மியன்மார்: என்ன நடக்கிறது அங்கே?

61

– றவூப் ஸெய்ன்

பெப்ரவரி 01 இல் எதிர்பாராத விதமாய் மியன்மார் இராணுவம் ஆன்சாங் சூகியையும் அவரது அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களையும் கைதுசெய்து சிறைப்படுத்தியதோடு, நாட்டில் இராணுவ ஆட்சியைப் பிரகடனம் செய்தது. இராணுவத் தளபதி மின் ஆங் லாஈங் அனைத்து அதிகாரமும் பொருந்திய தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளதோடு, பெயரளவில் ஜனாதிபதியாக மின்ட் ஸ்வே எனும் இன்னொரு இராணுவ அதிகாரியை நியமித்துள்ளார்.

கடந்த இரு வாரங்களாக அந்நாட்டில் பாரிய மறியல் போராட்டங்களும் வீதி ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன. யங்குங் நகரில் மில்லியன் கணக்கான மக்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டமும் இடம்பெற்று வருகின்றது. இராணுவ ஆட்சிக்கெதிராக இது போன்ற பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மியன்மார் வரலாற்றில் முன்னொருபோதும் இடம்பெற்றதே இல்லை.

தலைநகர் நைபீடோவில் இராணுவம் செறிவாகக் குறிக்கப்பட்டுள்ளபோதும், நாட்டின் நிருவாகம் முற்றாக முடங்கிப் போயுள்ளது. அரச ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதனால் அரச நிருவாகத்தை சுமுகமாக முன்னெடுக்க முடியாமல் இராணுவம் திணறுகின்றது. இதற்கிடையில் பிரிட்டன், ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மியன்மார் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

மியன்மார் இராணுவ சதிப் புரட்சியின் மூலம் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றது. ஜனநாயகப் போராளி எனக் கருதப்படும் ஆங்சாங் சூகியும் அவரைச் சார்ந்தோரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் மீது இராணுவம் பல்வேறு வகையான குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகின்றது.

இராணுவ சதிப் புரட்சியின் பின்னணி

2020 நவம்பரில் மியன்மாரில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஆங்சாங் சூகியின் கட்சி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இராணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் உராய்வுகள் ஏற்படத் தொடங்கின. இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட ஜெனரல்கள் இப்போது ஆங்சாங் சூகியின் கட்சியான ஜனநாயகத்திற்கான தேசிய முன்னணி மீதும் அவரது அரசாங்கத்தின் மீதும் முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டு கடந்த தேர்தலில் வாக்கு மோசடியிலும் ஊழலிலும் அவர்கள் ஈடுபட்டார்கள் என்பதே.

மக்கள் ஆதரவு தம் பக்கம் இருக்க, சூகி ஊழல் மோசடியின் மூலம் அதிகாரத்திற்கு வந்துள்ளதாக இராணுவம் குற்றம் சாட்டியது. அவரது சிறைத் தண்டனையை நீடிப்பதற்கு வசதியான புதிய புதிய குற்றச்சாட்டுக்களை அவர் மீது இராணுவம் சுமத்திக் கொண்டிருக்கின்ற நிலையிலேயே நாட்டில் மிகப் பெரும் மக்கள் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இராணுவம் ஜனநாயக விரோத சதி நடவடிக்கைக்கு இப்படியொரு காரணத்தைக் கண்டுபிடித்தாலும் கூட மியன்மார் இராணுவ ஜெனரல்கள் அதிகார மோகத்தில் திளைத்தவர்கள் என்பதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. 1886 ஆம் ஆண்டு பிரிட்டனினால் கைப்பற்றப்பட்டு காலனித்துவமயப்படுத்தப்பட்ட மியன்மார் 1948 இல் சுதந்திரம் அடைந்தது. அன்றிலிருந்து 1962 வரை அந்நாட்டில் ஜனநாயகம் சிறிது சிறிதாக தளைத்தோங்கியபோதும் 1962 ஆம் ஆண்டில் ஜனநாயக மாற்றம் முடிவுக்கு வந்தது. அவ்வாண்டில் ஜெனரல் நெவின் இராணுவ சதிப் புரட்சியொன்றை நடத்தி முடித்தார்.

2011 ஆம் ஆண்டு வரை இராணுவ ஆட்சியே அங்கு நிலைபெற்றது. சுமார் அரை நூற்றாண்டு காலம் நீடித்த இந்த இராணுவ ஆட்சியில் அதிகாரத்தின் தெவிட்டாத சுவையை அனுபவித்த இராணுவத்தினர் 2012 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற ஜனநாயக மாற்றங்களை சகித்துக் கொள்ளவில்லை. ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுத்து வந்த சூகி நீண்டகாலமாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த பின்னர் விடுதலை செய்யப்பட்டார். 2015 இல் இடம்பெற்ற தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்றது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் 2020 நவம்பரில் இடம்பெற்ற தேர்தலில் ஆங்சாங் சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றியது. நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் இடம்பெற்று வந்த இந்த ஜனநாயக மாற்றங்கள் இராணுவ சர்வதிகாரத்திற்கு ஓர் அச்சுறுத்தல் என்று இராணுவம் கருதியதனால் 2021 ஐ இலக்கு வைத்து சதிவலை பின்னப்பட்டது. சூகி பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்டு இராணுவம் அதிகாரத்தை தன்வசம் எடுத்துள்ளது.

இன்னொரு பொதுத் தேர்தலை நடத்தி அறுதிப் பெரும்பான்மை பெறும் கட்சியிடம் அதிகாரத்தைக் கைமாற்றம் செய்வதற்கு தாம் தயார் என இராணுவம் அறிவித்துள்ளது. ஆனால், தேர்தல் எப்போது நடக்கும் என்பது குறித்தோ அமைதி வழி அதிகார மாற்றம் எப்போது நிகழும் என்பது குறித்தோ இராணுவம் அறிவிக்கவில்லை.

அரசியலமைப்பில் இராணுவத்திற்குள்ள அதிகாரம்

1962 முதல் 2011 வரை சுமார் ஐந்து தசாப்தங்கள் இராணுவ ஆட்சி நடைபெற்ற மியன்மாரில் 2008 இல் ஓர் முக்கிய மாற்றம் நிகழ்ந்தது. இராணுவத்திற்குச் சார்பாக அரசியலமைப்பில் திருத்தங்களை இராணுவ ஜெனரல்கள் மேற்கொண்டனர். அதில் இரண்டு திருத்தங்கள் முக்கியமானது. பாராளுமன்றத்தின் மொத்த ஆசனங்களில் நான்கில் ஒரு பங்கு இராணுவத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது முதல் திருத்தமாகும். அதேபோன்று நாட்டின் உள்விவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, எல்லை நாடுகளுடனான விவகாரங்கள் ஆகிய மூன்று முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் இராணுவத்திற்கு வழங்கப்பட வேண்டும்.

2011 இற்குப் பின்னர் இடம்பெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் இத்திருத்தங்கள் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தன. மியன்மார் பாராளுமன்றத்தின் மொத்த ஆசனங்கள் 440 ஆகும். அரசியலமைப்பு மாற்றத்தின்படி 330 உறுப்பினர்களையே மக்கள் தேர்தல் மூலம் நேரடியாகத் தெரிவுசெய்வார்கள். எஞ்சியுள்ள 110 பாராளுமன்ற உறுப்பினர்கள் இராணுவத்திலிருந்து நியமிக்கப்படுவார்கள். அவர்களை முப்படைகளின் தளபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நியமிப்பார். ஆக, ஆங்சான் சூகி கனவு கண்டது போல் முழு நிறைவான ஜனநாயகம் மியன்மாரில் இன்னும் மலரவில்லை. ஏற்கனவே பாராளுமன்ற அரசியலில் இராணுவத்தின் தலையீடு குறிப்பிட்டளவு இருந்த நிலையிலேயே இந்த இராணுவ சதிப் புரட்சி நிகழ்ந்துள்ளது.

அதேவேளை, ஜனநாயகத்தைச் சூருட்டி எந்த நேரத்திலும் குப்பைத் தொட்டியில் வீசும் அளவுக்கு முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை இராணுவமே வகித்து வருகின்றது. இந்நிலைமைகள் மியன்மாரில் ஜனநாயகம் தப்பிப் பிழைப்பதற்கு மிகப் பெரும் சவாலாக இருந்து வருகின்றது.

இராணுவ ஆட்சி நிலைக்குமா?

மியன்மார் தென்கிழக்கு ஆசிய நாடுகளுள் ஒன்று. தேரவாத பௌத்தத்தைப் பின்பற்றும் இந்த நாடு பழமைவாதத்தாலும் பாரம்பரிய நம்பிக்கைகளாலும் நிரம்பி வழிகின்றது. 300 இற்கும் மேற்பட்ட இனக் குழுமங்கள் வாழும் ஒரு வித்தியாசமான நாடு இது. வடக்காகவும் வடகிழக்காகவும் சீனா எல்லை நாடாக அமைந்துள்ளது. தென்கிழக்காக தாய்லாந்தும் லாவோஸும் காணப்படுகின்றன. மியன்மாரின் தெற்கில் அந்தமான் தீவுகளும் மேற்குப் புறம் பங்களாதேஷும் வடமேற்குப் புறமாக இந்தியாவும் அமையப் பெற்றுள்ளன.

தென்கிழக்கு ஆசியாவின் (ASEAN) பிரதான பிராந்தியக் கூட்டணியான ‘ஏசியன்’ என்ற அமைப்பில் இந்நாடு அங்கத்துவம் வகிக்கின்றபோதும் மியன்மார் தனித் தீவாகவும் ஒரு மூடுண்ட நாடாகவுமே இருந்து வருகின்றது. அதற்கான பிரதான காரணம் நீண்டகாலமாக இராணுவ சர்வதிகாரம் அங்கு நிலைத்தமையே.

இந்தோ-சீன நாடுகளான வியட்நாம், லாவோஸ், கம்போடியா மற்றும் புரூணை, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா ஆகியவை ஏசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய தென்கிழக்காசிய நாடுகளாகும். இதில் கம்போடியாவில் மாத்திரமே மியன்மாரைப் போன்று இராணுவ சதிப் புரட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஏனைய அனைத்து நாடுகளிலும் ஜனநாயக விழுமியங்கள் நிலைபெற்றுள்ளன. தற்போது இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் மியன்மாரின் அரசியல் நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடி வருகின்றன. அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் மீது இராணுவம் ஆயுதங்களைப் பிரயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஜனநாயக வழியில் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் இதற்கு ஆசியான் மாநாட்டை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்றும் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் இணை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

ஐம்பது ஆண்டுகள் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த இராணுவம் அதனை இழந்து சரியாகப் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீளவும் அதனைக் கைப்பற்றியுள்ளதனால் ஜனநாயகவாதிகளுக்கு மீளவும் இடம்கொடுக்குமா என்பது ஐயத்திற்குரியதே.

சூகி சார்பாக ஆஜராகியுள்ள சட்டத்தரணி கடந்த வாரம் பிபிசிக்கு வழங்கிய செவ்வியில், சூகியின் மீது இராணுவம் பல்வேறு விதமான அடிப்படைகளற்ற குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருவது குறித்து தான் சந்தேகிப்பதாகவும் மீளவும் பல்லாண்டுகள் அவரை சிறையில் வைப்பதற்கு இராணுவம் சதித் திட்டம் தீட்டுவதாகவும் அந்த சட்டத்தரணி இராணுவத்தைக் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் மீதும் இராணுவம் மூர்க்கத்தனமாக செயல்படுகின்றது.

ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுடன் இராணுவ ஜெனரல்களுக்கு நெருக்கமான உறவுகள் இல்லை. ஆனால், எல்லைப் புற நாடான சீனாவுடன் கடந்த காலங்களில் இராணுவம் நெருங்கிச் செயற்பட்டு வருகின்றது. அரக்கானை அண்டியுள்ள சித்துவே துறைமுகம் 100 ஆண்டுகளுக்குள் சீனாவுக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்வர்கள் இராணுவ அதிகாரிகளே. சீனா புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிவாயு மற்றும் பெற்றோலியத் துறையில் முதலீடு செய்துள்ளது. வீழ்ச்சியடைந்துள்ள மியன்மாரின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு சீனாவின் உதவிக் கோரியுள்ள இராணுவம், தொடர்ந்தும் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கான மூலோபாயங்களில் கவனம் குவித்து வருகின்றது. இராணுவத்தின் இந்த நகர்வுகள் மீளவும் மியன்மாரில் ஜனநாயக ஆட்சி மலருமான் என்ற ஐயத்தை உருவாக்கி வருகின்றது.

எவ்வாறாயினும், சர்வதேச நாடுகள் மியன்மாரின் இராணுவ ஆட்சியை அங்கீகரிக்க மாட்டார்கள். ஆனால், சீனா இராணுவ ஆட்சிக்கு முண்டுகொடுக்கும் பட்சத்தில் அது தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது. பிற இந்தோ-சீன நாடுகளிலும் மியன்மார் இராணுவப் புரட்சி தாக்கம் செலுத்துமா என்பது குறித்தும் ஆய்வாளர்கள் தமது கவனத்தைக் குவித்து வருகின்றனர். மியன்மார் இராணுவம் ஆட்சியிலிருந்த காலத்தில்தான் அந்நாட்டுக்குச் சமீபமாக இருந்த அரக்கான் சுதந்திர முஸ்லிம் குடியரசு மியன்மாருடன் இணைக்கப்பட்டது.

1962 இல் நடந்த இராணுவப் புரட்சியை அடுத்து அரக்கானில் வாழ்ந்த ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன. 1970 களுக்குப் பின்னர் அவர்கள் நாட்டை விட்டு படிப்படியாக வெளியேற்றப்பட்டனர். 2018 இல் 7 லட்சம் ரோஹிங்யர்கள் இரண்டு வார இடைவெளியில் நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர். இன்று அவர்கள் பங்களாதேஷின் கொக் பஸாரில் அகதிகளாக அலைக்கழிந்து வருகின்றனர். எஞ்சியுள்ள ரோஹிங்யர்கள்  மீளவும் இராணுவ ஆட்சியின் கீழ் திணறும் நிலை உருவாகியுள்ளது. இனச் சுத்திகரிப்பில் ஈடுபட்ட இராணுவம், அங்கு எஞ்சியுள்ள ரோஹிங்யர்களையும் மீளவும் வேட்டையாடுமா என்ற அச்சம் ரோஹிங்யர்களைப் பீடித்துள்ளது.

இத்தகைய பல்வேறு சவால்களை உருவாக்கியுள்ள இராணுவ சதிப் புரட்சி முடிவுக்கு வர வேண்டும் என்பதே பிராந்திய நாடுகளினதும் உலக நாடுகளினதும் எதிர்பார்ப்பாகும். ஆனால், மியன்மார் இராணுவம் இதற்கு இடம்கொடுக்குமா என்பதே இப்போதைக்குள்ள கேள்வியாகும்.

மியன்மார்    –              தென்கிழக்காசிய நாடு

பரப்பரளவு 676,552 சதுர கி.மீ.

மக்கள் தொகை 53 மில்லியன்

நாணயம் – யாத்

பிரதான மொழி – பேர்மிஷ்

தற்போதைய இராணுவத் தலைவர் – மின் ஆங் லாஈன்

மதம் தேரவாத பௌத்தம்

எல்லைப் புற நாடுகள் சீனா, இந்தியா, பங்களாதேஷ், லாவோஸ், வியட்நாம், பூட்டான், தாய்லாந்து

பிரதான ஏற்றுமதி – தேக்கு மரம், முத்து, பவளம், மாணிக்கம்

முதலீட்டு நாடுகள் – சீனா, தென்கொரியா

 

வரலாற்றுச் சுருக்கம்-:

1057 – மன்னன் அனவ்ரதா மியன்மார் அரசை நிறுவினான்.

1531       – தொங்கு அரச பரம்பரை ஆட்சி

1886 – பிரித்தானிய காலனித்துவம்

1948 – அரசியல் சுதந்திரம்

1962 – இராணுவப் புரட்சி (ஒரு கட்சி சோசலிஸ முறைமை)

1990 – ஜனநாயகத்திற்கான தேசிய லீக் தேர்தலில் வெற்றி, இராணுவம் மறுப்பு

2011 – சிவிலியன் அரசு

2015 – என்எல்பி தேர்தலில் வெற்றி (ஜனநாயக ஆட்சி)

2021 – பெப்ரவரி 01 இராணுவப் புரட்சி