தெற்காசியாவில் நிகழும் நவீன பனிப்போர்

93
  • கலாநிதி றவூப் ஸெய்ன்

ஆசியாவே உலகில் மிகப் பெரிய கண்டம். 458 கோடி மக்கள் வாழும் இக்கண்டத்தில் 51 நாடுகள் அமைந்துள்ளன. 11,000 கி.மீ. நீளமும் 8500 கி.மீ. அகலமும் கொண்ட இக்கண்டம் பல் கலாசாரம், பல்மொழி, பல்மதங்களுக்கு பெயர் போனது. மத்தியாசியா, தென்மேற்கு ஆசியா, கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசியா ஆகிய ஒவ்வொன்றும் புவி அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஒரு நாட்டின் பௌதிக இருப்பும் அமைவிடமும் அதன் புவியியல் தோற்றப்பாடும் அதில் அடங்கியுள்ள பொருளாதார வளங்களும் தேசிய அரசியலிலும் பிற நாடுகளுடனான வெளிநாட்டுக் கொள்கையிலும் எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்பதை அணுகும் முறையே புவியரசியல் எனப்படுகின்றது.

தெற்காசியாவில் 8 நாடுகள் உள்ளன. மாலைதீவு, பூட்டான், இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தியா என சனத்தொகை மற்றும் பரப்பு என்பவற்றில் மேற்குறித்த நாடுகள் ஏறு வரிசையில் அமைந்துள்ளன. இன்று இந்நாடுகளின் உள்ளக அரசியலிலும் பொருளாதார நிலைமைகளிலும் பாதுகாப்புத் துறையிலும் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் அல்லது சக்திகள் எவை என்பது உன்னிப்பாக நோக்கத்தக்கது.

பெரும்பான்மையான இந்நாடுகளின் பொருளாதாரம் பின்னடைந்துள்ளது. ஒரு சில நாடுகளின் அரசியல் ஸ்திரம் குலைந்து போயுள்ளது. ஜனநாயகத்திற்கு சவால் விடுக்கும் முறைமுக இராணுவ சர்வதிகாரமும் மன்னராட்சியும் கூட சில நாடுகளில் மேலோங்கியுள்ளது.

மிகப் பெரிய நாடான இந்தியா பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளைக் கட்டுப்படுத்துவதில் முனைப்பான கவனம் செலுத்தி வருகின்றது. எவ்வாறாயினும், தெற்காசியப் பிராந்தியத்திற்கு வெளியே உள்ள சில நாடுகள் தெற்காசியாவை இராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் கட்டுப்படுத்துவதிலும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதிலும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட மூலோபாயங்களை பின்பற்றுகின்றன.

தெற்காசியாவின் அரசியல் பொருளாதாரம், மிக மோசமாக பின்னடைந்திருப்பதற்கும் வெளிநாட்டுத் தலையீடுகள் முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது. இந்த வகையில் தெதற்காசிய நாடுகளை வளைத்துப் போடும் அதிகார விளையாட்டில் பிராந்திய நாடான இந்தியா பிராந்தியத்திற்கு வெளியில் சீனா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா என்பனவும் களமிறங்கியுள்ளன.

உலகப் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் சீனாவின் பிடி இப்பிராந்தியத்தில் மிகவும் இறுக்கமாக உள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, தாய்வான், மாலைதீவு ஆகிய நாடுகளை சீனா கட்டுப்படுத்தி வருகின்றது. சீனாவின் நில விஸ்தரிப்பு காஷ்மீர் வரை நீண்டுள்ளது. காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலும் இன்னொரு பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டிலும் இருக்க, குறிப்பிட்ட ஒரு சிறுபகுதியை சீனா கட்டுப்படுத்தும் அளவுக்கு சீன எல்லை விஸ்தாரம் இந்தியாவின் எல்லைக்கு வந்துவிட்டது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டம் அதிகரித்து வருகின்றது.

பதிலுக்கு இந்தியாவும் பங்களாதேஷ், இலங்கை, மாலைதீவு என்பவற்றை தனது அணியில் இணைத்துக் கொள்வதற்கும் அவற்றைத் தனது ஆதிக்கத்தில் வைத்துக் கொள்வதற்கும் பகீரதப் பிரயத்தனத்தில் இறங்கியுள்ளது.

தெற்கு, தென்கிழக்காசியாவில் இன்று ஒரு நவீன பனிப்போர் ஆரம்பித்துள்ளது. ஒரு புறம் சீனாவின் தலைமையில் பாகிஸ்தான், பங்களாதேஷ், தாய்வான், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, ஈரான் ஆகியன அணிசேர்ந்துள்ளன. மறுபுறம் அமெரிக்கத் தலைமையில் அவுஸ்திரேலியா, இந்தியா, இஸ்ரேல், சவூதி, பஹ்ரைன், அறபு அமீரகம் என்பன தெற்கு தென்கிழக்காசிய அரசியல் பொருளாதாரத்தில் இன்னொரு அணியாக செயற்பட்டு வருகின்றது.

பாரதீய ஜனதா கட்சியின் துணைக்கண்ட வெளிநாட்டுக் கொள்கை கடல் பிராந்திய வெளிப்படைத் தன்மையுள்ள திட்டம் எனப்படுகின்றது. (Maretine Transparency Initiative) அதாவது தெற்காசியாவின் கடல் பிராந்தியம் குறித்த அணுகுமுறை வெளிப்படைத் தன்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்பது நரேந்திர மோடியின் வெளிநாட்டுக் கொள்கையாகும். தெற்காசிய நாடுகளின் துறைமுகங்கள் பிராந்திய நாடுகளின் பொருளாதாரத்திலும் உலகப் பொருளாதாரத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதனால் சீனா போன்ற ஒரு தனிநாடு இத்துறைமுகங்களைக் கட்டுப்படுத்துவதை இந்தியா ஏற்றுக்கொள்ளாது. இக்கொள்கையின் அடிப்படையில் இலங்கை மற்றும் மாலைதீவு போன்றவற்றுடன் கடல் பிராந்திய விழிப்புணர்வு மூலோபாயம் (Maritine Domain Awareness Strategy) எனும் மூலோபாயத் திட்டத்தை இந்தியா கடைப்பிடித்து வருகின்றது.

குறிப்பிட்ட இந்நாடுகளுடன் கடல்சார் ஆராய்ச்சி ஒழுங்கிணைப்பு நிலையங்களை நிறுவி துறைமுக மற்றும் கடல் பிராந்தியங்களில் வெளிநாடுகளின் தலையீடு பற்றிய விழிப்பை டில்லி அரசாங்கம் இற்றைப்படுத்தி வருகின்றது.

தென்னிலங்கையிலுள்ள ருஹுனு பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீனா அரசாங்கமும் இத்தகைய கடலாராய்ச்சி நிலையத்தை நிறுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் திருகோணமலை, புல்மோட்டை, பரந்தன், என்பவற்றின் மீது இந்திய ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்தல் என்ற பெயரில் குறிப்பிட்ட காலம் தனது வர்த்தகத்திற்கான இறங்கு துறையாகப் பயன்படுத்துவதற்கு இந்தியா முயற்சிக்கின்றது. ஏற்கனவே சீனா கொழும்பு துறைமுக நகரொன்றை நிறுவியுள்ளமை குறித்து அதிருப்தி அடைந்துள்ள டில்லி அரசாங்கம், கிழக்கு முனையத்தின் மீது கண்வைத்துள்ளது.

இதற்கிடையில் தெற்காசியாவில் இந்தியாவின் செல்வாக்கை ஆதரிக்கும் வொஷிங்டன், தனது பங்கிற்கான அரசியல், பொருளாதார நலன்களை ஈட்டிக் கொள்வதற்கு வாய்ப்பான ஒரு வெளிநாட்டுக் கொள்கையை கடந்த ஒரு தசாப்தமாக தெற்காசியப் பிராந்தியத்தில் கையாண்டு வருகின்றது.

ஒட்டுமொத்த தெற்காசியப் பிராந்தியத்தைப் பொறுத்தவரை அங்கு வொஷிங்டன் கையாளும் வெளியுறவுக் கொள்கை இந்தோ-பசுபிக் மூலோபாயம் (Indo-Pacific Strategy) இதற்கான அமெரிக்க முதலீடு 4.1 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாகும். ஏற்கனவே இந்த வலைப் பின்னலில் இந்தியா, பங்களாதேஷ், நேபாள், சிங்கப்பூர் என்பன இணைக்கப்பட்டுள்ளன. இலங்கையும் இந்தத் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவித் தொகையாகப் பெற்றுள்ளது.

ஆனால், அடிப்படைக் கீழ்க் கட்டுமாண அபிவிருத்திக்கு சீனாவிடமிருந்து 7671 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றுள்ளது. ஏற்கனவே பங்களாதேஷ் அரசாங்கம் அமெரிக்காவிடமிருந்து 319 மில்லியன் டொலர்களையும் நேபால் 11 மில்லியன் டொலர்களையும் பெற்றுள்ளது. இந்தோ-பசுபிக் மூலோபாயத் திட்டம் தெற்காசிய நாடுகளின் துறைமுகப் பிரதேசங்களை சீனாவின் ஆதிக்கத்திலிருந்து தடுக்கும் நோக்கம் கொண்டது.

தெற்காசிய கடல் பிராந்தியம் மற்றும் துறைமுகங்கள் மீதான சீனாவின் இராணுவ, பொருளாதார, வணிக ஆதிக்கத்தினையும் செல்வாக்கினையும் கட்டுப்படுத்துவதே இந்திய மூலோபாயத்தினதும் அமெரிக்க மூலோபாயத்தினதும் பிரதான குறிக்கோள்களாகும். ஆனால், தெற்காசியாவில் சீனாவின் தலையீடு தலைக்கு மேல் சென்றுவிட்டது.

2013 இல் சீன ஜனாதிபதி ஜிங்பிங் மத்திய ஆசிய குடியரசுகளுள் ஒன்றான கஸகஸ்தானில் ஒரு பூகோள கீழ்க்கட்டுமான அபிவிருத்தி மூலோபாயத் திட்டமொன்றை அறிமுகம் செய்து வைத்தார். இத்திட்டம் 70 நாடுகளில் அமுல்படுத்தப்படும் என்றும் 2049 ஆம் ஆண்டு நிறைவடையும் என்றும் சீன ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

சீனாவின் கம்யூனிஸக் கட்சி இத்திட்டத்தை பட்டுப்பாதை பொருளாதார வலயம் என்று அறிவித்தது. ஒரு காலத்தில் ஆசியாவிலிருந்து வணிகச் சரக்குகளை ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லும் பாதைகள் மத்தியாசியாவை ஊடறுத்துச் சென்றன. அப்பாதைகள் வரலாற்றில் பட்டுப்பாதை என அறியப்பட்டன.

சீனா மத்தியாசியாவில் புதிய பட்டுப் பாதைத் திட்டமொன்றை உருவாக்கியுள்ளது. அதில் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளும் இணைக்கப்பட்டு வருகின்றன. ஒரு சர்வதேச நில ரீதியான வணிக முற்றமொன்றை (Commercial Corridor) ஒன்றை உருவாக்குவதும் அதனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுமே சீனாவின் குறிக்கோள் ஆகும். இத்திட்டம் பட்டுப்பாதை பொருளாதாரத் திட்டம் (Silk Road Economic Belt) எனப்படுகின்றது.

இது மேற்கு, கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு ஆசியாவையும் ஐரோப்பாவையும் உள்ளடக்கும் ஒரு பிரமாண்டமான பொருளாதாரத் திட்டமாகும். இதில் அதிகபட்சம் முடியுமான அனைத்து நாடுகளும் சீனாவுடன் நில ரீதியாக இணைக்கப்படவுள்ளன. அதற்கான அதிவேகப் பாதைகள், ரயில் பாதைகளை நிர்மாணிப்பதற்கு சீன அரசாங்கம் மிகப் பெரும் தொகையை தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளுக்கு நீண்டகாலக் கடனாக வழங்கி வருகின்றது. 2017 இல் இந்தத் திட்டம் சீனாவின் அரசியல் அமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.

இந்த மூலோபாயத் திட்டத்தை சீனாவின் கம்யூனிஸ அரசாங்கம், “நாடுகளின் வளமான எதிர்காலத்திற்கும் புவி சார்ந்த இணைப்புக்குமான ஒரு மகத்தான முயற்சி” என்று வர்ணிக்கின்றது. எதிர்த் திசையிலுள்ள வொஷிங்டன், இது சீனாவை மையப்படுத்திய சர்வதேச வணிக வலைப்பின்னல் என்று கூறுகின்றது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இதற்கு மாற்றமான ஒரு மூலோபாயத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. அது Blue Dot Network எனப்படுகின்றது.

சீனா தெற்காசிய நாடுகளில் எல்லை கடந்து தலையீடு செய்வதற்குப் பிரதான காரணம், புவியியல் சார்ந்து இத்தகைய பெரும் நவீன பட்டுப்பாதை பொருளாதாரத் திட்டமொன்றை அமுல்படுத்துவதே. இது குறித்த பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களை சீனா பிராந்திய நாடுகளுடன் ஏற்கனவே மேற்கொண்டு விட்டது. அதேபோன்று சட்ட ரீதியான கீழ்க் கட்டுமானங்களையும் அது உருவாக்கி வருகின்றது.

சீனாவின் ஆதிக்கம் நிலத்தோடு நின்று விடவில்லை. அது 21 ஆம் நூற்றாண்டுக்கான கடல் சார் பட்டுப்பாதை திட்டமொன்றையும் உருவாக்கும் பிரமாண்டமான மூலோபாயத் திட்டமொன்றிலும் கவனம் குவித்துள்ளது. தெற்கு சீனக் கடற் பரப்பிலிருந்து ஹனோய் வழியாக ஜகர்த்தா, சிங்கப்பூர், கோலாலம்பூர் இவற்றைக் கடந்து, மலாக்கா நீரிணையினூடாக பின்னர் இலங்கை கொழும்புத் துறைமுகத்தைக் கடந்து மாலை தீவுகள் வழியாக கிழக்காபிரிக்காவிலுள்ள மும்பாஸா துறைமுகத்தினூடே ஜிபூத்தி துறைமுகத்தை அடைந்து, அங்கிருந்து செங்கடல், வழியாக சுயேஸ் கால்வாயை ஊடறுத்து மத்திய தரை கடலின் வழியாக ஸ்தன்பூல் எதென்ஸ் நகர்களை ஊடறுத்து வடக்கு இத்தாலியை அடையும் மிக நீண்ட கடல்பாதைத் திட்டமொன்றை சீனா வகுத்துள்ளது.

இலங்கையின் ஹம்பாந்தோட்டை, பாகிஸ்தானின் கவாதிர், பங்களாதேசின் சிட்டகொங் மற்றும் மியன்மாரின் சித்துவே ஆகிய துறைமுகங்கள் இந்தத் திட்டத்திற்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.

ஆக, தெற்காசிய அரசியலில் தமது பொருளாதார நலன்களை அடைந்துகொள்வதற்கு சீனாவும் அமெரிக்காவும் இந்தியாவும் நடத்தி வருகின்ற பனிப்போருக்கு இந்த ஏழைநாடுகள் பணியாகி வருவதுதான் மிகவும் கவலைக்கிடமானது.

தெற்காசிய நாடுகள் 2019

நாடுகள் பரப்பு (ச.மைல்) சனத்தொகை
மாலைதீவு, 298 ச.கி.மீ. 540444
பூட்டான், 47,000 ச.கி.மீ 763092
இலங்கை, 65610 ச.கி.மீ 21.8 மில்லியன்
நேபாளம், 28,563,377 ச.கி.மீ 28.61 மில்லியன்
ஆப்கானிஸ்தான் 652,860 ச.கி.மீ 38.04 மில்லியன்
பங்களாதேஷ் 143998 ச.கி.மீ. 163 மில்லியன்
பாகிஸ்தான் 809696 ச.கி.மீ 216.6 மில்லியன்