ஜனாஸா அடக்கம் தொடர்பில் குர்ஆனில் ஆதாரம் தேடும் கம்மன்பில

  90

  முஸ்லிம் எம்.பிகளும் உலமா சபையும் தெளிவுபடுத்தலைஉடன் வழங்க தவறியதேன்?

  மின்ஸார் இப்றாஹிம்

  இலங்கை முஸ்லிம்கள் நீண்ட காலம் கவனம் செலுத்தாதிருந்த பொறுப்பொன்று மேழெழுந்திருக்கின்றது. அது தான் அல் குர்ஆன் மற்றும் இஸ்லாம் குறித்து முஸ்லிமல்லாதவர்களுக்கு தெளிவுகளை வழங்கத் தவறியிருக்கும் பொறுப்பாகும். இந்நாட்டு முஸ்லிம்கள் நீண்ட காலமாக இப்பொறுப்பு தொடர்பில் உரிய ஒழுங்கில் கவனம் செலுத்தவில்லை. இது மறுக்க முடியாத உண்மையாகும்.

  ஆனால் முஸ்லிம் என்பவர் அல் குர்ஆன் மற்றும் இஸ்லாம் தொடர்பில் தெளிவான புரிதலையும் விளக்கங்களையும் மக்களுக்கு வழங்க வேண்டியவராவார். இருந்தும் இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தத் தவறியுள்ளமையின் விளைவாக அல் குர்ஆன் மற்றும் இஸ்லாம் குறித்து முஸ்லிமல்லாதவர்கள் மத்தியில் தவறான புரிதல் ஏற்படவும் ஏற்படுத்தப்படவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது. இதனை உகலாவிய ரீதியில் அவதானிக்க முடிகின்றது.

  இவ்வாறான சூழலில் இலங்கையின் பெரும்பான்மை மக்களும் அவர்களது தலைவர்களும் அல் குர்ஆன் குறித்தும் இஸ்லாம் தொடர்பிலும் கவனம் செலுத்தவும் படிக்கவும் ஆரம்பித்திருக்கின்றனர். ‘தாம் அல் குர்ஆனை இரண்டு தடவைகள் படித்துள்ளதாக பெற்றோலிய வள அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டிருக்கின்றார். அதுவும் பாராளுமன்றத்தில் அல் குர்ஆன் வசனங்களைக் குறிப்பிட்டு 08.01.2021 அன்று உரையாற்றியுள்ளார். இதேபோன்று ஞானசார தேரரும் குர்ஆனை குறிப்பிட்டு ஏற்கனவே கருத்துக்களை தெரிவித்திருக்கின்றார்.

  அதனால் அல் குர்ஆன் மற்றும் இஸ்லாம் தொடர்பில் விளக்கங்களை கோரும் போதும் தவறான புரிதல்கள் வௌிப்படும் போதும் உரிய தெளிவுகளை வழங்கக்கூடிய வகையில் முஸ்லிம்கள் தம்மை வளப்படுத்தி தயார்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. முஸ்லிம் என்பவர் அல்லாஹ்வின் இறைத்தூதை தௌிவாகக் கொண்டு செல்லும் பொறுப்பைச் சுமந்திருக்கின்றார். இது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரியதாகும்.

  இருப்பினும் இப்பொறுப்பை உரிய முறையில் புரிந்து கொள்ளாதவர்களாகவே பெரும்பாலான முஸ்லிம்கள் இருந்து கொண்டிருகின்றனர். ‘நாம் முஸ்லிம்’ என்று சொல்லி பெருமைப்படுகின்றனர். ஆனால் முஸ்லிம் என்பதன் மகத்துவம், சிறப்பு என்பதை மாத்திரமல்லாமல் அந்த சொல்லின் தாற்பரியத்தையும் அது உள்ளடக்கியுள்ள பொறுப்பையும் உரிய முறையில் உணர்ந்து கொள்ளத் தவறியுள்ளனர். ஆனால் அல்லாஹ்வுக்காகப் பணியாற்ற வேண்டியவன் முஸ்லிம் என்பதை எந்த சந்தர்ப்பத்திலும் மறந்து விடலாகாது.

  அந்த வகையில் அமைச்சர் உதய கம்மன்பில அல் குர்ஆனின் சூரா மாயிதாவின் சில வசனங்களைக் குறிப்பிட்டு, ‘ஜனாஸாவை (பிரேதம்) அடக்க வேண்டும் என்று குர்ஆனில் வலியுறுத்திக் கூறப்படவில்லை’ என்ற அர்த்தத்தில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார். ஆனால் அல் குர்ஆனும் முஹம்மத் (ஸல்) அவர்களது போதனைகளும் ஜனாஸா அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை மிகவும் தௌிவாகக் குறிப்பிட்டிருக்கின்றது.

  ஆனாலும் அமைச்சர் கம்மன்பில குர்ஆன் வசனங்களை குறிப்பிட்டு ஜனாஸா அடக்கம் தொடர்பில் கூறியுள்ளதால் அது குறித்து அல் குர்ஆனினதும் இஸ்லாத்தினதும் நிலைப்பாடு தொடர்பில் பாராளுமன்றத்தில் உடனடியாகத் தௌிவுபடுத்தி இருக்க வேண்டும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உட்பட பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் புத்திஜீவிகளும் இது தொடர்பில் தௌிவுகளை முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களோ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த புத்திஜீவிகளோ அமைச்சர் கம்மம்பில தெரிவித்த கருத்து தொடர்பில் ஐந்து நாட்களாகும் வரை எதுவும் கூறவில்லை. இந்த நிலையில் 12.01.2021 இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இணைய வழி செய்தியாளர் மாநாட்டிலும் இக்கருத்தை மீண்டும் தெரிவித்ததோடு முஸ்லிம் புத்திஜீவிகளோ உலமா சபையோ பதிலளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

  அமைச்சர் கம்மன்பிலவின் கருத்து தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் உலமா சபை உள்ளிட்ட பொறுப்புமிக்க புத்திஜீவிகளும் உரிய தௌிவை உடனடியாக வழங்கத் தவறியமையானது அவரது கூற்று சரியாக இருக்கலாம் என்ற கருத்தைப் பெரும்பான்மை மக்கள் மத்தியில் மாத்திரமல்லாமல் முஸ்லிம்களிடம் கூட ஏற்படுத்தலாம். இதன் பாராதூரத்தையும் பயங்கரத்தையும் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக அல் குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களது போதனைகள் தொடர்பில் உரிய தௌிவுகளை வழங்கத் தவறிய குற்றத்திற்கு முகம் கொடுக்க நேரிடும். இதனை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

  அமைச்சர் கம்மன்பில இவ்விடயத்தை தெரிவித்ததும் உரிய தெளிவை பாராளுமன்றத்திலேயே அளித்திருந்தால் அது பாராளுமன்ற ஹன்சார்ட்டில் பதிவாகி இருக்கும். உலமா சபை உள்ளிட்ட புத்திஜீவிகள் அவரது கருத்து தொடர்பில் தெளிவை வழங்கி இருந்தால் அவர் மீண்டும் இது தொடர்பில் கூற வேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்காது. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்களும் உலமா சபை உள்ளிட்ட புத்திஜீவிகளும் தௌிவுபடுத்தலை உடனடியாக வழங்கத் தவறிமை பெரும் கவலைக்குரிய விடயமாகும்.

  இதேவேளை, 20 முஸ்லிம்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர். அமைச்சர் உதய கம்மன்பில இவ்விடயத்தைத் தெரிவித்த போது முஸ்லிம் எம்.பிக்களில் ஒருவராவது ஏன் உடனடியாகத் தெளிவுபடுத்தலை மேற்கொள்ளவில்லை. அவர் இவ்விடயத்தைத் தெரிவித்த சமயம் பாராளுமன்றத்தில் முஸ்லிம் எம்.பிக்கள் எவரும் இருக்கவில்லையா? அல்லது அவர்கள் பாராளுமன்றத்தில் இருந்தும் அதற்கு பதிலளிக்காது மௌனம் காத்தார்களா? அல்லது இது தொடர்பில் தெளிவுபடுத்த போதிய அறிவு தம்மிடமில்லை என்று கருதினார்களா? என்ற கேள்விகள் பரவலாக எழுந்துள்ளன. அத்தோடு உலமா சபை உள்ளிட்ட பொறுப்பு மிக்க புத்திஜீவிகளும் கூட இது தொடர்பில் உடனடியாகத் தெளிவுபடுத்தலை மேற்கொள்ளாததற்கான காரணம் என்ன? என்பதும் புரியாத புதிராக உள்ளது.

  அல்லாஹ்தஆலா மனிதனை வரையறுக்கப்பட்ட வாழ்வுக் காலத்துடன் தான் உலகில் படைத்திருக்கின்றான். அந்த வகையில் மனிதனின் ஆரம்ப வரலாற்றில் முதல் மரணம் நிகழ்ந்த போது அம்மனிதனின் பிரேதத்தை என்ன செய்வதென்று தெரியாத நிர்க்கதி நிலைக்கு அடுத்த மனிதன் தள்ளப்பட்டான். அப்போது தான் அல்லாஹ்தஆலா காகம் ஒன்றை அனுப்பி மரணமடைந்தவரை என்ன செய்ய வேண்டும் என்பதற்கான அறிவைக் கற்றுக் கொடுத்தான். அதாவது மனிதனின் பிரேதத்தை அடக்கம் செய்வதற்கு தான் அவன் கற்றுக்கொடுத்தான். இது மரணமடைந்த முதல் மனிதனிலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது. அதனால் உலகம் இருக்கும் வரையும் ஜனாஸா தொடர்பில் மனித சமூகத்திற்கான வழிகாட்டல் அதுவேயாகும். அதனைப் பின்பற்றுவதே அவனது படைப்பான மனிதனின் பொறுப்பும் கடமையுமாகும். இதைவிடுத்து மரணமடையும் மனிதன் தொடர்பில் வேறு முறைமையைப் பின்பற்ற வேண்டும் என்றிருந்தால் அதனை அவன் அன்றே கற்றுத் தந்திருப்பான். ஆனால் அல்லாஹ் அவ்வாறு செய்யவில்லை. அத்தோடு ஜனாஸா அடக்கம் செய்யப்படுவதற்கு வலுசேர்க்கும் வகையில், மனிதனை மண்ணால் படைத்தோம், மண்ணிலேயே சேர்ப்போம். அதிலிருந்தே எழுப்பச் செய்வோம்’ என்றும் அவன் குறிப்பிட்டு வைத்திருக்கின்றான்.

  அத்தோடு நபி (ஸல்) அவர்கள், ‘சூரியன் உதிக்கும் நேரம், மறையும் நேரம் மற்றும் உச்சிக்கு வரும் நேரங்களில் தொழவோ ஜனாஸாக்களை அடக்கம் செய்யவோ வேண்டாம் (ஆதாரம் : முஸ்லிம் 1373) என்றும் ‘நீங்கள் இறந்தவர்களைப் புதைக்காமல் விட்டுவிடுவீர்களோ என்ற அச்சம் எனக்கு இல்லை என்றால் மண்ணறையின் வேதனையை உங்களுக்கு கேட்கச் செய்யுமாறு அல்லாஹவிடம் நான் பிரார்த்தனை செய்திருப்பேன் (ஆதாரம் – முஸ்லிம் 5503) என்றும் குறிப்பிட்டுள்ளார்கள. இவை மாத்திரமல்லாமல் ஜனாஸா அடக்கம் செய்யப்படுவதை வலியுறுத்தும் மேலும் பல அல் குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன. அதனால் இவை தொடர்பான தெளிவை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டும்.

  நாம் பெரும்பான்மை மக்கள் மத்தியில் வாழும் சிறுபான்மை மக்களாக இருந்தாலும் அல் குர்ஆன் மற்றும் இஸ்லாம் தொடர்பில் தெளிவான புரிதலை வழங்க வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு முன்பாக உள்ளது. இல்லாவிடில் இஸ்லாம் தொடர்பில் தவறான புரிதல் மக்கள் மத்தியில் பரவவும் பரப்பப்படவும் வாய்ப்புக்கள் ஏற்படும். அது அல்லாஹ்விடம் பெரும் குற்றமாகவும் பாவமாகவம் அமைந்துவிடும்.

  ஆகவே அல் குர்ஆன் மற்றும் இஸ்லாம் தொடர்பில் உரிய தெளிவையும் சரியான புரிதலையும் வழங்கக்கூடிய வகையில் தம்மை வளர்த்துக் கொள்வதில் முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டும். அது காலத்தின் அவசியத் தேவையாகும்.