உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் ஹஸீமின் பயங்கரவாத பயிற்சி பாடசாலையில் பயிற்சி பெற்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவனல்லையில் ஹிங்குல பிரதேச்தை சேர்ந்த 24 வயது பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
சஹ்ரானினால் பெண்கள் சிலரை பயங்கரவாத செயற்பாட்டுக்கு இணைத்துக் கொள்வதற்காக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததாகவும் அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி பயங்கரவாத விசாரணை பிரிவினால் 6 பெண்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முஹம்மது இப்ராஹிம் சஹிதா என்ற 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மாவனெல்லை புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களின் சகோதரி என தெரியவந்துள்ளது.
பயங்கரவாத தாக்குதலின் பின்னர் குறித்த இரு சகோதரர்களும் கம்பளை பாதணி விற்பனை நிலையமொன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் அவர்களின் தந்தையும் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேகநபர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.