ஈரான் நீண்ட தூர ஏவுகணைப் பரிசோதனைகளை நடத்தியுள்ளது

134

ஈரான் புரட்சிகரப் படையினர் முன்னொருபோதும் இல்லாத வகையில் மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் பரிசோதித்துப் பார்த்துள்ளதாக அறிவித்துள்ளது. ட்ரம்ப் பதவி விலகிச் செல்லும் வேளையில் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அதிகரித்துள்ள நிலையில், தெஹ்ரான் இம்முயற்சியில் இறங்கியுள்ளது.

இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் அறிக்கையின்படி 1800 கி.மீ. தொலை தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை இந்து சமுத்திரத்தின் வடக்குப் புறமாக ஈரான் பரீட்சித்துள்ளது. ஈரானின் எந்தவொரு எதிரியையும் தாக்கியழிக்கும் திறன் தற்போதைய ஏவுகணைகளுக்கு உள்ளது என்று இராணுவத் துறை தலைவர் முஹம்மத் பகீரி தெரிவித்துள்ளார்.

நாம் எந்தவொரு நாட்டையும் ஆக்கிரமிக்கும் நோக்கம் இல்லை. ஆனால், எமது நாட்டை ஆக்கிரமிக்க முயலும் எதிரிகளை நாம் மிகக் குறுகிய நேரத்தில் தாக்கியழிப்போம் என்று அவர் மேலும் கூறினார். கடலில் போர்க் கப்பல்களிலிருந்து ஏவப்படும் எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் ஆற்றல் ஈரானிய நீண்டதூர ஏவுகணைகளுக்கு உள்ளதென்று புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.