பாடசாலை மாணவர்களின் தலைமைத்துவப் பண்புகள்

80

தலைவராதல் என்பது அனைத்து மனிதர்களுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் தலைவராகச் செயற்படுவீர்களானால் அல்லது தலைமைத்துவப் பண்புகளைப் பிரயோகிப்பீர்களானால் வெற்றிகளை இலகுவாகப் பெறுவீர்கள்.

இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின்படி தலைவராவதற்குரிய பொதுப் பண்புகளாக உடற் திறன்கள், மனவெழுச்சிகள், அறிவுத் திறன்கள், சமூகத் திறன்கள், தேர்ச்சிகள் என்பன கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்களாகிய நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் தலைமைத்துவம் என்பது ஆளுமையின் ஒரு கூறாக உள்ளதுடன், சூழ்நிலையின் விளைவாக ஏற்படுவதாகவும் உள்ளது. ஒவ்வொரு குறிப்பிட்ட சூழ்நிலையிலும் ஒரு குறிப்பிட்ட பண்பு தலைவராக இருப்பவர்களிடத்தில் மேலோங்கிக் காணப்பட வேண்டியுள்ளது. வெற்றிகரமான ஒரு தலைமைத்துவத்திற்கு பின்வரும் குணத் திறன்கள் அவசியமானவை என Adair John குறிப்பிடுகின்றார்.

  1. குழு மனோநிலையைப் புரிந்துகொள்ளல்

குழுவின் இயக்கவியல் மனப்போக்கை அறிந்தவராக தலைமைப் பண்புடையவர் இருக்க வேண்டும். குழு மனம், குழு நடத்தை போன்றவற்றைப் பயன்படுத்தி பல்வேறு செயற்திட்டங்களை வடிவமைத்து செயற்படும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு நிகழ்ச்சியையும் நன்கு திட்டமிட்டு அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பெற்று எல்லோரையும் பங்கேற்க வைத்து வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் திறன் இதனூடாகப் பரிணமிக்கின்றது.

  1. துடிப்பும் நெகிழ்வும்

தலைமைத்துவப் பண்புடையவர் தன்னுடைய மனப்பான்மை, ஈடுபாடு மற்றும் பிற நடத்தைகளில் துடிப்புடனும் தேவைப்படும்போது இவற்றில் நெகிழ்வுத் தன்மையை வெளிப்படுத்துபவராகவும் இருக்க வேண்டும். நிலைமைக்குத் தக்கவாறு சில சமயத்தில் இறுக்கமானவராகவும் வேறு சந்தர்ப்பங்களில் ஜனநாயக முறையில் எல்லோரையும் அணைத்துக் கொண்டு செல்பவராகவும் இருத்தல் அவசியம். சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனது குழுவினர்களுடைய விருப்பத்திற்கு அமைய தேவைப்படும் மாற்றங்களையும் மேற்கொள்ளத் தயாராக இருக்கின்ற பண்பும் அவசியமாகும். இதற்குத் திட்டமிடல், பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறைகளுக்குத் தேவையான வளங்களை ஒன்று திரட்டும் ஆற்றல், நெறிப்படுத்தும் திறன் என்பவை உதவும்.

  1. குழுவின் பிற உறுப்பினர்களை விட மேன்பட்டுத் திகழ்தல்

தலைமைத்துவ பண்புடையவர் குழுவோடு ஒத்துணர்வு கொண்டு திகழ்ந்தாலும் பெரும்பாலான குழு உறுப்பினர்கள் பாராட்டும் சில குணநலன்களில் மற்றவர்களைக் காட்டிலும் தான் உயர்வுடன் மற்றவர்களின் மதிப்பையும் ஒத்துழைப்பையும் பெற்று அவர்களை தன்னைப் பின்பற்றச் செய்ய முடியும். பொறுப்புக்களை தானே முன்வந்து ஏற்பவராகவும் எடுத்துக் கொண்ட வேலைகளைத் திறன்பட செய்து முடிப்பவராகவும் திகழ வேண்டும். எளிதாக அணுகக் கூடியவராகவும் பிரச்சினைகைளை வரைவில் புரிந்துகொள்ளும் நுண்ணறிவு படைத்தவராகவும் அவர் விளங்க வேண்டும்.

மேற்கூறிய இப்பண்புகளை பாடசாலையில் முறைசார், முறைசாரா முறையில் பாட ஏற்பாடுகள் மூலம் வழங்கும் விரிந்த ஏற்பாடுகளை புதிய கல்விச் சீர்திருத்த நடைமுறைகள் எடுத்துரைக்கின்றன. கல்வியே தலைமைத்துவத்தை வளர்த்திடும் முக்கிய காரணியாகவும் உள்ளது.

தலைமைத்துவப் பண்பை வளர்க்கும் கல்வி

தலைமைத்துவப் பண்புகள் ஒருவரிடம் நிறைந்திருந்த போதும் அவர் வெற்றிகரமான தலைவராக ஆகிவிட முடியாது. எனவே அவரை வெற்றியாளராக்குவதற்கு முதிர்ச்சியடையும் வண்ணம் பல்வேறு செயற்பாடுகளும் பாடசாலைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். தரம் ஒன்றிலிருந்து புதிய கல்விச் சீர்திருத்தத்தில் பல்கலைக்கழகக் கல்வி, தொழிற்கல்வி வரை பாடத் திட்ட தேர்ச்சிகளினூடாக தலைமைத்துவத்தை வளர்க்கும் பல்வேறு செயன்முறைகள் புகுத்தப்பட்டுள்ளன. புதிய கல்விச் சீர்திருத்தத்தில் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு ஒரு நேரசூசி தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் கல்லூரியில் நடைபெறும் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், அறிவியல் கண்காட்சிகள், மலர் வெளியீடுகள், கல்விச் செயற்திட்டங்கள், கல்விச் சுற்றுலாக்கள், சாரணியம் என்பவற்றை ஆசிரியரின் வழிகாட்டலினூடாக மாணவர்கள் மேற்கொள்கின்றபோது அவர்களது தலைமைத்துவ ஆற்றல்கள் விருத்தியடைகின்றன.

இணைப்பாடவிதான செயற்பாடுகளின்போது ஆசிரியர்கள் மாணவர்களிடமே பொறுப்புக்களை வழங்கி செயற்பட வைக்க வேண்டும். அப்போதுதான் எந்த நிகழ்ச்சியையும் நன்கு திட்டமிடல், திட்டமிட்ட நிகழ்ச்சியை நிறைவேற்றுவதற்குரிய வளங்களைத் திரட்டல், யாவற்றையும் ஒருங்கிணைத்து ஒரே அமைப்பாக இயங்கச் செய்தல், தேவையான மாற்றங்களையும் முடிவுகளைத் தகுந்த நேரத்தில் புகுத்தும் துணிச்சல் ஆகிய தலைமைத்துவப் பண்புக்குரிய குணநலன்களை மாணவர்கள் பயிலும் காலங்களிலேயே வளர்த்துக் கொள்ள முடியும். இதற்கு வழிகாட்ட ஆசிரியர்கள் தம்மை தலைமைத்துவ ஆற்றல் உள்ளவர்களாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆசிரியரும் தலைமைத்துவமும்

வகுப்பறையில் மாணவர்களை வழிநடத்தி அவர்களிடமிருந்து தலைமைத்துவ நோக்கை நிறைவேற்றும் ஆசிரியர்கள் புதிய தேர்ச்சிகளை, கற்பித்தல் நுட்பங்களை, முறையியல்களை குழு வேலைகளை, விவாத அரங்குகளை, ஒப்படை முறையியல்களை, களஆய்வுகளை, பரிசோதனைகளை, செயல்நிலை ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என 2001 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட கல்விச் சீர்திருத்தம் விதந்துரைத்துள்ளது. தேசிய ஆசிரியர் கல்விக் கொள்கை எனப்படும் கல்வியமைச்சின் அறிக்கையில் இவ்விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஆசிரியர்களுக்கான தலைமைத்துவமானது தனிநபர் இயல்புகளிலும் தேர்ச்சிகளிலும் முழுமை பெறும்போதும் மாணவர்களின் உணர்வுகளுடன் சங்கமமாகும்போதும் ஏற்படுகின்றது. தெளிந்த அறிவு, சமநிலை ஆளுமை, தொடர்பாடல் திறன், பிறருக்காகச் சிந்தித்தல், முயற்சிகளில் முன்னிற்றல், வழிகாட்டல் ஆசிரியர்களின் தலைமைத்துவத்தை உறுதி செய்கின்றன.