கொழும்பில் போர்த்துக் கேயர்

102

1521 இல் விஜயபாகு கொலைச் சம்பவத்திற்குப் பின்னர் கோட்டை இராச்சியம் பிளவுற்றது. அது மூன்றாகப் பிரிந்து செயற்படத் தொடங்கியது. புவனேகபாகு (1521-1551) கோட்டை மற்றும் கொழும்பின் குறிப்பிட்டளவு கடற்பிரதேசம் என்பவற்றைத் தனதாக்கிக் கொண்டான். மாயாதுன்னை (1521 – 1581) சீதவாக்கை, நான்கு கோரளைகள், தெனவக என்பவற்றை உள்ளடக்கிய சீதவாக்கை இராஜ்யத்தை உருவாக்கினான். மத்துமபண்டார ரைகம பிரதேசத்தை தன்வசம் ஆக்கிக் கொண்டான். அதனால் அவரது பெயர் ரைகம் பண்டார எனப் பிரபல்யமடைந்தது.

புவனேகபாகு தனக்குப் பின்னர் தனது பேரனாகிய தர்மபாலனுக்கு கோட்டை இராஜ்யத்தை உரிமையாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தபோது, மாயாதுன்னை அதனை ஆட்சேபித்து எதிர்த்து நின்றான். இதனால், புவனேகபாகுவிற்கும் மாயாதுன்னைக்கும் இடையே கருத்து வேறுபாடும் சொற்போரும் நிகழ்ந்தது. பின்னர் அது வேர்கொண்ட பகையாகவும் குணப்படுத்த முடியாத குரோதமாகவும் வளர்ந்தது.

ரைகம் பண்டாரவின் மரணத்தை அடுத்து ரைகம பிரதேசத்தை தன்வசம் இணைத்துக் கொண்ட மாயாதுன்னை, கோட்டை இராஜ்யத்திலும் தனது அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சித்ததாகக் கூறப்படுகின்றது. கோட்டையை சீதவாக்கை மன்னன் மாயாதுன்னை கைப்பற்றி விடுவானோ என்று அச்சமடைந்த புவனேகபாகு மாயாதுன்னையைத் தோற்கடிப்பதற்கு ஐரோப்பிய அந்நியர்களான போர்த்துக்கேயரின் படையுதவியை நாடி நின்றான். இது இலங்கையின் வர்த்தகத்தின் மீதும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கொழும்பின் மீதும் கண்ணாங்கொத்திப் பாம்பு போல் கண் வைத்திருந்த போர்த்துக்கேயருக்கு வசதியாக அமைந்துவிட்டது.

கொழும்புக்குள் எவ்வாறு ஊடுருவலாம் என்று தலையைப் பிசைந்துகொண்டிருந்த ஐரோப்பியர்களுக்கு இதுதான் நல்ல தருணம். ஏற்கனவே போர்த்துக்கேயர் ஏலக்காய், கராம்பு, சாதிக்காய், கருவா என்பவற்றில் சிறியளவு வணிகம் செய்து வந்தனர். உள்ளூர் வியாபாரத்திலும் சர்வதேச வணிகத்திலும் அன்று முஸ்லிம்கள் தனியாதிக்கம் கொண்டிருந்ததை உணர்ந்த போர்த்துக்கேயர், கொழும்பில் கால்பதிக்கவும் முஸ்லிம் வணிகத்தை உடைக்கவும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள முனைந்தனர்.

ஆறாம் விஜயபாகு ஆட்சியில் இருந்த தருணமே போர்த்துக்கேயருக்கு கோட்டையுடன் சிறியளவிலான உறவு இருந்தது. ஏனெனில், போர்த்துக்கேயர் கொழும்பு துறைமுகத்தில் வந்திறங்கியதும் கோட்டை மன்னனை சந்திப்பதற்கு தனது தூதர்களை அனுப்பி வைத்தனர். கோட்டையிலுள்ள மன்னனது அரண்மனைக்கு போர்த்துக்கேயர் தூதர்களை அழைத்துச் செல்ல தெரிவுசெய்யப்பட்ட சோனகர் அவர்களைத் திக்குமுக்காடச் செய்யும் நோக்கத்துடன் ஒரு சுற்றுவழியாக அழைத்துச் சென்றனர்.

கொழும்பிலிருந்து ஆறே ஆறு மைல் தொலைவிலுள்ள கோட்டையை அடைய, அவர்கள் மூன்று நாட்களைக் கடத்தினர். இச்சம்பவத்தை அடியொட்டியே பரங்கியர் கோட்டைக்குப் போனது போல என்ற பழமொழி சிங்களமொழியில் இன்றுவரை புழக்கத்தில் உள்ளது.

விஜயபாகு கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் லோரன்ஸ் டி அல்மெய்டா 8 ஆம் பராக்கிரமபாகுவின் அனுமதியோடு ஒரு கட்டடத்தை அதாவது ஒரு வர்த்தக நிலையத்தை இப்போது கொழும்புத் துறைமுகத்திலுள்ள தென்மேற்கு அலைமுட்டிச் சுவரின் அடிவாரமாக அமைந்துள்ள ஒடுங்கு முனையில் நிறுவினார். சில வரலாற்றாசிரியர்கள் அதனை போர்த்துக்கேயரின் கலஞ்சியசாலை எனவும் வேறு சிலர் அவர்களது கோட்டை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

லோரன்ஸ் சிலரை அந்தக் கட்டடத்தில் தங்கச் செய்துவிட்டு நல்வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டதன் பின் தனது கப்பல்களோடு இலங்கைக் கரையை விட்டு நீங்கினான். போர்த்துக்கேயரின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்ட முஸ்லிம்கள் அவர்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி அதில் வெற்றியும் பெற்றனர்.  அதன் பயனாக 1507 இல் போர்த்துக்கேயர் அந்தக் கட்டடத்தை அகற்றி விட்டனர். ஆனால், தகுந்த காலகட்டத்தில் அரண் ஒன்றை அமைக்கும் யோசனையை அவர்கள் கைவிட்டு விடவில்லை.

இச்சம்பவத்தை விளக்கும் வரலாற்றாசிரியர் லோனா தேவராஜா, முஸ்லிம்கள் கொழும்பில் அந்தளவுக்குப் பலமுள்ளவர்களாகவும் செல்வாக்குள்ளவர்களாகவும் இருந்துள்ளமையை இது காட்டுவதாகக் குறிப்பிடுகின்றார்.

(தொடரும்)