கொழும்பில் கோட்டை கட்ட போர்த்துக்கேயர் எடுத்த இரண்டாவது முயற்சி

34

1518 இல் போர்த்துக்கேயர் மீண்டும் கோட்டை மன்னனுடன் தமக்குரிய கோட்டை ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். முஸ்லிம்கள் தமது கோட்டை நிர்மாண முயற்சியை எதிர்த்து நிற்பதாகவும் அதற்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் கோட்டை மன்னனிடம் முறைபாடு செய்தனர். மன்னனின் சம்மதத்தை அடுத்து கோட்டை நிர்மாண வேலைகள் ஆரம்பமாகின. எனினும், முஸ்லிம்கள் மீண்டும் தடங்கல்களை ஏற்படுத்தினர். போர்த்துக்கேயரை விரட்டியடிப்பதற்கே ஒன்றுதிரண்டனர். அதனால் முஸ்லிம்களுக்கும் போர்த்துக்கேயருக்கும் இடையிலே கைகலப்புகளும் மோதல்களும் உருவாகின.

ரீ.வி. அபேசிங்க தனது “16 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் முஸ்லிம்கள்” எனும் ஆய்வுக் கட்டுரையில் இது குறித்துப் பின்வருமாறு எழுதுகிறார். கி.பி. 1518 இல் கொழும்பில் ஒரு கோட்டையை நிர்மாணிப்பதற்கு போர்த்துக்கேயர் முயற்சியெடுத்தபோது முஸ்லிம்கள் அதன் அபாயத்தை உணர்ந்தனர். கோட்டை இராஜ்ய மன்னனுக்கு போர்த்துக்கேயர் கோட்டையை நிர்மாணிப்பதானது ஓர் அறைகூவலாக இருந்தது. முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களது வணிகத்திற்கும் பொருளாதார ஸ்திரப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக விளங்கியது. இந்நிலையில், கோட்டை மன்னன் முஸ்லிம்களதும் கள்ளிக் கோட்டை மன்னன் ஸெமொரினதும் உதவியுடன் போர்த்துக்கேயரை நெருக்கத்திற்கு ஆளாக்கினர். இதன் விளைவாக 1524 இல் போர்த்துக்கேயர் அக்கோட்டையை உடைக்க நேர்ந்தது. (பக். 132)

இச்சம்பவம் குறித்து கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் வரலாற்றுத் துறை பேராசிரியர் லோனா தேவராஜா “போர்த்துக்கேயர் தமது முயற்சியைக் கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் அளவுக்கு அப்போது கொழும்பில் வாழ்ந்த முஸ்லிம்கள் பலமானவர்களாகவும் செல்வாக்குள்ளவர்களாகவும் இருந்தனர் என்கிறார்.

இந்நிலையினால் ஆத்திரமடைந்த போர்த்துக்கேயர் தமது மூர்க்கத்தனத்தை வெளிப்படுத்தத் தொடங்கினர். முஸ்லிம்களின் வீடுகள் சிலவற்றை எரித்தனர். துறைமுகப் பகுதியில் பெரும் குழிகளை வெட்டி பிரதான துறைமுகப் பகுதியிலிருந்து லோரன்ஸ் முனைப் பகுதியை துண்டித்து விட்டனர். போர்த்துக்கேயர் கொழும்பில் உருவாக்கிய இந்தக் கோட்டையை தொடக்கத்தில் கோவாவைத் தளமாகக் கொண்ட அவர்களின் படையுதவியுடனேயே பாதுகாக்க முடிந்தது. எனினும், அதனைத் தொடர்ந்தும் அவர்களால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. காரணம், முஸ்லிம்கள் தமது கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

போர்த்துக்கேயர் இலங்கை மீது ஆக்கிரமிப்பு மேற்கொள்ள வேண்டும் என்ற கனவை முஸ்லிம்கள் உடைத்து நொறுக்கினர். கொழும்பை விட்டு அவர்கள் மெது மெதுவாக பின்வாங்க வேண்டிய நிலை உருவானது. துரதிஷ்டவசமாக விஜயபாகு படுகொலைச் சம்பவமும் அதனைத் தொடர்ந்து கோட்டை இராஜ்யத்தில் ஏற்பட்ட அமளி துமளிகளும் குறிப்பாக, மன்னன் விஜயபாகுவின் மூன்று புதல்வர்களுக்கிடையில் தலைதூக்கிய மோதல்கள் போர்த்துக்கேயருக்கான வாய்ப்பை இலகுவாக்கியது.

ஏற்கனவே குறிப்பிட்டது போன்று மாயாதுன்னை கோட்டை இராஜ்யத்தில் தனது அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சித்த வேளையில் புவனேகபாகு போர்த்துக்கேயரின் உதவியை நாடினான். இது போர்த்துக்கேயருக்கான சந்தர்ப்பமாக அமைந்தது. மாயதுன்னை போர்த்துக்கேயரை ஐரோப்பிய அந்நியன் என்ற காரணத்தால் மட்டுமன்றி, வேறு சில காரணங்களுக்காகவும் வெறுத்தொதுக்கினான். கோட்டை இராஜ்யத்தில் வணிகக் சரக்குகளை போர்த்துக்கேயர் குறைந்த விலைக்கே கொள்வனவு செய்யும் வழக்கம் கொண்டிருந்தனர். மக்களுக்கு பல்வேறு வகையில் அநியாயம் இழைத்து வந்தனர். இதனால் ஏற்கனவே புவனேகபாகு மன்னனும்கூட மனமுடைந்து போயிருந்தான். இறுதியில் போர்த்துக்கேய படைவீரன் ஒருவனின் துப்பாக்கிச் சூட்டில் 7 ஆம் புவனேகபாகு இறந்துபோனான். 1551 இல் தர்மபாலன் கோட்டையின் ஆட்சியைக் கைப்பற்றினான்.

7 ஆம் புவனேகபாகுவின் மகளான சமுத்ராதேவி வீதியபண்டாரவை திருமணம் செய்திருந்தாள். சமுத்ராதேவியின் மகனான தர்மபால அவர்களது பிள்ளை என்பதால் அவன் புவனேகபாகுவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. 7 ஆம் புவனேகபாகு உயிரோடு இருந்தபோதே இளவரசன் தர்பாலவின் தங்கச் சிலையொன்றை போர்த்துக்கேயருக்கு அனுப்பி முடிசூட்டிவிட்டான். அதன் மூலம் கோட்டையின் அடுத்த ஆட்சியாளன் தர்மபாலதான் என்பதை உணர்த்தினான்.

தர்மபால கோட்டையின் மன்னரானதும் இலங்கையில் போர்த்துக்கேயர் செல்வாக்கு படிப்படியாக அதிகரித்தது. இறுதியில் தர்மபால கத்தோலிக்க சமயத்தைத் தழுவி தனது பெயரை டொன் ஜுவான் தர்மபால என மாற்றிக் கொண்டான். இச்சம்பவத்தினால் கோட்டை மக்கள் மனமுடைந்தனர். கோட்டையிலிருந்து தங்க தாதுவுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஹிரிபிட்டிய யரால தியவன நிலமே அதனை தீகவாபிக்கு எடுத்துச் சென்றான். பௌத்த பிக்குகள் மாயாதுன்னைக்கு ஆதரவளிக்கத் தொடங்கினர்.

தர்மபால கோட்டை ஆட்சியாளனாக இருந்த காலத்தில் ஒரு பொம்மையாகவே இருந்தான். சீதவாக்கை மன்னனால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் விளைவாக 1565 இல் தர்மபால கோட்டை நகரை கைவிட வேண்டி ஏற்பட்டது. இதனால் போர்த்துக்கேயரின் பாதுகாப்பின் கீழ் அவன் வாழ்ந்து வந்தான். 1580 இல் தர்மபால தனது மரண சாசனத்தின் மூலம் போர்த்துக்கேயர் கோட்டை இராஜ்யத்தை தம் வசம் ஆக்கிக் கொள்வதற்கு வகை செய்தான்.