சாதிக்க துடிக்கும் பெண்களின் சாம்பலாகும் சாதனை கனவுகள்

50

அருளாளன் அன்பாளன் எல்லாம் வல்ல இறைவன் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். பிஸ்மில்லாஹ். எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்.

நீண்ட நாட்களுக்கு பின் ஒரு ஆக்கம் எழுத வாய்ப்பளித்த அல்லாஹ்வை தூய்மைப்படுத்துகிறேன்.

இந்த தலைப்பில் ஏதாவது எழுது என என் மண்டை நீண்ட நாளாக நச்சரித்துக் கொண்டிருந்தது. வாய்ப்பிருக்கவில்லை.
முதலில் சொந்த மகளிருக்கும் தனக்கென்று சொந்த தங்கை இருக்கும் தனக்கென்று சொந்த சகோதரி இருக்கும் ஒவ்வொரு ஆண் மகனும் இந்த பதிவை சற்று பொறுமையாக வாசியுங்கள்.

இலங்கை பௌத்தர்கள் பெரும்பான்மை நாடு. இலங்கை சிறுபான்மை முஸ்லிம்கள் வாழும் நாடு. இதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதனடிப்படையில் முஸ்லிம் சமூக முன்னேற்றத்தை தவிடுபொடியாக்க பல சதிகள் அரங்கேற எம் சமூக வளர்ச்சிக்கு நாம் முற்றுபுள்ளியிடுவது சரியா?

எனது ஆக்கங்கள் பல சந்தர்ப்பங்களில் பெண்களை விமர்சிப்பதாகவே இருந்துள்ளது. மிக கடுமையாக விமர்சித்துள்ளேன். ஆனால் இன்று அவர்களுக்காக என்னால் இயன்ற பங்களிப்பை செய்ய நினைத்தே இவ்வாக்கத்தை எழுதுகிறேன். இஸ்லாம் பெண்களுக்கு சமவுரிமை வழங்கிய மார்க்கம். உயிரோடு புதைக்கப்பட்ட பெண்களை இஸ்லாமிய உம்மத்தின் தாய்மாராக மாற்றிய மார்க்கம். அன்னை பாத்திமா, கதீஜா, சுமையா (ரழி) என பலரை வீரப்பெண்மணிகளாக மாற்றிய மார்க்கம். பெண் அடிமைத்துவத்தை எதிர்த்த மார்க்கம்.

இது ஒரு புறமிருக்க இன்றைய நவீன உலகில் அஜ்னமி மஹ்ரமி பேணி ஒரு பெண் தொழில் புரிவது இயலாத காரியம். மாற்று மதத்தவர்களின் இடைஞ்சல்களுக்கு ஆளாகமல் வீட்டில் இருப்பது சிறப்பு என சிந்திக்கும் காலம். ஒரு பெண்ணை பொறுத்தவரை அவள் திருமணமாகும் வரை அவள் தந்தை தான் அவளுக்கு ஹீரோ.

இந்த விடயத்தில் எம் தந்தைமார் குறைவைப்பது கிடையாது. என்றாலும் ஒரு இடத்தில் தவறு விடுகிறார்களோ என ஒரு ஐயம். ஆனால் ஒரு தந்தையின் நிலையிலிருந்து உங்களது செயற்பாடு சரியானதாக இருக்கலாம்.
அன்பர்களே! பிறந்தது முதல் உங்கள் மகளது ஆசைக்கு அனைத்தையும் செய்யும் நீங்கள். பிறந்தது முதல் அவளது இலக்குக்கு வழிகாட்டி துணை நிற்கும் நீங்கள். பிறந்தது முதல் அவளுக்கு பிடித்ததை மாத்திரமே வாங்கிக் கொடுக்கும் நீங்கள்.

உங்களது ஆசை மகள். உங்களது செல்ல மகள். உலகு பற்றி அறிந்து தனது துறை இது தான் என தெரிவு செய்து அதில் அவளது ஆசைகளை பறக்கவிட்டு, கனவில் மிதந்து முழுமூச்சாக அத்துறையில் இயங்க ஆரம்பிக்கும் போது அவளது வயது 18 தாண்டியிருக்கும். எனது துறை இது தான். இத் துறையில் ஏதாவது நான் சாதிக்க வேண்டும் என துடிக்கும் அந்த உள்ளத்தை, என் ஆரம்பம் முதலே எனக்கு உறுதுணையாக இருந்த என் பெற்றோர் இத்துறையில் சாதிக்க எனக்கு துணைபுரிவர் என சிந்தித்து உங்களை நம்பி அவள் சாதிக்க முயலும் சந்தர்ப்பத்தில், “பெண் பிள்ளை வீட்டில் இரு” என ஒரு முட்டுக் கட்டை. “திருமணம்” என ஒரு முட்டுக்கட்டை போட்டு உங்கள் மகளின் பிஞ்சு உள்ளத்தை சீமெந்து பூச்சால் அடைத்துவிடுகிறீர்கள்.

அவளும் தன் அத்துனை கனவையும் மூட்டைக்கட்டி எரித்து விட்டு உங்களது சந்தோசத்திற்காக அந்த வாழ்க்கைக்கு தயாராகிறாள். இப்படி ஆசைகளை மூட்டை கட்டி வைத்த பலரது கண்ணீரும் மூட்டை கட்ட தயாராகும் பலரது கண்ணீருமே இதை எழுத வைத்தது.

அன்பு பெற்றோர்களே! உங்களை குறையாக சொல்லவில்லை. மகளது மகிழ்ச்சிக்காக நீங்கள்தான் படாது பாடு படுகிறீர்கள். அந்த மகளது உண்மையான சந்தோசம் எது என சற்று ஆராய்ந்து பாருங்கள். பல துறையில் சாதிக்க அவா கொண்ட பெண்கள், எம் முஸ்லிம் யுவதிகள் கனவையும் சாதனையும் மறந்து கரும்புகையில் வரும் கண்ணீரோடு கண்ணீரை கொட்டி தீர்ப்பதை அறிந்த எந்த உள்ளமும் அவர்களது துனை பயணத்திற்கு துணபுரிவார்களே தவிர தடையாக இருக்க மாட்டார்கள்.

ஆகவே சிந்தித்து செயல்படுங்கள். பழமை பேணுபவர்கள் என கூறி 18 வயதிலே சாதனை பெண்ணை சோதனை பெண்ணாக மாற்றாமல் சாதிக்க நாமும் துணையாக இருப்போம்.

பஸீம் இப்னு ரஸுல்
இஸ்லாமிய கற்கை நெறிகள் பீடம்,
ஜாமியா நளீமியா கலாபீடம்.
நிகவெரட்டிய