போர்த்துக்கேயர் மாயாதுன்னை போர்களில் முஸ்லிம்கள்

100

ஏற்கனவே இந்த அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்டது போன்று விஜயபாகு படுகொலைக்குப் பின்னர் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களில் ஒன்று சீதவாக்கை ராஜ்யத்தின் தோற்றமாகும். முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்த கொழும்புப் பிரதேசம் கோட்டை ராஜ்யத்தின் கீழிருந்தது. புவனேகபாகு அதனைக் கட்டுப்படுத்தி வந்தான்.

1521 இல் விஜயபாகு கொலை நிகழ்ந்ததன் பக்கவிளைவாக சீதவாக்கை தோற்றம் பெற்றது. தற்போதைய அவிஸ்ஸாவெல்ல நகருக்கு அண்மையில் களனி கங்கையின் ஆற்றுப் படுக்கையை அண்டிய பிரதேசமே சீதவாக்கை என்ற சாம்ராஜ்யமாக உருவாக்கப்பட்டது. இது ஏற்கனவே விஜயபாகுவின் காலத்தில் கோட்டை இராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீதவாக்கையை மன்னன் மாயாதுன்னை உருவாக்கினான். அவன் புவனேகபாகுவின் ஆட்சிக்குட்பட்ட கோட்டை இராஜ்யத்தில் போர்த்துக்கேயர் ஊடுருவுவதை மூர்க்கமாக எதிர்த்து நின்றான். அந்நியப் படையெடுப்பில் நாடு பெரும் ஆபத்தைச் சந்திக்கும் என எண்ணியதனால் மாயாதுன்னைக்கு ஆதரவாக முஸ்லிம்களும் களமிறங்கினர்.

போர்த்துக்கேயர் அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் என்பதால் மட்டும் மாயாதுன்னை அவர்களை எதிர்க்கவில்லை. மாறாக, அவர்கள் உள்ளூர் மக்களை ஏமாற்றிச் சுரண்டுவதையும் அடக்குவதையும் அவன் நன்கு அறிந்து வைத்திருந்தான். இதனால், முழு நாட்டையும் அவர்கள் கைப்பற்றி விடுவார்கள் என்று அச்சமடைந்த அவன், கடைசிவரை போர்த்துக்கேயரை எதிர்த்துப் நின்றான். இதனால் ஒன்றன் பின் ஒன்றாகப் பல போர்களை அவன் நடத்த வேண்டியிருந்தது. சிலபோது அவன் அடைந்த தோல்விகள் அவனைச் சோர்வடையச் செய்யவில்லை. காரணம், அவனால் மேற்கொள்ளப்பட்ட அத்தனை போர்களிலும் முஸ்லிம்கள் அவனுக்குப் பக்க பலமாகவும் போர் வீரர்களாகவும் நின்று ஒத்துழைப்பு வழங்கினர்.

சீதவாக்கை மன்னன் மாயாதுன்னைக்கும் கோட்டை ராஜ்ய மன்னன் புவனேகபாகுவுக்கும் இடையே மோதல் தொடங்கியபோது நீண்டகாலமாக கோட்டை இராஜ்யத்தில் வாழ்ந்த முஸ்லிம்களுடன் நல்லுறவைப் பேணி வந்த புவனேகபாகு போர்த்துக்கேயருடன் கொண்ட புதிய உறவினால் முஸ்லிம்கள் மீதான அனுதாபத்தை கைவிடத் தொடங்கினான்.

வியாபாரத்தில் செல்வாக்குச் செலுத்திய முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அவன் தொடக்கத்தில் தயங்கியபோதும், பின்னர் போர்த்துக்கேயரின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்தான். போர்த்துக்கேயர் கோட்டையிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்று புவனேகபாகுவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இசைந்தான். இதனால், 1526 இல் முஸ்லிம்கள் கோட்டை இராஜ்யத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். அதற்கான கால அவகாசம் மூன்றே மூன்று நாட்கள் என அறிவிக்கப்பட்டது.

இச்சூழலைப் பயன்படுத்தி சீதாவாக்கை மன்னன் மாயாதுன்னை கோட்டையிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை தனது ராஜதானியில் குடியமர்த்தினான். முஸ்லிம்களைப் படைவீரர்களாகப் பயன்படுத்தலாம் எனவும் அவர்கள் மூலம் வெளிநாடுகளிலிருந்து படையுதவியைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவன் கருதியமையே முஸ்லிம்களை அவ்வாறு குடியமர்த்தியமைக்கான காரணங்கள் எனக் கூறப்படுகின்றது.

அதேவேளை, இக்காலப்பகுதியில் தென்னிந்தியாவின் கள்ளிக் கோட்டையை ஆண்டு வந்த மன்னன் செமரினிடமிருந்து படைக் கல உதவிகளைப் பெற்றுத் தரக் கூடிய அரசியல் தூதுவர்களாகவும் முஸ்லிம்களைப் பயன்படுத்த முடியும் என்று மாயாதுன்னை எண்ணினான்.

சீதாவாக்கை மீதும் போர்த்துக்கேயர் தாக்குதல் நடத்தினர். எனினும், அவர்களை எதிர்த்துப் போராடுவதற்கு மாயாதுன்னை முஸ்லிம்களைப் பயன்படுத்தினான். மாயாதுன்னையின் மரணத்திற்குப் பின்னர் அவனது மகன் டிங்கிரி பண்டார முதலாம் இராஜசிங்கன் என்ற பெயரில் சீதாவாக்கையின் ஆட்சியைக் கையேற்றான். டிங்கிரி பண்டாவின் ஆட்சிக் காலம் முடியும்வரை அவன் ஒன்றன் பின் ஒன்றாக போர்த்துக்கேயருக்கு எதிராக யுத்தம் செய்துகொண்டிருந்தான்.

இவ் யுத்தங்கள் அனைத்திலும் போல் முஸ்லிம்கள் பங்குகொண்டனர். போர்த்துக்கேயர் கொழும்பில் நிர்மாணிக்க முனைந்த கோட்டையை முதலில் எதிர்த்தவர்கள் முஸ்லிம்களே. அதேவேளை, புவனேகபாகு உதவிக்கழைத்த போர்த்துக்கேயரை மாயாதுன்னையின் படையுடன் இணைந்து எதிர்த்து நின்றவர்களும் முஸ்லிம்களே.

கள்ளிக் கோட்டையிலிருந்து போர் அனுபவம் பெற்ற பச்சி மரிக்கார், குஞ்சலி மரிக்கார், அலி இப்றாஹீம் ஆகியோரை இலங்கைக்கு வரவழைத்து மாயாதுன்னையின் பக்கம் நின்று போராடுவதற்கு வசதி செய்தவர்களும் முஸ்லிம்களே.