வடகொரியாவின் அணுவாயுதம் உலக அமைதிக்கு அச்சுறுத்தலா?

26

வடகொரியா சமீபத்தில் பரிசோதனை செய்த கடல் வழியாகச் சென்று தாக்கும் ஏவுகணை கொரியாவின் தலைநகரிலிருந்து அமெரிக்கா செல்லும் அளவுக்கு தாக்கு திறன் கொண்டது என கருதப்படுகின்றது. இது சுமார் 13,000 கி.மீ. தூரம் அணுவாயுதங்களைச் சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது எனக் கூறப்படுகின்றது.

வடகொரியாவின் படிப்படியான ஆயுத முன்னேற்றம் குறித்து உலகின் பிற நாடுகளை விட ஐக்கிய அமெரிக்கா அதிகம் அஞ்சுகின்றது. உலக சமாதானத்திற்கு வடகொரியாவின் அணுவாயுத உற்பத்தியும் தொலைதூரம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளும் (Ballistic Missiles) உலக அமைதிக்கு மிக ஆபத்தானது என்றும் வொஷிங்டன் கூறி வருகின்றது.

ட்ரம்பின் பதவிக் காலத்தில் வடகொரிய ஜனாதிபதி கிங் ஜொங்கை தாஜா செய்வதற்கு அவர் சிங்கப்பூரில் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். அதன் மூலம் அமெரிக்கா மீது வடகொரியா நடத்தவிருந்த தாக்குதல் தனது ராஜதந்திர திறமையால் தடுக்கப்பட்டது என்று புகழுரை செய்தார்.

வடகொரியாவின் ஆயுதத் துறை முன்னேற்றம் என்பது ஓர் உலக யதார்த்தமா அல்லது அமெரிக்கா கட்டமைக்கும் ஒரு அரசியல் விம்பமா என்ற கேள்விக்கப்பால், வடகொரியாவின் அணுவாயுதம் மாத்திரம்தான் உலக அமைதிக்கு அச்சுறுத்தலா என்ற கேள்வியையும் நாம் எழுப்ப வேண்டியுள்ளது.

ஜோ பைடன் ஜனாதிபதியானதும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக எதிர்கொள்ள இருக்கின்ற பாரிய சவால்கள் குறித்து ஓர் ஆய்வறிக்கையொன்றை அவர் கோரியிருந்தார். அதில் வடகொரியாவை எதிர்கொள்வதே வொஷிங்டனுக்குள்ள மிகப் பெரிய சவால் என்றும் ஜோ பைடன் அதனைக் கடந்துசெல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அணுவாயுதப் பரவல் தடை (Nuclear Non Proliferation Treaty) குறித்த விவாதம் நடைபெறுவது வழக்கம். இவ்வருடம் நடைபெறவுள்ள விவாதத்தில் வடகொரியா விவகாரமே பேசுபொருளாக்கப்படவுள்ளது.

1939 இல் அல்பேர்ட் ஐன்ஸ்டீன் எனும் பௌதிகவியல் விஞ்ஞானி அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ப்ரான்க்லின் ரூஸ்வெட்டுக்கு எழுதிய ரகசிய கடிதமொன்றில் அணுசக்தியை ஆயுதம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தலாம் என்ற உண்மையை வெளிப்படுத்தியிருந்தார். இவ்வுண்மையை ஏற்றுக்கொண்ட வொஷிங்டன், யுரேனியத்தை செறிவாக்கி 1945 ஜூலை 16 இல் நியூ மெக்சிகோ பாலைவனத்தில் அணுவாயுதப் பரிசோதனையை நடத்தி முடித்தது.

அதே ஆண்டு ஆகஸ்ட் 06 இல் தனது பெறுமதி வாய்ந்த பேர்ல்ஸ் துறைமுகம் மீது ஜப்பானிய விமானப் படை தாக்குதல் நடத்தியது என்று காரணம் காட்டி அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமென் மிகச் செறிவாக ஒருங்கிணைக்கப்பட்ட யுரேனியம் மற்றும் புலூட்டோனியத்தை ஜப்பானின் இரு நகரங்களான ஹிரோஷிமா, நாகசாக்கி மீது வீசினார். இத்தாக்குதல்களில் சுமார் 200,000 ஜப்பானியர்கள் சாம்பலாகினர். அடுத்து வந்த அரை நூற்றாண்டிற்கு அதன் தாக்கம் அங்கு நீடித்தது.

75 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவே அணுவாயுதங்களை முதலில் தயாரித்தது. முதன் முதலில் உலக வரலாற்றில் அத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்தியதும் வொஷிங்டனே. 1945 இற்குப் பின்னர் வேறெந்த நாடும் அதனைப் பயன்படுத்தவில்லை. ஆனால், போட்டி போட்டுக் கொண்டு அதனைத் தயாரிக்க விளைந்தன.

1970 களில் வொஷிங்டனுக்கும் மொஸ்கோவுக்கும் இடையிலான பனிப்போர் உக்கிரமடைந்தபோது அவற்றின் கட்டுப்பாட்டிலிருந்த நேச நாடுகளும் ஆயுதத் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டன. வொஷிங்டனும் மொஸ்கோவும் அதற்குத் தேவையான முழு ஆதரவையும் வழங்கின. பேரழிவு தரும் ஆயுதங்கள் எனக் கருதப்படும் உயிரியல், இரசாயன, கதிர்வீச்சு, அணுவாயுதங்கள் இன்றைய மிகப் பெரும் வல்லரசுகள் எனக் கருதப்படும் நாடுகளால் உற்பத்தி செய்து குவிக்கப்பட்டன.

ரஷ்ய ஆதிக்கத்திலிருந்த கம்யூனிஸ நாடுகள், அமெரிக்கக் கட்டுப்பாட்டிலிருந்த நேட்டோ ஒப்பந்த நாடுகள் என ஆயுதங்களே தமது மிகப் பெரும் பலம் என்று நம்பியதனால் எல்லை கடந்த ஆயுதக் குவிப்பில் ஈடுபட்டன. அமெரிக்காவின் ஆதிக்கம் ஐரோப்பாவில் நிலையூன்றிவிடக் கூடாது எனக் கருதிய பிரிட்டன் அணுவாயுத உற்பத்தில் ஈடுபட்டது. அதைக் கண்டு அச்சமடைந்த எல்லைப்புற நாடான பிரான்ஸ் அணுவாயுத உலைகளை நிறுவியது.

மத்திய கிழக்கில் அறபு நிலங்களை விழுங்கி உருவான இஸ்ரேல் வொஷிங்டனின் உதவியுடன் அணுவாயுதத்தை உற்பத்தி செய்து வைத்திருக்கின்றது. இந்திய துணைக் கண்டத்தில் பாம்பும் கீரியும் போன்று செயல்படும் பாகிஸ்தானும் இந்தியாவும் தமது பங்கிற்கு அணுவாயுதங்களைக் கையிருப்பில் வைத்துள்ளன.

இன்று தெற்காசியாவை மெது மெதுவாக மேய்ந்து வரும் சீனா தன்னிடம் 420 அணுகுண்டுகளை வைத்துள்ளது. இந்தப் பட்டியலில் இப்போது வடகொரியா இணைந்துள்ளது. ஆயினும் அதனிடமுள்ள மொத்தக் குண்டுகள் 60 என்றே கருதப்படுகின்றது. எவ்வாறாயினும், வருடாந்தம் சராசரியாக மூன்று அணுகுண்டுகளைத் தயாரிக்கும் வலிமை அதனிடம் உள்ளது என நம்பப்படுகின்றது.

கடந்த 75 ஆண்டுகளில் அணுவாயுதப் பெருக்கம் சர்வதேச அளவிலும் பிராந்திய அளவிலும் நாடுகளுக்கிடையே பெரும் பதற்றத்தைத் தோற்றுவித்து வந்துள்ளது. இக்கால இடைவெளியில் 8 நாடுகளிடம் அணுவாயுதம் இருப்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. 9 ஆவது நாடாக வடகொரியா உருவெடுத்துள்ளது. 10 ஆவது நாடாக ஈரானியக் குடியரசு மாறுமா என்ற அச்சம் பிராந்தியத்தில் நிலவுகின்றது. ஆனால், அது இன்று வரை ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.

பாகிஸ்தானியர்கள் பட்டினியால் உயிர் துறந்தாலும் பரவாயில்லை. இந்தியாவை எதிர்கொள்வதாயின் அணுவாயுதப் பலம் இன்றியமையாதது என பாகிஸ்தான் ஒரு முறை கூறியிருந்தது.

அமெரிக்காவும் ரஷ்யாவும் கொண்டுள்ள 500 ஏவுகணைகளே முழு உலகத்தையும் அழிக்கப் போதுமானது எனக் கருதப்படும் இன்றைய நாட்களில் முழு உலகத்திற்கும் அணுவாயுதம் மிகப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. குறிப்பாக, வடகொரியா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமெரிக்காவை இலக்கு வைக்கலாம் என்ற ஓர் உள்ளார்ந்த பயம் வொஷிங்டனுக்கு வந்து விட்டது. வடகொரியாவின் தொழிலாளர் கட்சி 50 ஆவது நிறைவாண்டு விழா கடந்த வருடம் ஒக்டோபரில் வடகொரிய தலைநகரில் நடைபெற்றபோது ஜனாதிபதி கிம் ஜொன் அமெரிக்கா தன்னுடைய மிகப் பிரதான எதிரி என்றும் அதனை எதிர்கொள்வதற்கான சக்தி தன்னிடம் உள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

அணுவாயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து 2003 இல் தன்னிச்சையாக வெளியேறிய வடகொரியா, அணுவாயுதப் பரிசோதனையில் தீவிரமாக இறங்கியது. வடகொரியாவின் அணுவாயுத உற்பத்திக்கு பழைய கம்யூனிஸக் கூட்டாளிகளான சீனாவும் ரஷ்யாவுமே ஆதரவளித்தன. வொஷிங்டன் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று வடகொரியா கூறி வருகின்றது.

2006 ஆம் ஆண்டில் ஒரு பரிசோதனையை மேற்கொண்ட வடகொரியா 2009 இல் மூன்று அணுவாயுதப் பரிசோதனைகளையும் 2013 இல் நான்கு பரிசோதனைகளையும் 2016 இல் 14 அணுவாயுதப் பரிசோதனைகளையும் நடத்தியது. வடகொரியாவின் அணுவாயுதப் பரிசோதனை நடவடிக்கையில் 2017 ஆம் ஆண்டு ஒரு மைல்கல்லாகும். அந்த ஆண்டில் வெப்பவியல் அணுகுண்டு (Thermos Nuclear Bomb) ஒன்றை வடகொரியா பரிசோதனை செய்தது. அதன் எடை 370 கிலோ டொன் ஆகும். அதாவது 1945 இல் ஹிரோஷிமா நாகசாகி மீது அமெரிக்காவினால் போடப்பட்ட அணுகுண்டை விட இது ஆறு மடங்கு வீரியம் கொண்டது எனக் கருதப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் உள்ளச்சம் அதிகரித்துள்ளது.

வொஷிங்டனின் அச்சத்தை அதிகரிக்கக் கூடிய வடகொரியாவின் மற்றொரு ஆயுத முன்னேற்றம் குறித்தும் இங்கு குறிப்பிடுவது பொருத்தம். அணுவாயுதம் மட்டுமன்றி, பேரழிவு தரக்கூடிய பிற ஆயுதங்களும் வடகொரியாவிடம் தாராளமாக உள்ளது என்பதே பிரச்சினை. அதுவே அமெரிக்காவுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்துகின்றது.

1980 களிலிருந்து வடகொரியா உயிரியல் ஆயுதங்களையும் கதிர்வீச்சு ஆயுதங்களையும் இரசாயன ஆயுதங்களையும் பெருமளவு உற்பத்தி செய்து வந்துள்ளது. இவை எல்லாவற்றுக்கும் அப்பால் தொலை தூரம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனை அமெரிக்காவை விட முன்னேற்றகரமானது என்று ஆயுதத் துறை ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

தொலைதூரத்தை படிப்படியாக அதிகரித்து தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஏவுகணைகளை உற்பத்தி செய்வதில் வடகொரியா மகத்தான வெற்றியை ஈட்டியுள்ளது. சமகால ஆயுதத் தொழில்நுட்பத் துறையில் அமெரிக்கா உள்ளிட்ட பிற வல்லரசுகளை விஞ்சும் அளவுக்கு இன்று வடகொரியா தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது.

இராணுவப் பலத்தையும் பெருவாரியாக அதிகரித்துள்ளது. நிலையான போர் வீரர்கள் சுமார் 1 மில்லியன் பேர் வடகொரியாவில் உள்ளனர். மட்டுமன்றி, தற்காலிக இராணுவம் 5 மில்லியன் பேர் உள்ளனர். வெறும் 60 கி.மீ. தொலைவிலுள்ள தென்கொரியாவின் தலைநகர் சியோலையும் அங்குள்ள அமெரிக்கத் தூதரகத்தையும் தாக்கியழிப்பதற்கு வடகொரியாவுக்கு ஒருசில வினாடிகளே போதுமானது. வடகொரியாவிடம் 5000 டொன் இரசாயன ஆயுதங்கள் கையிருப்பில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

வடகொரியாவை இந்த நிலைக்குக் கொண்டு வந்தது யார் என்பதே முக்கிய கேள்வியாகும். உலகில் முதன் முதலில் அணுவாயுதத்தைத் தயாரித்த வொஷிங்டனே வடகொரியாவின் முன்னோடி என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இரண்டாவது, மொஸ்கோவுக்கும் வொஷிங்டனுக்கும் இடையில் நடந்துகொண்டிருந்த பனிப்போரின் பக்க விளைவே வடகொரியாவின் இந்த வளர்ச்சியாகும். கொரியாவை தனது தனிப்பிட்ட முதலாளிய, சோசலிஸ, அரசியல் பொருளாதார, வர்க்க நலன்களுக்காக மொஸ்கோவும் வொஷிங்டனும் துண்டாடியது. வடகொரியா முன்னைய சோவியத் ஒன்றியத்தின் நாடாகவும் தென்கொரியா வொஷிங்டனின் நாடாகவும் என இரு கூறாக்கப்பட்டன. வியட்நாம் இணைந்தது போன்று, யெமன் இணைந்தது போன்று ஜேர்மன் இணைந்தது போன்று இன்றுவரை இணையாமல் இருக்கும் ஒரே நாடு வடகொரியாவும் தென்கொரியாவுமே. இதற்கான முழுப் பொறுப்பும் வொஷிங்டனைச் சாரும்.

மூன்றாவது விடயம், நடைமுறையிலுள்ள அணுவாயுதப் பரவல் தடை ஒப்பந்தம் ஒரு நேர்மையற்ற ஒப்பந்தமாகும். அதன் விளைவாகவே 2003 இல் வடகொரியா அதிலிருந்து தன்னிச்சையாக வெளியேறியது. அணுவாயுதங்களை வல்லரசுகள் வைத்திருந்தால் அதற்கு தேசிய பாதுகாப்பு என்று பெயர். பிற நாடுகள் வைத்திருந்தால் அது அரச பயங்கரவாதம் அல்லது பிராந்திய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் என்பது போலவே வல்லரசுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பிழையான வாதத்திற்கு வடகொரியா பதிலளித்துள்ளது.

ஏற்கனவே அணுவாயுதங்களை வைத்திருப்பவர்கள் அதனைக் கையிருப்பில் வைத்திருப்பது சட்டபூர்வமானது. புதிதாக உற்பத்தி செய்வது சட்ட விரோதமானது என்றே வொஷிங்டன் கூறிவருகின்றது. அணுசக்தி ஆயுதத் தயாரிப்புக்காக மட்டுமன்றி சக்தி வளம் (Energy) மற்றும் தொழில்நுட்பத் தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. விறகு, நீர், எரிவாயு, பெற்றோலியம் என்பன படிப்படியாகத் தீர்ந்து வருவதனால் மாற்று சக்தி மூலங்களை நோக்கி வளர்முக நாடுகள் செல்ல வேண்டியுள்ளது. ஒரு நாட்டின் தலாவீத வருமானம் அதிகரித்துள்ளது என்பதன் அர்த்தம் சக்தி நுகர்வு வீதம் அதிகரித்துள்ளது என்பதுதான். அணுவாயுதப் பரவல் தடை ஒப்பந்தம் என்ற பெயரில் அணுவாற்றலை சக்தி வளத் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதையும் வல்லரசுகள் தடுப்பதற்கு ஒரு கருவியாக அணுவாயுத ஒப்பந்தங்களைப் பயன்படுத்துகின்றன. வடகொரிய இதிலிருந்து விலகிச் செல்கின்றது அவ்வளவுதான்.

வடகொரியாவின் அணுவாயுதம் மட்டுமே உலக அமைதிக்கு அச்சுறுத்தல் அல்ல. வல்லரசுகள் அனைத்திடமிருக்கும் அணுவாயுதங்களும் சர்வதேச சமூகத்திற்கு அச்சுறுத்தலே. வொஷிங்டன் வடகொரியாவுக்கு அளவுக்கு மீறி அஞ்சுவதற்குக் காரணம் உண்டு. ஏனெனில் அது 120 நாடுகளில் 750 இராணுவத் தளங்களைப் பராமரித்து வருகின்றது. தென்கொரிய தீபகற்பத்தில் மாத்திரம் 28,000 அமெரிக்கப் படையினர் நிலை கொண்டுள்ளனர். வடகொரியாவின் ஏவுகணைகள் எந்த நேரத்திலும் சட்டவிரோதமாக நிலைகொண்டுள்ள அமெரிக்க இராணுவத்தின் மீது திரும்பலாம் என்று அது உள்ளூர அஞ்சுகின்றது.

அணுவாயுதக் களைவில் ஒரேயொரு தீர்வுதான் உள்ளது. ஒன்பது நாடுகளும் தமது கையிருப்பிலுள்ள அணுகுண்டுகளை அழித்து விடுவதுதான் அந்தத் தீர்வு. இதற்கு வல்லரசுகள் தயாராகுமா என்பதே இப்போதைக்குள்ள கேள்வியாகும்.

நாடுகள் கையிருப்பிலுள்ள அணுகுண்டுகளின் எண்ணிக்கை
ரஷ்யா 8500
ஐக்கிய அமெரிக்கா 7000
சீனா 420
பிரான்ஸ் 350
பிரிட்டன் 200
இஸ்ரேல் 200
இந்தியா 100

 

வடகொரிய ஏவுகணைப் பரிசோதனை

ஏவுகணைகள் தாக்குதிறன் (தூரம்)
The Hwasung-12 4500 கி.மி
The Hwasung-14 10,000 கி.மி
The Hwasung-15 13,000 கி.மி
Submarine Ballistic Missile 14,000 கி.மி