தேசத்தைப் பாதுகாப்பதில் முஸ்லிம்கள்

68

போர்த்துக்கேயர் இலங்கை வந்ததனால் முஸ்லிம்களின் வர்த்தகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாகவே முஸ்லிம்கள் மாயாதுன்னையின் பக்கம் சாய்ந்தனர் என்று வரலாற்றை சிலர் மலினப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால், சிங்கள மன்னர்களின் பக்கம் நின்று ஐரோப்பிய காலனித்துவவாதிகளை முஸ்லிம்கள் எதிர்த்துப் போராடியமைக்கு அது மட்டுமே காரணமாகாது.

இலங்கை தேசத்தின் மீது முஸ்லிம்கள் கொண்டிருந்த நேசமும் தாய்நாட்டுப் பற்றுமே முஸ்லிம்களை இவ்வாறு செயற்பட வைத்தது என்பதை சுதந்திரத்திற்குப் பின்னரும் முஸ்லிம்கள் இந்நாட்டிற்கு ஆற்றிய அரும் பணிகளை நோக்கும்போது புரிந்துகொள்ளலாம்.

விஜயபாகு கொலை சம்பவத்திற்கு முன்னர் கோட்டை இராஜ்யத்தின் நில ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் அதன் இறைமையைப் பேணுவதற்கும் முஸ்லிம்கள் 1516 இல் கள்ளிக்கோட்டை மன்னன் செமொரினின் இராணுவ உதவியைப் பெற்றுக் கொடுத்தனர். அம்மன்னனின் உதவியுடன் குஞ்சலி மரிக்காரின் பரம்பரையினர் சோள மண்டல கடற் பரப்பையும் மன்னரையும் போர்த்துக்கேயரிடமிருந்து பாதுகாத்துக் கொடுத்தனர்.

இலங்கை முஸ்லிம்களில் சிலர் 1521 இல் இலங்கையில் போர்த்துக்கேயரின் ஆதிக்கம் பரவுவதையும் அதனால் தமது வர்த்தகத்திற்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் கள்ளிக்கோட்டை மன்னனிடம் முறையீடு செய்தனர். அதன் விளைவாக செமொரின் மன்னன் கேரள மலபார் சமூகத்தைச் சேர்ந்த அலி மரிக்கார் எனப்படும் படைத் தளபதியுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டான். பின்னர் 1536 இல் குஞ்சலி மரிக்கார் மலபாரிலிருந்து 25 போர்க் கப்பல்களுடன் இலங்கையை நோக்கி விரைந்தார். கொழும்புத் துறைமுகத்திற்கு சமீபமாக நங்கூரமிட்டிருந்த போர்த்துக்கேயர் கப்பல்களை குஞ்சலி மரிக்காரின் படை நீரில் மூழ்கடித்தது. கோட்டை துறைமுகத்திலிருந்து மட்டுமன்றி தூத்துக்குடியிலும் போர்த்துக்கேயர் படை விரட்டியடிக்கப்பட்டது.

1526 இல் அலி இப்றாஹீம் எனப்படும் எகிப்திய கடற்படைத் தளபதி கள்ளிக்கோட்டைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தான். அதன்போது கொழும்புத் துறைமுகப் பகுதியில் போர்த்துக்கேயரின் நடமாற்றம் மீண்டும் தலைதூக்கியுள்ளதைக் கேள்விப்பட்ட அலி இம்றாஹீம் செமொரின் மன்னனின் அனுமதியைப் பெற்று கொழும்புத் துறைமுகத்தை நோக்கி விரைந்தான். அக்கால கொழும்பு முஸ்லிம்களின் கள்ளிக் கோட்டை மன்னனுடன் தொடர்பில் இருந்தனர். அலி இம்றாஹீம் போர்த்துக்கேயரின் கப்பல்களைத் தாக்கியளித்த பின்னர் எகிப்துக்குச் திருப்பிச் சென்றான்.

மலபாரிலிருந்து கன்னியாக்குமரி வரை போர்த்துக்கேய கப்பல்களைத் தாக்கியழித்த பின்னரே அலி இப்றாஹீம் கொழும்பு கடற்பரப்பில் போர்த்துக்கேயரின் கப்பல்களை எதிர்கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் காட்டுகின்றன. இக்காலகட்டத்தில் கொழும்பில் சுமார் 20,000 முஸ்லிம்கள் வாழ்ந்து வந்ததாக வரலாற்றுக் குறிப்பொன்று உறுதி செய்கின்றது. அவர்கள் போர்த்துக்கேயருக்கு எதிராக அவ்வப்போது கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.

கோட்டை மன்னனுக்கு வரி செலுத்தும் சிற்றரசுகளாகவே இக்காலத்தில் சப்ரகமுவ, வடமேல், மற்றும் தென்மாகாணப் பகுதிகள் இருந்தன. இக்காலத்தில் இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு குஞ்சலி மரிக்காரின் மகன் குட்டி மரிக்கார் தலைமையில் தளபதி அலி ஹஸன் உள்ளிட்ட ஒரு கடற்படை கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மற்றொரு வரலாற்றுக் குறிப்பு எடுத்துரைக்கின்றது. அவர்கள் போர்த்துகேயருடன் மூர்க்கமாகப் போராடி அவர்களது கப்பல்களையும் தாக்கியழித்தனர்.

குட்டி மரிக்காரின் தலைமையில் 20 போர் வள்ளங்கள் கொழும்புக்கு வந்ததாகக் கூறப்படுகின்றது. வள்ளங்களில் வந்தவர்கள் போர்க் கப்பல்களைத் தாக்கியழிக்கும் வல்லமை பெற்றிருந்தனர். போர்த்துக்கேயருக்கும் குட்டி மரிக்கார் படைக்கும் இடையில் நிகழ்ந்த போரில்  ஜோர்ஜ் கப்ரீஜ் எனப்படும் போர்த்துக்கேய தளபதி கொல்லப்பட்டதோடு ஐந்து தளபதிகள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

இத்தகைய கொதிப்பான சூழ்நிலையிலும் புவனேகபாகு மன்னன் போர்த்துக்கேயருடன் வைத்திருந்த தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ளவோ அவர்களை வெறுத்தொதுக்கவோ விரும்பவில்லை. மாயாதுன்னையுடன் போர் செய்வதற்கு அவர்களின் தயவுதாட்சண்யத்தை வேண்டி நின்றான். இதனால் 1546 இல் மீண்டும் மயாதுன்னைக்கும் புவனேகபாகுவிற்கும் இடையில் மோதல் வெடித்தது. இம்முறை கொழும்பு முஸ்லிம்களின் மத்தியஸ்தத்துடன் செமொரின் மன்னனின் ஆயுத உதவியை நாடி நின்றான் மாயாதுன்னை. மன்னன் மாயாதுன்னையின் வேண்டுகோளுக்கிணங்க பச்சி மரிக்காரின் தலைமையிலான படையணியொன்று கொழும்புக்கு விரைந்தது. 15 போர்க் கப்பல்களில் 2500 படைவீரர்கள் கொழும்பை அடைந்தனர். பல்முனைகளிலும் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டன.

சமகாலத்தில் தூத்துக்குடியிலும் தாக்குதல் நடத்தப்பட்டதனால் போர்த்துக்கேயர் உணவும் குடிபானமும் இன்றி கோட்டைப் பகுதிக்குள் முடங்க வேண்டி ஏற்பட்டது. நிலைமையைச் சமாளிக்க முடியாத போர்த்துக்கேயர் தென்னிந்தியாவிலுள்ள தமது தலைமைகளிடம் கோவாவிலிருந்து மேலதிக போர்த்துக்கேயப் படையை கொழும்புக்கு அனுப்பி வைக்குமாறு கோரினர். இதனால் பச்சி மரிக்காரின் படை பின்னடைந்தது. எஞ்சிய படையினரும் பச்சி மரிக்காரும் மாயாதுன்னையின் சீதவாக்கை இராஜ்யத்திற்கு தப்பியோடினர்.

இம்முறை போர்த்துக்கேயர் படை எதிர்பாராத வகையில் பலமாக இருந்தது. கள்ளிக்கோட்டை பச்சி மரிக்காரின் படையினாலும் தோற்கடிக்க முடியாமல் போனது. வேகமாக முன்னேறி வந்த போர்த்துக்கேயர் படையை சமாளிக்க முடியாத மாயாதுன்னை தனது சீதவாக்கையைப் பாதுகாத்துக் கொள்வதற்கு அவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தையொன்றில் இறங்கினான். ஆக்கிரமிப்புப் போரை நிறுத்துவதாயின் பச்சி மரிக்காரின் தலை தமக்கு வேண்டும் என்று போர்த்துக்கேயர் முன்வைத்த கோரிக்கையில் உறுதியாக இருந்தனர்.

தனக்காகப் போராட கள்ளிக்கோட்டையிலிருந்து வந்த வீரதீரன் பச்சி மரிக்காரின் தலையை வெட்டி பொதி செய்து போர்த்துக்கேயருக்கு அனுப்பி வைத்து போரிலிருந்து விலகிக் கொண்டான் மாயாதுன்னை. மன்னன் மயாதுன்னை தனது சீதவாக்கை இராஜ்யத்தைக் கட்டிக் காப்பதற்குக் கொடுத்த விலை மாயாதுன்னைக்கு விசுவாசமான முஸ்லிம் படைத் தளபதி பச்சி மரிக்காரின் உயிராகும் என்பதை வரலாறு ஒருபோதும் மறைத்து வைக்க முடியாது.

மாயாதுன்னை உயிர் வாழும் வரை நடந்த அத்தனை போர்களிலும் முஸ்லிம்கள் அவன் பக்கம் நின்று போர்த்துக்கேயருக்கு எதிராகப் போராடினர். காயமடைந்தனர், உயிர் நீத்தனர். அவனது இறப்புக்குப் பின்னர் அவனது மகன் டிங்கிரி பண்டார சீதவாக்கை ஆட்சியைக் கையேற்றபோது மீளவும் போர்த்துக்கேயருக்கு எதிராக பல்வேறு யுத்தங்களில் அவன் ஈடுபட்டான். அந்த அனைத்து யுத்தங்களிலும் போல் முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

கண்டியின் முதலாம் விமல தர்ம சூர்ய போர்த்துக்கேயருக்கு எதிராக நடத்திய போரிலும் முஸ்லிம்கள் பங்குகொண்டனர். அதேபோன்று கண்டி மன்னன் இராஜசிங்கனின் காலத்தில் நடைபெற்ற யுத்தங்களிலும் முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். இந்த வகையில் 1562 இல் இடம்பெற்ற முல்லேரியப் போரும் விமல தர்ம சூரியனின் காலத்தில் நடைபெற்ற தந்துர போரும், 1630 இல் இடம்பெற்ற வெல்லவாயப் போரும், 1638 இல் இடம்பெற்ற கண்ணொருவ போரும் மிக முக்கியமானவை. அவற்றில் முஸ்லிம்கள் சிங்கள மன்னர்களோடு தோளோடு தோள் நின்று போராடி இந்த நாட்டைக் காப்பதற்கு தியாகங்கள் செய்தனர்.