அசாதாரண நடத்தைகளுக்கான காரணங்கள்

69

கடந்த அத்தியாயங்களில் அசாதாரண நடத்தைகள் அல்லது உளமாறாட்டங்களின் சர்வதேச ரீதியான வகைப்பாடுகளையும் உப பிரிவுகளையும் நோக்கினோம். குறிப்பிட்ட உள மாறாட்டங்களுக்கான சில காரணங்களையும் குறிப்பிட்டோம். எனினும், உளமாறாட்டம் அல்லது உள நோய்களுக்கான பொதுவான காரணங்கள் குறித்து இந்த அத்தியாயத்தில் நோக்குவோம்.

மனித நடத்தைகள் குழப்பமானதாகவும் பகுத்தறிவு ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் கட்டுப்பாடற்றதாகவும் சிலபோது பிறருக்குத் தீங்கிழைக்கக் கூடியவையாகவும் மாறுகின்றபோது அதனையே நாம் அசாதாரண நடத்தைகள் அல்லது உள மாறாட்டங்கள் எனக் குறிப்பிடுகின்றோம். ஒருவரின் அசாதாரண நடத்தை அவருக்கும் பிறருக்கும் தீங்கு ஏற்படுத்துமெனின் அது பிறழ் நடத்தை அல்லது உளநோய் எனப்படுகின்றது.

உடலுக்கு நோய் ஏற்படுவதுபோன்று உளத்துக்கும் நோய் ஏற்படலாம். அதனையே நாம் உள நோய்கள், உளமாறாட்டங்கள், பிறழ் நடத்தைகள் என குறிக்கின்றோம். இதற்கு பல்வேறு காரணிகள் பங்களிக்கின்றன.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக உளவியல் துறைப் பேராசிரியர் கிலியன் கட்டர் என்பவர் பிறழ்வு நடத்தையை முதலில் மிகச் சரியாக இனங்காண வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.இயல்பானதும் இயல்பற்றதுமான நடத்தைகளை பிரித்து விளங்கிக் கொள்ளும்போதே அவற்றுக்கான காரணங்களை சரியாக இனங்காணலாம் என கிலியன் குறிப்பிடுகின்றார்.

உளவியல் மிகச் சுருக்க அறிமுகம் என்ற அவரது நூலில் பின்வரும் கருத்தை அவர் பகிர்ந்துள்ளார். “பிறழ்வு நடத்தையின் உச்சகட்ட வடிவங்களை நம்மால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், நடத்தையில் எது இயல்பு, எது இயல்பற்றது என்று துல்லியமாகப் பிரித்துக் காட்டும் கோடு அவ்வளவு தெளிவாக இல்லை.

எ-டு: உங்களுக்கு நெருக்கமான ஒருவரை இழந்தால் நீங்கள் வருத்தப்படுவது இயல்பே. ஆனால், இந்த வருத்தம் எந்த அளவுக்கு எவ்வளவு காலம் இருக்கும்? இயல்பான வருத்தம் எப்போது முடிகிறது? அதேபோல பிறழ்வு வருத்தம் அல்லது மருத்துவம் சார்ந்த மனஅழுத்தம் எங்கே தொடங்குகின்றது? உங்களுக்குக் கொடுக்கப்படும் அனைத்து பற்றுச் சீட்டுக்களையும் உங்கள் வீட்டின் ஓர் அறையில் வேறு எதற்கும் இடமில்லாத அளவுக்கு பாதுகாக்கின்றீர்கள் என்றால், அது பிறழ்வு நடத்தையாகக் கொள்ளப்படும். ஆனால் இதே பற்றுச்சீட்டுக்களை ஓராண்டு அல்லது ஈராண்டுகள் பாதுகாத்து வைத்திருந்தால் அது கூடப் பிறழ்வு நடத்தை ஆகுமா?

நம்மில் சிலர் பகுத்தறிவுக்கு ஒவ்வாத அச்சங்களை இயல்பானவை என்று கருதுகின்றனர். எ.டு சிலந்திக்கு அஞ்சுவது, பொதுக் கூட்டத்தில் பேச அஞ்சுவது முதலியவற்றைக் கூறலாம். ஆனால் இவை தீவிரமாகி, உங்கள் பணிக்குத் தடையாக இருக்கும்போது அல்லது வாழ்க்கையை அனுபவிக்க விடாமல் இருக்கும்போது இயல்பானவை எனக் கருதப்படும் நடத்தை இயல்பற்றதாகி விடுகின்றது.

பிறழ்வு நடத்தை எது என வரையறுப்பதில் பல்வேறு வழிகள் உள்ளன. பிறழ்வு நடத்தைகள் பற்றிய உளவியல் வரையறைகள் எல்லாம் நடைமுறைப் பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. ஒரு நடத்தையானது வருத்தம் தந்தாலோ முக்கிய இலக்கை அடைவதற்குத் தடையாக இருந்தாலோ அது மாறாட்ட செயற்பாட்டைக் குறிக்கின்றது. மருத்துவத்திற்கும் ஏற்புடையதாகிறது.

தமது வேதனைகளையும் பிரச்சினைகளையும் சுயமாக அறிய முடியாதவர்களுக்கு இந்த அணுகுமுறையில் சிரமம் உள்ளது. அவர்கள் தமது வேதனைக்கு தற்கொலையே தீர்வு எனக் கருதுவர். சிலருக்கு கேள்வி மற்றும் பார்வை சார்ந்த மாயப் புலன்கள் கூட ஏற்படுகின்றன. மருத்துவ வரையறைகளின் நோக்கில் பிறழ்வு நடத்தையானது மறைவாக இருக்கும் ஒரு நோயின் அறிகுறியாகும். அதன் காரணி, அறிந்தோ அறியாமலோ இருக்கலாம். அதன்படி உளநோய்களான மனச்சிதைவு, மனஅழுத்தம் அல்லது பதற்றம் ஆகியவற்றை காரணியாகக் கொண்ட நடத்தையோ பிறழ்வு நடத்தை எனக் கொள்ளப்படுகின்றது.

பிறழ்வு நிலை புள்ளியியல் மற்றும் சமூக நெறிகள் ஆகிய இரண்டைக் கொண்டும் வரையறுக்கப்படுகின்றது. புள்ளியியலின்படி பொதுவான புள்ளிகள் இல்லாமல் போனால் அந்த நடத்தை பிறழ்வு நடத்தையாகக் கருதப்படுகின்றது. இந்த அணுகுமுறை கற்க இயலாதவர்களுக்கும் உளரீதியாக ஊனமுற்றவர்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.

ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சராசரி நுண்ணறிவு ஈவிலிருந்து 2.5 வீதம் குறைந்தவர்கள் கற்க இயலாதவர்கள் என்று முடிவுசெய்யப்படுகின்றது. மனநல அடிப்படையிலான அணுகுமுறைகள் இயல்பான நடத்தைகளைக் குறிப்பிட்டுக் காட்ட முயல்கின்றது. அதனைக் கொண்டு எதிராக இருக்கும் பிறழ்வு நடத்தையை வரையறுக்க முயல்கின்றது.

மனநலம் என்பதில் பல்வேறு பண்புகள் உள்ளடங்கியிருக்கின்றன.

  1. மெய்மையை துல்லியமாகப் புலனறிவது
  2. ஒருவரின் சொந்தத் திறமைகளையும் புற உலகையும் அறிவது
  3. தன்னுடைய உணர்வுகள் மற்றும் ஊக்கிகள் பற்றிய விழிப்புணர்வு
  4. தன்னியல்பாகவும் தன்னம்பிக்கையுடனும் சுயகட்டுப்பாட்டை மேற்கொள்தல்.
  5. சுயமதிப்பு பற்றிய உணர்வு
  6. யாரையும் பாதிக்காத வண்ணம் உறவுகளைப் பேணுவது
  7. சூழ்நிலைக்கேற்ப இயைபாக்கம் பெறுவது