ஆரம்பக் கல்வியில் தாய்மொழியின் அவசியம்

20

இரு மொழித் திறன் வித்தியாசமாகச் சிந்திக்கும் ஆற்றலை வளர்த்து படைப்புத் திறனை வளப்படுத்துவதாக லம்பட் எனும் கனடா நாட்டு மொழியியல் அறிஞர் கூறுகின்றார். ஆனால், அதற்காக ஆரம்பத்திலேயே எல்லாப் பாடங்களையும் ஆங்கிலத்திலேயே கற்க வேண்டும் என்பதோ குழந்தைகள் பள்ளிகளிலேயே ஆங்கிலத்தில் பேச, எழுத கற்க வேண்டும் என்பதோ அல்ல.

கம்மிங்ஸ் என்பவர் உருவாக்கிய புனை கொள்கையின்படி இரு மொழித் திறன் நற்பலனை விளைவிக்க வேண்டுமெனின் மாணவர்களின் தாய்மொழித் தளம் வலுவானதாக இருக்க வேண்டும். தாய்மொழியில் உறுதியான அடித்தளம் உருவாகி, மாணவர்கள் அதன்வழி பகுத்துச் சிந்திக்கும் ஆற்றல் பெற்ற பின் இரண்டாவது மொழியைக் கற்றால் முதல் மொழியில் வளர்த்த ஆற்றல்கள் இரண்டாம் மொழிக் கல்விக்கும் உறுதுணையாக இருக்கும். இப்படிச் செய்யும்போது “கூடுகின்ற மொழித் திறன்” உருவாகின்றது.

அதனை விடுத்து முதல் மொழியையே மாணவர்கள் சரியாக உணராத நிலையில் இன்னொரு மொழியைத் திணிப்பது குழந்தைகளின் இயல்பான சிந்தினையாற்றல்களை வளர விடாமல் தடுத்து இரு மொழிகளிலும் அரைகுறை அறிவைத் தந்துவிடுகிறது. இதனை “கழிக்கும் இருமொழித் திறன் அல்லது அரை மொழித் திறன்” எனக் குறிப்பார்கள். இந்த இரு மொழிகளுக்கும் இடையே மோதல் உருவாகி மாணவர்களின் ஆளுமைகளிலும் அது பிளவை உண்டாக்குகின்றது.

சுவீடனில் உள்ள பின்லாந்து மொழியைப் பேசுகின்றவர்கள் மற்றும் ஆங்கில நாட்டில் வெல்ஷ் மொழியைப் பேசுகின்றவர்கள் தமது தாய்மொழியைத் தாழ்வாகக் கருதி மேலோங்கியிருக்கும் மொழியைக் கற்கும்போது தம் மொழியை இழந்து விடுவோம் என்ற அடிமன அச்சத்தால் ஆதிக்க மொழியையும் நன்கு கற்க முடியாமல் தவிப்பதாகக்  கூறுவர்.

அண்மையில் கேரளத்தில் நடைபெற்ற ஓர் ஆய்வில் ஆரம்பக் கட்டத்திலிருந்து ஆங்கில மொழியிலோ மற்ற பாடங்களிலோ தாய்மொழித் தளத்தில் கற்றவர்கள் போல் நன்கு தேர்ச்சி பெறவில்லை என்று தோமஸ் என்பவர் தனது முனைவர் பட்ட ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, நம் இளம் சிறார்களுக்கு நல்ல தாய்மொழிக் கல்வியையும் தாய்மொழிவழிக் கல்வியையும் தருவது அவர்களது அறிவுப் பெருக்கத்திற்கும் நல்ல தன்னுணர்வு, பண்பாட்டுணர்வு வளர்வதற்கும் தடுமாற்றமின்றி தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதற்கும் வழிவகுக்கும்.

தாய்மொழியைப் போற்றிய நாடு வீழ்ந்ததும் இல்லை. தாய்மொழியைப் புறக்கணித்த நாடு வாழ்ந்ததும் இல்லை என்று பேராசிரியர் முத்துசிவன் கூறியுள்ளதை நினைவுகூர்வது நல்லது. அதற்காக எல்லாமே நம்மிடமிருப்பதாக எண்ணிக் கொள்வதும் தவறு. தாழ்ந்த இனம், உயர்ந்த மொழி சமைத்ததில்லை. தானாக எம்மொழியும் வளர்ந்ததில்லை எனக் குலோத்துங்கன் கூறியதையும் மனதில் கொள்ள வேண்டும்.