமூக நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி 20 வீதமானோர் முஸ்லிம்களாவர். 80 வீதமானோர் கிறிஸ்தவர்கள். 2019 மதிப்பீட்டின்படி நாட்டின் மொத்த சனத்தொகை 42.2 மில்லியன் என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவிக்கின்றது.