உறுதியான அடித்தளம் தாய்மொழியே

98

– முனைவர் கா. செல்லப்பா

“மொழியும் கணிதமும் அறிவுப் பாலங்கள் மட்டுமன்றி மற்ற அறிவுத் துறைகளுக்கும் வழிவகுக்கும் வாய்க்கால்கள்” என்றார் ப்ரை என்ற கனடா நாட்டு அறிஞர்.

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்று வள்ளுவர் சொன்னதும் அவற்றின் அருமை கருதி மட்டுமன்றி, அவை உலகை நமக்கு உணர்த்தும் அகவிழிகள் என்பதனால்தான். மொழி, சிந்தனையின் மூல ஊற்றாகும். மனித உறவுகளை ஆக்கும் அழிக்கும் ஆற்றல் படைத்த ஆயுதம். மட்டுமன்றி, நம்மைக் கடந்த காலத்தோடு இணைத்து, வருங்காலத்திற்கு இட்டுச் செல்லும் தொடர் சங்கிலி.

மொழி இல்லாதிருந்தால் மனிதன் காலத்தோடு அறிவைப் படிபடியாக இணைத்துப் பெருக்கி வளர்த்திருக்க இயலாது. மொழி வழியாகத்தான் அனுபவம் பதிவுசெய்யப்பட்டு விளக்கம் பெற்று விரிவடைகிறது. இறுதியாக மொழி பண்பாட்டுக் குறியீடு, தொடர் இசைக்குறி, இலக்கிய பின்னல்களில் நுலிழை. மொத்தத்தில் மொழி அறிவின் ஊற்றுக் கண்ணாகவும் உணர்வின் அடிநாதமாகவும் இருந்து ஒவ்வொருவருக்கும் அடிப்படைத் தன்னுணர்வாகவும் சமுதாய உணர்வின் அடையாளமாகவும் விளங்குகின்றது.

இத்தகைய பல்வேறு தன்மைகளைக் கொண்ட மொழி, கல்வியின் அடித்தளம் என்பதில் ஐயமில்லை. 21 ஆம் நூற்றாண்டுக்கான கல்வி பற்றி 1993 இல் யுனெஸ்கோ அமைத்த ஆணையம்,  வருகின்ற நூற்றாண்டின் சவால்களை சமாளிக்க நான்கு முக்கியக் கூறுகளை கல்வி பெற்றிருக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. அவையாவன.

அறிந்துகொள்ளக் கற்றுக் கொள்ளல் (Learn to Know)

செய்வதற்குக் கற்றுக்கொள்ளல் (Learn to Do)

உள்ளத்திற்குப் பொய்யாது இருக்கக் கற்றுக்கொள்ளல் (Learn to be)

சேர்ந்து வாழக் கற்றுக் கொள்ளல் (Learn to live together)

இந்த நான்கு குறிக்கோள்களையும் அடைய மொழிக் கல்வி இன்றியமையாதது. மொழிதான் மற்றவற்றை அறிவதற்கு வழிகாட்டி. மொழியால் செயல்பாடு செம்மைப்படும். மொழி நம்மை நமக்கு உணர்த்தி நாம் நாமாக வாழ்வதற்கு வழிகோலும். இவை அனைத்தும் தாய்மொழியால் சிறப்பாகச் செய்துகாட்ட முடியும். எனவேதான், கல்வியின் அடித்தளமாக தாய்மொழி அமைய வேண்டும் என்று கல்வியியலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

தாய்மொழியை செவ்வனே பேசவும் எழுதவும் கற்பதோடு, மொழி வழியாக ஏனைய பாடங்களைக் கற்பது மாணவரின் அறிவின் ஊற்றுக் கண்களை, உள்ளத்தின் ஒளியை வெளிக்கொணர்ந்து, சிந்தனை ஆற்றலையும் வளப்படுத்தும். தாய்மொழி வழியாகத்தான் குழந்தை தன்னையும் உலகையும் உணர்கின்றது.

வளரும் குழந்தையின் வளரும் உலகின் படைப்புப் பங்காளி. ஒருவரது உள்ளுணர்வோடு அவரது தான் என்ற தன்மையோடு நெருக்கமாக இணைந்தது தாய்மொழி. எனவே அந்த அடித்தளத்தின் ஆற்றலை அறிவுக்கு வாய்க்காலாக்குவது இயல்பான நெறியாகும். புதிய உலகச் சிந்தனைகளையும் வாழ்வின் புதிய கூறுகளையும் வெளிப்படுத்த தாய்மொழியைப் பயன்படுத்த அது அகலத் தன்மையும் நுண்ணிய வெளிக்கொணரும் ஆற்றலும் பெறுகின்றது.

சமுதாயத்தின் அடித்தளத்திற்குள் கல்வி நுழைந்து தாய்மொழி என்ற ஜீவநதியோடு இணைந்து ஒரு நிரந்தரத் தன்மையை அடையாவிட்டால் மேல்தளத்தின் நுரையோடும் குமிழியோடும் அது தற்காலிக அழகுப் பொருளாகிறதே ஒழிய நிரந்தர வாழ்வுக்கான நீருற்றாக நிலைக்க முடியாது என்பார் கவியரசர் தாகூத்.

உலகின் பல்வேறு திசைகளிலிருந்தும் உயிர்ப்புள்ள காற்று உள்ளே வர ஜன்னல் கதவுகள் திறந்திருக்க வேண்டும். அதேசேமயத்தில் என் காலடி பதிந்திருக்கும் மண்ணிலிருந்து என்னைத் தூக்கியெறிய எதையும் அனுமதியேன் என்று காந்தடிகள் கூறியதும் இந்த அடிப்படையில்தான்.