ஆழ்மன விதைப்புக்கள்

81

✍️ றிப்னா ஷாஹிப்
உளவளத்துணையாளர்
கல்லொழுவ
மினுவாங்கொடை

(சர்வ சாதாரணமாக விடப்படும் மிகப்பெரும் தவறுகள்)

அன்று ஓர் விடுமுறை நாள். குடும்ப ஒன்றுகூடல் ஒன்று நிகழ்கிறது. குடும்பத்தினர் பேச்சில் மூழ்க அண்ணனுடன் விளையாடிக் கொண்டிருந்த  மூன்று வயது   ஹனா திடீரென கீழே விழுகிறாள். சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்த பேச்சு சட்டென்று நின்று விடுகிறது. முதலில் ஓடிவந்து தூக்கும் சித்தி பொங்கி வந்த அவளின் அழுகையைத் தடுப்பதற்கு”அடி படவே இல்லை…ஹனா நல்ல பிள்ளை அழவே மாட்டாள்.. சாகிர் தான் பேட் போய் எப்போதும் அழுபவன்.. எங்கள் ஹனா ஓல்வேய்ஸ் குட் எங்க சிரிங்க பார்க்கலாம் ” என்கிறாள்.  ஹனா குடும்பத்தினரைப் பார்க்கிறாள். சிரிக்கச் சொல்லி மூளை கட்டளை இடுகிறது. சிரிக்கிறாள்.. அன்னை அவளை கட்டியணைக்கிறாள். ஏனையோர் புன்முறுவலுடன் விட்டதை தொடர்கின்றனர்.

இங்கே விதைக்கப்படுகிறது. உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்தாது மறைத்து பிறர் எதிர்பார்க்கும் பிரதிபலிப்புக்களை வெளிக்காட்டும் போது தான் சமூகம் ஏற்கிறது. சந்தோஷிக்கிறது என்ற தவறான எண்ணம்.

இதன் விளைவு காலப்போக்கில் ஹனாவின் மனம் உணர்வுகளை புதைத்துக்கொள்ளும் களஞ்சியசாலையாக மாற்றப்பட்டு மனநோய்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாற்றப்படும்.

சரித் மிக ஆர்வமாக தந்தையிடம் வந்து கேட்கிறான். “இந்த கணக்கை எவ்வாறு வகுப்பது?”  அதற்கு தந்தை

“அம்மாவிடம் போய் கேள்.. கையில் வேலை”. என்கிறார். அவன் ஆழ்மனதில் இப்போது ஆழமாக பதிகிறது “அப்பா எப்போதும் பிஸியாக இருப்பதால் இதைப்பற்றி அவருக்கு தெரியாது”..

பின்பு அம்மாவிடம் போய் கேட்கிறான் “இப்படியெல்லாம் என் காலத்துல நா படிக்கல்ல.. காலம் மாறியாச்சு.. இப்போவெல்லாம் நிவ் சிலபஸ்..” என்கிறார் அத்தாய்.  இப்போது சரித்தின் ஆழ்மனதில் “அம்மா ஓல்ட் சிலபஸ் அவ காலம் வேற எங்க காலம் வேற..” என்று பதிவாகிறது.

பின் அண்ணனிடம் கேட்கிறான். “புக்கில் செய்முறை முறை உள்ளது. நீயே வாசித்து நீயே சரிபார்த்து எழுது..” என்று பதில் வருகிறது.

இப்போது அவன் மனதில் “ஏன்ட விஷயங்கள நானே தான் தீர்க்கனும்”.

காலம் கடக்கின்றது. ஏழு வயது சரித் பதினேழு வயதாகிறான். பொருத்தமற்ற காதலில் விழுகிறான். மோசமான நடத்தைகள் உருவாகின்றன. இப்போது அவன் மனதை மாற்ற பல்வேறு முயற்சிகள் குடும்பத்தினரால் மேற்கொள்ளப்படுகின்றன. தந்தை கனிவாக சொல்கிறார்., வன்மையாக சொல்கிறார். பயனில்லை காரணம் அவன் ஆழ்மனதில் அப்பா பற்றிய எண்ணம்  ” எப்போதும் பிஸியாக இருப்பதால் இதைப் பற்றி அப்பாவிற்கு ஒன்றும் தெரியாது..”

அம்மா மனதை மாற்ற பல வார்த்தைகளை பயன்படுத்துகிறார். பயனில்லை. அந்த வார்த்தைகளை விடவும் பலம்வாய்ந்தது அம்மா பற்றிய சரித்தின் ஆழ்மன எண்ணம்.

“அம்மாவின் காலம் வேற எங்கட காலம் வேற”

அண்ணாவின் அறிவுரையிலும், வோர்னிங்கிலும் அவன் மனம் மசியாது. காரணம்  “ஏன்ட விஷயங்கள நான் தான் தீர்க்கனும். அண்ணாவிற்கு இதில் சம்பந்தம் இல்லை”.

இனி இவர்களின் பேச்சுக்களும், முயற்சிகளும் செல்லாக்காசு தான்.

இதுவே இந்த சந்தர்ப்பத்தின் போது தந்தை தன் வேலையை கொஞ்ச நேரம் நிறுத்திவிட்டு  சொல்லிக் கொடுத்து இருந்தால் அல்லது அதை செய்வதற்கு உதவி இருந்தால்.. அவன் மனதில் “தந்தைக்கு இது பற்றியும் தெரியும். என் விடயங்களில் அவருக்கு கவனமும், ஈடுபாடும், பொறுப்பும் உண்டு. அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்” .. என்று பொசிடிவ்வாக பதிந்திருக்கும். பிற்காலத்தில் இந்த பதிவு அவர் கூறும் சொற்களை செவிசாய்ப்பதற்கும், மரியாதை கொடுப்பதற்கும் ஏதுவாக அமைந்திருக்கும்.

இவ்வாறே தாய் மற்றும்  அண்ணன் பற்றிய மனப்பதிவுகளும் மாறும்.

சிறுவர்கள் கேட்கும் எங்கள் வார்த்தைகள், அவர்கள் பார்க்கும் எங்கள் நடத்தைகள் ஒவ்வொன்றும் எங்களைப் பற்றிய எண்ணங்களை அவர்கள் மனதில் விதைக்கின்றன. தவறான மற்றும் பிழையான, பலவீனமான எண்ணங்களை விதைத்துவிட்டு பின்னர். “என் பிள்ளை என் பேச்சைக் கேட்பதில்லை”,  ” என்னால் என் பிள்ளையை கன்ட்ரோல் பன்ன முடியவில்லை” என்று புலம்பித்திரிவதில் பயனில்லை.

இவ்வாறே தான் தன் மனக் கவலைகளை கணவனிடம் கொட்டித்தீர்க்க வரும் மனைவிக்கு…

அதனை சரியாக செவிமடுக்காது, ஆறுதலலிக்காத கணவன் பற்றிய மனப்பதிவுகள் ” இவரால் என்னை ஆற்றுப்படுத்த, நிம்மதியளிக்க முடியாது, இவர் என்னைப் புரிந்து கொள்ளவில்லை” என்று ஆரம்பிக்கும். பிறகு துரதிஷ்ட்டவசமாக பால்ய நண்பன், பக்கத்து வீட்டு அண்ணன், தூரத்து சொந்தம் என்று யாராவது “ஏன் முகம் வாடியுள்ளது” என்று அன்பாக கேட்க அவளின் மனம் “கணவனை விட என்னைப் புரிந்து வைத்துள்ளார்..” என எண்ணவலைகளை விதைக்க தவறுகளுக்கான சந்தர்ப்பங்கள் சர்வசாதாரணமாக உருவாகின்றன.

வயதுவந்தவர்களின் நிலையே இப்படியிருக்க சிறுவர்களின் மனம் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

எந்த சந்தர்ப்பத்தில் எழும் எந்த எண்ணங்கள் பலம்வாய்ந்தவையாக ஆழமாக மனதில் பதியும் என்று கூறமுடியாது. திரும்ப திரும்ப ஒரே மாதிரியான விடயங்கள் மனதில் பதியும் போது அதை மாற்றுவது மிகவும் கடினமானது.

எனவே தான் வார்த்தைகளில் மிகவும் கவனம் தேவை என்கிறோம்.., குறிப்பாக சிறுவர்களை நெகடிவ்வாக “உன்னால் முடியாது”,  “நீ இப்படித்தான் (மோசமாக )

வருவாய்” என்றெல்லாம் பேசும்போது எது சரி? எது பிழை? எது உண்மை? எது பொய்? என்று பிரித்தறியத் தெரியாத பிஞ்சு மனம் அப்படியே அதை நம்பத் தொடங்குகிறது. ஈற்றில் அவர்களின்  ஆற்றல்களும், திறமைகளும் இவ் ஆழ்மன எண்ணங்களாலே முடக்கப்படுகின்றன.

ஆகவே வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள் அவை அடுத்தவர் ஆழ்மனம் வரை பாய்ந்து நடத்தைகளை உருவாக்கி வாழ்க்கையையே மாற்றக் கூடியது. உங்களை எப்படி அடுத்தவர்களின் வார்த்தைகள் தட்டிக் கொடுக்குமோ, தலைகீழாய் புரட்டிப்போடுமோ, மகிழ்ச்சியளிக்குமோ, வேதனையைத் தருமோ அவ்வாறே உங்களின் வார்த்தைகள் பிறருக்கும் உணர்வுகளையூட்டும் என்பதை புரிந்து நடந்து கொள்ளுங்கள். குழந்தை வளர்ப்பின் மிகப்பெரும் வெற்றி நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளிலும், அவர்களுடன் நீங்கள் நடந்துகொள்ளும் விதங்களிலுமே தங்கியுள்ளது.