உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு அறிக்கையை மறைக்க வேண்டிய தேவையில் – ஜனாதிபதி

15

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக் குழுவின் அறிக்கையை மறைக்க தனது அரசாங்கத்திற்கு எந்தவிதமான தேவையும் இல்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வலியுறுத்தி கூறினார். அது சம்பந்தமாக எந்தவொரு நபருடனோ அல்லது தரப்பினருடனோ உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளவோ எவரையும் மகிழ்விக்கவோ வேண்டிய தேவையும் இல்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரு தேசிய பிரச்சினை. அதனை ஒரு அரசியல் கருப்பொருளாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்த அனர்த்தம் தொடர்பில் சரியான முறையில் செயல்படுவது தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செய்ய வேண்டிய ஒரு பொறுப்பாகும். தாக்குதல் குறித்து பேராயருக்கு இருக்கும் வேதனை நியாயமானது. அவர் அதைப் பற்றி பேசுவது சரியானது. தாக்குதல் நடந்த நேரத்தில் அமைதியாக இருந்த அப்போதைய அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் இப்போது கருப்புக் கொடிகளை ஏற்றுவது கேலிக்குரியதாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது 2019 ஆம் ஆண்டு இடம்பெற்றது. அப்போதைய அரசாங்கத்தின் தவறான கொள்கைகளால் ஏமாற்றமடைந்த மக்கள், கூட்டுறவு சங்க தேர்தல்களிலும், 2018 பெப்ரவரியில் நடந்த உள்ளூராட்சித் தேர்தல்களிலும் அரசாங்கத்திற்கு தங்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை காட்டி தான் ஆட்சிக்கு வரவில்லை என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

2015 க்கு முன்பு இருந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளித்தது. 2015 ல் ஆட்சிக்கு வந்தவர்கள் தேசிய பாதுகாப்பை மறந்துவிட்டார்கள். எத்தகைய மனித உரிமை குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டாலும், 2015 க்கு முன்பிருந்த பாதுகாப்பு கொள்கை மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அரசாங்கமே பொறுப்பு என்பதை ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். தமிழ் பிரிவினைவாத பயங்கரவாதத்துக்கோ அல்லது இஸ்லாமிய தீவிரவாதத்துக்கோ எந்த வகையிலும் இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அடிப்படையற்ற அனைத்து குற்றச்சாட்டுகளையும் முற்றாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

இன்று (06) முற்பகல் குருணாகல் மாவட்டத்தில் கிரிபாவ பிரதேச செயலக பிரிவில் உள்ள வேரகல கிராம அதிகாரி பிரிவில் உள்ள மதுராகம விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 13 வது ‘கிராமத்துடன் உரையாடல்’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.