ஜனாதிபதி ஜோ பைடனும் இஸ்லாமிய உலகும்

123

– கலாநிதி றவூப் ஸெய்ன்

அமெரிக்க ஜனாதிபதிகளோடு ஒப்பிடும்போது முன்னொருபோதும் இல்லாத வகையில் ஜோ பைடனின் நகர்வுகள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜனவரி 20 இல் பதவியேற்று சில மணித்தியாலங்களின் பின்னர் துரிதமாக பைடன் செயல்படுவார் என்பதற்கான அறிகுறிகளைக் காண்பித்துள்ளார். குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் கொள்கைகளை அரசியலிலிருந்து தூக்கி வீசும் வகையில் 17 முக்கிய நிறைவேற்றுக் கட்டளைகளை ஜோ பைடன் பிறப்பித்துள்ளார். அதற்குரிய ஆவணங்களில் அவர் ஒப்பமிட்டு  நிறைவேற்றுவதற்கான பணிப்புரைகளை விடுத்துள்ளார்.

அவரது நிகழ்ச்சி நிரலில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் விவகாரத்தை கையாள்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் கொரோனா விவிகாரத்தை முறையாகக் கையாளவில்லை என்பதோடு, அசமந்தமான போக்கினையே பின்பற்றியிருந்தார்.

புதன் கிழமை பதவியேற்ற பைடன், “இன்றைய நாளைப் போன்று பணிகளை ஆரம்பிப்பதற்கான வேறு நாட்கள் இல்லை” என ஓவல் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார். பதவியேற்ற கையோடு முக்கிய ஆவணங்களில் அவசர அவசரமாக ஒப்பமிடுவதே அவரது உடனடிப் பணியாக இருந்தது. “அமெரிக்க மக்களுக்கு நான் வழங்கிய வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றுவதற்கு ஆரம்பித்துள்ளேன்” என்று சர்வதேச ஊடகங்களிடம் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க- மெக்சிகோ எல்லையில் ட்ரம்ப் நிர்மாணித்து வந்த எல்லைச் சுவர் நிர்மாணப் பணிகளுக்கான நிதியை நிறுத்தும் ஆவணத்தில் அவர் கைச்சாத்திட்டார். அதேபோன்று அமெரிக்காவுக்கு பயணம் செய்ய முடியாது என்று தடைசெய்யப்பட்டிருந்த முஸ்லிம் நாடுகள் மீதான தடையை நீக்கும் ஆவணத்திலும் அவர் கையொப்பமிட்டார். இதன் மூலம் இரண்டு முக்கியமான விடயங்களில் ட்ரம்பை விடவும் பைடனின் கொள்கை வேறுபட்டுள்ளமை தெளிவு. லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் பரஸ்பர நல்லுறவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் பைடன் ஆர்வம் கொண்டுள்ளார்.

மெக்சிகோ மக்கள் குறித்து ட்ரம்ப் எழுப்பிய அனாவசியமான பீதி அவரது வாக்கு வங்கியை நிரப்பியது. பைடன் அந்தப் பீதியை நீக்கி எல்லைச் சுவரையும் நிறுத்தியுள்ளார். முஸ்லிம் நாடுகளோடு நல்லுறவு பாராட்ட வேண்டும் என்ற முன்னேற்றகரமான கொள்கை பைடனிடம் உள்ளதை அவர் நிறுவியுள்ளார்.

ட்ரம்ப் பதவியேற்று சில மணித்தியாலங்களில் குறிப்பிட்ட முஸ்லிம் நாடுகளின் பிரஜைகள் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது என்று தடை செய்யும் ஆவணத்தில் ஒப்பமிட்டு அதனை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறைவேற்றினார். பைடன் பதவியேற்று ஒரு மணித்தியாலத்தின் பின்னர் அத்தடைச் சட்டத்தை நீக்கியுள்ளார். இது அறபு -இஸ்லாமிய உலகோடு பைடன் கைக்கொள்ள இருக்கின்ற நல்லுறவுக் கொள்கையின் ஆரம்ப அறிகுறியாகப் பார்க்கப்படுகின்றது.

டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது பலஸ்தீனர்களின் வரலாற்றுப் புகழ்மிக்க ஜெரூசலம் நகரை இஸ்ரேலின் தலைநகர் என்று பிரகடனம் செய்ததோடு, அமெரிக்கத் தூதரகத்தை ஜெரூசலத்திற்கு இடம் மாற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தார். பலஸ்தீனர்களோடு இதற்குப் பின்னர் பேச்சுவார்த்தைகள் கிடையாது என்பதுதான் ட்ரம்பின் சியோனிஸ ஆதரவு நிலைப்பாடு.

1978 இற்குப் பின்னர் நடைபெற்று வந்த இஸ்ரேல் பலஸ்தீன் பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் இரு தரப்பும் இரு நாட்டுத் தீர்வுத் திட்டத்திற்கு கொள்கையளவில் உடன்பட்டிருந்தன. மத்தியஸ்தம் வகித்து வந்த நோர்வே மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் தலைவர்கள் கூட அதனை வலியுறுத்தி வந்துள்ளனர். டொனால்ட் ட்ரம்ப் இரு நாட்டுத் தீர்வுத் திட்டத்தை உதறித் தள்ளியதோடு, இஸ்ரேல் எனப்படும் ஒரு நாடு மாத்திரமே மத்திய கிழக்கில் இருக்க முடியும் என்றும் இது தொடர்பில் பலஸ்தீனர்களோடு பேச்சுவார்த்தை நடத்த எதுவுமே இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

அவரது நான்காண்டு கால ஆட்சியில் பலஸ்தீனர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எந்த அறிகுறியையும் அவர் காட்டவில்லை. ஆனால், பைடனின் தேர்தல் பிரச்சாரத்தின்போது மத்திய கிழக்குப் பிரச்சினையின் முக்கிய தரப்பாக பலஸ்தீனர்கள் அங்கீகரிக்கப்படுவர் என்று பைடன் கூறியிருந்ததோடு, இரு நாட்டுத் தீர்வு குறித்து மீள்பார்வை செய்யப்படும் எனவும் உறுதிபடக் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் குறித்த தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அமெரிக்காவின் தேசிய பொருளாதார ஆலோசகராக சமீரா பாஸிலி என்ற முஸ்லிம் பெண்மணியை ஜோ பைடன் நியமித்துள்ளார். சமீரா பாஸிலி இந்திய பூர்வீகத்தைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரைச் சேர்ந்த சமீரா அமெரிக்க தேசிய பொருளாதாரக் கவுன்சிலின் துணை இயக்குநராகவும் செயல்படவுள்ளார். பாராக் ஒபாமாவின் நிர்வாகத்தின்போது வெள்ளை மாளிகையின் அரசியல் ஆலோசகராக எகிப்திய பூர்வீகத்தைக் கொண்ட டாலியா முஜாஹித் என்ற முஸ்லிம் பெண்மணி நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமெரிக்காவில் பணியாற்றி வரும் நிரந்தர வதிவிட வீசாக்களைக் கொண்டுள்ள சுமார் 1 மில்லியன் வெளிநாட்டு முஸ்லிம்களுக்கும் குடியுரிமை தருவதாக பைடன் வாக்குறுதியளித்துள்ளார். வீசா இல்லாத கறுப்பின மற்றும் முஸ்லிம் மக்களுக்கு அதனைப் பெற்றுத் தருவதாகவும் பைடன் தெரிவித்துள்ளார். இவை அறபு இஸ்லாமிய உலகம் குறித்த ஜோ பைடனின் புதிய அணுகுமுறையைப் பிரதிபலிப்பதாகவே பார்க்கப்படுகின்றது.

இஸ்ரேல் மற்றும் இந்தியாவுக்கு ஜோ பைடனின் வருகை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலஸ்தீன் மற்றும் காஷ்மீர் குறித்து ஜோ பைடன் முற்போக்கான நிலைப்பாடுகளை எடுக்கக் கூடும் என்பதே இதற்கான காரணமாகும்.

ட்ரம்ப் பின்பற்றிய சுற்றுச் சூழல் தொடர்பான கொள்கையிலும் பெரிய மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கலாம். கடந்த நவம்பர் 04 ஆம் திகதி (ஜனாதிபதித் தேர்தலுக்கு அடுத்த நாள்) பாரிஸ் சுற்றுச் சூழல் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது. ஜோ பைடன், பாரிஸ் சூழல் ஒப்பந்தத்தில் மீளவும் இணைவதற்கான ஆவணத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

ட்ரம்ப் பின்வாங்கிய அல்லது புறக்கணித்த பல்வேறு சர்வதேச ஒப்பந்தங்களை ஜோ பைடன் மீளவும் இணைத்துக் கொண்டுள்ளார். உலக சுகாதார அமையத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார். பைடன் அதனை மாற்றியமைத்துள்ளார். பாதுகாப்புச் சபையிலிருந்தும் அமெரிக்கா வெளியேறுவதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார். பைடன் அதனை நிராகரித்துள்ளார்.

பைடனின் முதல் நடவடிக்கை அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் சட்டத்தில் ஒப்பமிட்டமையே. ட்ரம்ப் முகக் கவசம் கட்டாயமில்லை என்று அறிவித்ததோடு, தானும் முகக் கவசம் அணிவதைத் தவிர்ந்து கொண்டார். கொரோனாவினால் உச்சகட்டம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்க இருந்து வருவதனால் கொரோனாவிலிருந்து அமெரிக்கர்களைப் பாதுகாப்பதே வெள்ளை மாளிகையின் முதன் நடவடிக்கை என பைடன் அறிவித்துள்ளார். இதற்கென பல மில்லியன் டொலர் நிதி ஆதரவுத் திட்டத்தை பைடன் அறித்துள்ளார்.

வீழ்ச்சியடைந்துள்ள அமெரிக்கப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான அனைத்து நிதியாதரவும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று பைடன் அறிவித்துள்ளதோடு, நாட்டின் வேலையில்லாதோர் பிரச்சினை, கறுப்பின மக்களின் உரிமைகள் மற்றும் பிற சிறுபான்மை மக்களின் உரிமைகள் அனைத்துக்கும் உத்தரவாதமளிக்கப்படும் என்றும் பைடன் அறிவித்துள்ளார்.

பதவிவேற்ற 20 ஆம் திகதி முழுவதும் அலுவலகத்தில் கடமையாற்றிய பைடன், உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய அனைத்து விவகாரங்கள் குறித்தும் நிறைவேற்று ஆவணங்களில் ஒப்பமிட்டார். அவர் கைச்சாத்திட்ட 17 முக்கிய விடயங்களும் பின்வருமாறு:

தலைப்பு நடவடிக்கை
கொரோனா வைரஸ் 100 நாள் முகக் கவசம் அணியும் திட்டம். 100 நாட்களுக்கு முகக் கவசம் அணியுமாறு அமெரிக்கர்களிடம் வேண்டப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் முகக் கவசம் அணிவதோடு சமூக இடைவெளியைப் பேணுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலக சுகாதார அமையத்திலிருந்து அமெரிக்க வெளியேற்றத்திற்குத் தடை. ஙிஏO வின் அமெரிக்க தூதுக் குழுவுக்கு வைத்தியர் என்டோனி பவுசி நியமனம்.
கொரோனா வைரஸ் கொரோனா நிலவரம் குறித்து நேரடியாக பைடனுக்கு அறிவிப்பதற்கு இணைப்பாளர் ஒருவர் நியமனம். மேலும் தடுப்பூசி மற்றும் மருத்துவ உபகரணங்களை விநியோகம் செய்வதற்கும் ஏற்பாடு
பொருளாதாரம் குறைந்தபட்சம் மார்ச் 31 வரை தற்போது நிலவும் தேசியளவிலான நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பொருளாதாரம் மாணவர்களின் கடன் கொடுப்பனவுகள் மற்றும் அமெரிக்கர்களின் வங்கிக் கடன்களுக்கான வட்டிகள் என்பவற்றை மீளப் பெறல் செப்டம்பர் 31 வரை நிறுத்தி வைக்கப்படும்.
சுற்றுச்சூழல் எதிர்வரும் 30 நாட்களுக்குள் பாரிஸ் சூழலியல் உடன்படிக்கையில் அமெரிக்க மீள இணையும்.
சுற்றுச்சூழல் அமெரிக்காவின் குறிப்பிட்ட சில குழாய் நீர் விநியோகத் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படாது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
சமத்துவம் இனவாத நடவடிக்கைகளை விசாரிப்பதற்கான 1776 ஆம் ஆண்டின் ஆணைக்குழு மீண்டும் செயல்படும்
சமத்துவம் பால்நிலை அடையாளம் மற்றும் பால் வேறுபாடு ஆகியவற்றின் அடிப்படையிலான பணியிட வேற்றுமைகள் நீக்கப்படும்.
தொகைக் கணிப்பீடு குடியுரிமை இல்லாதவர்களும் தொகைக் கணிப்பீட்டில் உள்ளடக்கப்படுவர். மேலும் காங்கிரஸ் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுவர்.
குடிபெயர்வு ஈஅஇஅ பலப்படுத்தப்படும்.
குடிபெயர்வு 7 முஸ்லிம் நாட்டு பிரஜைகள் மீத விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை உத்தரவு நீக்கம்.
குடிபெயர்வு ஐக்கிய அமெரிக்காவுக்கு உள்ளே ட்ரம்ப் அமுல்படுத்திய இடம்பெயர்வு தொடர்பான சட்டம் நீக்கம்
குடிபெயர்வு மெக்சிகோ-அமெரிக்க எல்லைப்புற சுவர் நிர்மாணம் நிறுத்தம்
குடிபெயர்வு ஐக்கிய அமெரிக்காவில் பணியாற்றி வரும் சட்டபூர்வமற்ற லைபீரியர்களை எதிர்வரும் ஜூன் வரை நாடு கடத்துவதை நிறுத்தல்.
ஒழுங்குமுறை நீதித்துறை சுயாதீனத்தை வலுப்படுத்துவதற்குத் தேவையான ஒழுங்கு முறைகளை வகுத்தல்.

 

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பைடன் சமந்தா பவரை க்கு அஐஈ பிரதானியாகவும் நியமித்துள்ளார். அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபையின் அங்கத்தவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். சமந்தா பவர் 2013-2017 காலப்பகுதியில் ஐ.நா.வுக்கான அமெரிக்கப் பிரதிநிதியாக இருந்தவர். அக்காலப் பகுதியிலேயே இலங்கை தொடர்பான தீர்க்கான சில நிலைப்பாடுகளை சமந்தா பவர் எடுத்தார். மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட அவர் காரணமானார். சமந்தா ஓரளவு நடுநிலையானவர் என்றும் மனித உரிமை விவகாரங்களில் கூடிய அக்கறையுள்ளவர் என்றும் அறியப்பட்டவர். நாடுகளின் சமத்துவம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், அகதிகளாகப் புலம் பெயர்ந்தோரின் உரிமைகள் குறித்து மிகுந்த ஆர்வமுள்ளவரே சமந்தா. A Problem from hell என்ற நூலுக்கு சர்வதேச புகழ்பெற்ற புலிட்சர் விருதை வென்றவர். இனப்படுகொலையைத் தடுப்பதற்கு அமெரிக்கத் தலைவர்கள் தவறுவதே ஏன் என்பதே இந்நூலின் மையப் பொருளாகும். பைடன் நிர்வாகப் பொறுப்புக்கு மிகத் தகுதியானவர்களையே நியமிக்கிறார் என்பதும் எதிர்கால அமெரிக்காவின் அரசியல் குறித்த நம்பிக்கையை மீளுருவாக்கம் செய்வதாக அவதானிகள் கருதுகின்றனர்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி பாராக் ஒபாமாவை விட சமகால அறபு இஸ்லாமிய உலகு தொடர்பான முன்னேற்றகரமான ஒரு வெளிநாட்டுக் கொள்கையை ஜோ பைடன் கைக்கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. தனது வாக்குறுதிகளிலிருந்து பைடன் விலகிச் செல்ல மாட்டார் என்பதே அறபு இஸ்லாமிய உலகத்தின் எதிர்பார்ப்பாகும்.