பாடசாலை மட்டத்தில் மாணவர்களின் தலைமைத்துவப் பண்பை வளர்த்தல்

31

சிறந்த வாழ்க்கையொன்றை நடத்துவதற்கு அறிவு, விளக்கம், தேர்ச்சிகள், செயற்திறன்கள், மனப்பாங்குகள் என்பவற்றை நேர்ப்பாங்காக வளர்க்க வேண்டியுள்ளது. இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்களாக மிளிரப் போகின்றவர்கள். அதனால்தான் ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறையில் எழுதப்படுகின்றது. அதை ஆசிரியர்கள் எழுதுகிறார்கள் என கல்வியியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தொழில் சந்தைக்கு மாணவர்களைத் தயார் செய்தல் என்ற அவசரத்தில் விழுமியக் கல்வியின் அடிப்படைக் குறிக்கோள்களில் ஒன்றான தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதற்கு எமது கல்வி முறை தவறிவிட்டது என்றே கூற வேண்டும்.

சுயகட்டுப்பாடு, நேரத்திற்கு இயங்குதல், தலைமைக்குக் கீழ்படிதல், ஏனையவர்களுக்கு மதிப்பளித்தல், திட்டமிட்டுச் செயல்படல், சகிப்புத் தன்மை, ஆக்கத்திறன், அணியாகச் செயல்படல் போன்ற தலைமைத்துவப் பண்புகளை மாணவர்களுக்கு மத்தியில் வளர்ப்பது ஆசிரியர்களின் பொறுப்பாகும். இதற்கு வழிகாட்டியாக இருக்க வேண்டியது அதிபரின் கடமையாகும்.

கால் நூற்றாண்டுக்கு முந்திய (1996) தேசிய கல்வி ஆணைக்குழு விதந்துரை தேசிய கல்விக் கொள்கையின் நோக்கத்தை பின்வருமாறு அடையாளப்படுத்துகின்றது.

  1. கல்வி வாய்ப்புக்களை ஜனநாயகமயப்படுத்தல்
  2. தேசிய நோக்கங்களை கல்வியின் நோக்கங்களினூடாகப் பிரயோகத்தில்
  3. ஒவ்வொரு தனிநபரினதும் சாத்தியத்திற்கு ஏற்றவாறு கல்வியில் வாய்ப்புக்களை ஏற்படுத்தல்
  4. தனிநபரினது முழுமையான சமநிலை ஆளுமையையும் தலைமைத்துவ ஆற்றல்களையும் அபிவிருத்தி செய்தல்.
  5. சமூக, பொருளாதார, கலாசார, சமய மற்றும் அரசியல் குறிக்கோள்களைப் பூர்த்தி செய்யும் கல்வியை வழங்குதல்.
  6. இயற்கைச் சூழலுடன் குடிமக்களை பொருந்தி வாழ வைத்தல்

இதில் நான்காவதும் ஐந்தாவதுமான குறிக்கோள்கள் மாணவர்களில் தலைமைத்துவப் பண்பை திட்டமிட்டு வளர்ப்பதன் தேவையை வலியுறுத்துகின்றது.

வற்புறுத்தலில்லாத முறைகளினூடாக மக்களை செயற்பட ஊக்குவிப்பதன் மூலம் அவர்களை ஒரு திட்டமிட்ட திசையில் செலுத்தும் செயன்முறையே தலைமைத்துவம் என ஓர் அறிஞர் குறிப்பிடுகின்றார். நல்ல தலைமை மக்களை அவர்களுக்கு நீண்டகால ரீதியில் பயனளிக்கக் கூடிய திசையில் செலுத்துவதாக இருக்கும்.

இந்த வகையில் தலைமை என்பது மற்றவர்கள் மீது செல்வாக்குச் செலுத்தும் ஒரு செயன்முறையாகும். பிறரில் நாம் செல்வாக்குச் செலுத்துவதற்கு மிகச் சிறந்த ஒரு வழிமுறை எமது நடத்தைகள் முன்மாதிரியாக இருப்பதாகும். இதனால்தான் ஏனையவர்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர் தலைமைத்துவம் உடையவராக இருக்கின்றார் என சமூக உளவியல் அறிஞர் ஸ்ப்ரொட் தெரிவிக்கின்றார்.

ஒரு குழுவில் ஒருவர் ஏனைய உறுப்பினர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதை இந்த வரையறை வலியுறுத்துகின்றது. ஃச்ணீடிஞுணூஞு மற்றும் ஊணூச்ணண்தீணிணூtட ஆகியோர் பிரபல்யமிக்க சமூக உளவியலாளர்கள் ஆவர். இவ்வறிஞர்களின் கருத்துப்படி குழுவில் உள்ளோரின் நடத்தையில் பாதிப்பை உருவாக்குபவரே அக்குழுவின் தலைவர் ஆவார். தலைவருக்கும் பின்தொடர்வோருக்கும் இடையில் இனந்தெரியாத முறையில் பாயும் விசையே தலைமைத்துவம் என ரொபட் என்பவர் கூறுகிறார்.

இவ்வரையறைகள் நடத்தையை மாற்றியமைப்பதில் குழுவில் உள்ளோரின் செல்வாக்கை ஒப்பிட்டுப் பார்க்கின்றது. அதாவது நடத்தை மாற்றத்தைப் பொறுத்தவரை குழுவில் உள்ளோரிடையே பரஸ்பரம் காணப்படும் உறவு பற்றி ஆராய்கின்றது. எனவே தலைவர் என்பவர் குழுவில் உள்ளோருக்கு ஆலோசனைகளை வழங்கியும் கட்டளைகளைப் பிறப்பித்தும் அனைத்து உறுப்பினர்களின் சிந்தனை, உணர்ச்சி, செயல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒருமுகப்படுத்தி எந்தச் சிக்கலையும் தானே முன்னின்று தீர்த்து வைப்பவராகவும் வழிநடத்துபவராகவும் இருக்க வேண்டும்.