மன்னார் மாவட்ட மக்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை.

22

மன்னாரைப் பொறுத்தமட்டில் சமூகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதனால் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்குமாறு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.வினோதன் இவ்வாறு பொதுமக்களை வேண்டியுள்ளார். மன்னார் மாவட்டத்தில் இதுவரை நூற்றுக்கு 4.7 வீதமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (08) மன்னார் மாவட்டத்தில் 11 நபர்கள் புதிதாக கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பரிசோதனைகள் கடந்த வெள்ளிக் கிழமை (05.02.2021) மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த 11 பேரில் 07 நபர்கள் ஏற்கனவே கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களாகவும் ஒருவர் அரிப்பு பிரதேசத்தில் மீன்வாடி நடத்தி வருவதாகவும் மூன்று நபர்கள் முசலி பிரதேச சபையில் கடமையாற்றுபவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இவர்களுடன் சேர்த்து இந்த வருடத்தில் மொத்தமாக 190 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 40 நபர்கள் மன்னார் பொது வைத்தியசாலையிலிருந்தும் 150 நபர்கள் சமூகத்திலிருந்தும் இருந்தே கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இம்மாதம் 25 தொற்றாளர்களும் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரை கொரோனா தொடங்கியதிலிருந்து 207 தொற்றாளர்கள் மன்னாரில் இனம் காணப்பட்டுள்ளனர். அதாவது நூறு பிசிஆர் பரிசோதனைகளுக்கு 4.7 தொற்றாளர்கள் மன்னாரில் சமூகத்தில் இனம் காணப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுவரை மன்னாரில் மொத்தமாக 8962 பிசிஆர் பரிசோதனைகள் மன்னாரில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெப்ரவரி 01 திகதியிலிருந்து ஞாயிற்றுக்க கிழமை (07) வரை 334 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நோயாளர்கள் மற்றும் வயோதிபர்களை இவ் நோய் அதிகமாக தாக்கும்போது மரணங்கள் எற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

இத்துடன் கொரோனா தடுப்பு ஊசி சுகாதார துறையினர்களுக்கு நிறைவடைந்துள்ளது. 91 வீதமானவர்களுக்கு இவ் தடுப்பு ஊசிகள் ஏற்றப்பட்டுள்ளன. இவர்களுக்கான இரண்டாவது தடுப்பு ஊசிகள் நான்கு வாரங்களுக்குப் பின்னர் ஏற்றப்படும்.

இதேவேளையில் பொலிசாருக்கு சுகாதார துறையினரால் முதல் கட்டமாக 70 பேருக்கு திங்கள் கிழமை (08.02.2021) போடப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு தினங்களில் அறுபது வயதுகளுக்கு மேற்பட்டவர்களுக்கு முப்பது தொடக்கம் அறுபது வரையான வேலை செய்வோருக்கும் இவ் தடுப்பு ஊசிகள் வழங்கப்படும் செயல் திட்டம் மன்னார் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றன என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார்.