ஜமால் கசூகியின் படுகொலை: சவூதி இளவரசரை தண்டிக்க வேண்டும் – அமெரிக்க சிவில் சமூகம் ஆர்ப்பாட்டம்

35
  • முஷாஹித் அஹ்மத்

பத்திரிகையாளர் ஜமால் கசூகியின் படுகொலைக்கு உத்தரவிட்ட பட்டத்திற்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் மீது அனைத்து வகையான தடைகளையும் விதிக்க வேண்டும் என அமெரிக்காவின் சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அமெரிக்காவில் இயங்கும் 40 இற்கும் மேற்பட்ட சிவில் சமூகக் குழுக்கள் மார்ச் 05 ஆம் திகதி வொஷிங்டன் மற்றும் நியூயோர்க் நகரங்களில் பாரிய எதிர்ப்புப் பேரணிகளை நடத்தின. அமெரிக்காவின் தேசியப் புலனாய்வுத் துறை கசூகியின் படுகொலை குறித்து வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் பின் சல்மான் இக்கொலையுடன் எவ்வாறு தொடர்புபடுகிறார் என்பது வெளிப்படுத்தப்பட்டது.

26 பெப்ரவரி 2021 அன்று அமெரிக்கப் புலனாய்வுத் துறை பணிப்பாளர் உத்தியோகபூர்வமாக வெளியிட்ட பத்திரிகையாளர் ஜமால் கசூகியின் படுகொலை தொடர்பான அறிக்கையில் “கசூகியை கடத்தி கொலை செய்வதற்கு பின் சல்மான் ஒப்புதல் அளித்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கசூகி தனது அதிகாரத்திற்கு அச்சுறுத்தல் என பின் சல்மான் கருதியமையே இக்குரூரமான படுகொலைக்கு மூல காரணம் என அறிக்கை கூறுகின்றது. பத்திரிகையாளரை நிரந்திரமாக அமைதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து வன்முறை வழிகளையும் கையாளுமாறு பின் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் பதவியிலிருந்து நீங்கும்வரை இந்த அறிக்கையை புலனாய்வுத் துறை வெளியிடாமல் மறைத்து வந்தது. ட்ரம்பிற்கும் சவூதிக்கும் இடையில் காணப்பட்ட கள்ள உறவுகளே அதற்கான காரணமாகும். சியோனிஸ இஸ்ரேல் தனது கைப்பிள்ளையான பின் சல்மானை பாதுகாக்கும் நோக்கில் இவ்வறிக்கையை வெளியிடாது ட்ரம்ப் நிர்வாகத்தை அழுத்தி வந்தது. ஜோ பைடன் பதவியேற்றதும் அறிக்கை வெளியே வந்தது.

இது போன்ற பல முக்கிய புலனாய்வு அறிக்கைகள் அமெரிக்க ஜனாதிபதிகளின் விருப்பத்திற்கு ஏற்ப மூடி மறைக்கப்பட்டது என்பதற்கு பல நீண்ட வரலாறுகள் உள்ளன. அதிஷ்டவசமாக இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

அமெரிக்க சிவில் சமூக அமைப்புகளில் மிக முக்கியமானது அமெரிக்க இஸ்லாமிய உறவுகள் சபை (Council on American – Islamic Relation – CAIR) ஆகும். இதுவே சிவில் உரிமைகளுக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடும் மிகப் பெரிய இஸ்லாமிய அமைப்பாகும். இதுவே பிற சிவில் சமூக அமைப்புகளுக்குத் தலைமை தாங்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளது.

இதனோடு இணைந்து செயல்பட்ட மற்றொரு சிவில் சமூக நிறுவனம் DAWN ஆகும். Democracy now for the Arab World என்பதன் சுருக்கக் குறியீடே டவுன் என்பதாகும். அமெரிக்காவின் இந்த சிவில் சமூக நிறுவனங்கள் ஒன்றிணைந்து பைடன் நிர்வாகத்திற்கு முன்வைத்துள்ள கோரிக்கை என்ன? “பூகோள  மெக்னித்ஸ்கி சட்டத்தின் கீழ் என்னென்ன வகையான தடைகளையெல்லாம் விதிக்க முடியுமோ அவை அனைத்தையும் பின் சல்மான் மீதும் கொலையுடன் சம்பந்தப்பட்ட ஏனைய சவூதி பிரஜைகள் மீதும் விதிக்க வேண்டும்.

ஜனாதிபதி பைடன் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்கள் மீது முழுமையான பயண, அரசியல், பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும். அதில் பின் சல்மான் மற்றும் ஏனைய சவூதிப் பிரஜைகளின் சொத்துக்கள் முடக்கப்பட வேண்டும். அமெரிக்காவுக்கான வீசாக்கள் நிறுத்தப்பட வேண்டும். சவூதி அரேபிய தலைமைத்துவத்தின் நிதித் துறை பொது முதலீட்டு நிதி என்பவற்றுக்கும் தடை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் சவூதியிலிருந்து துருக்கிக்குப் பயணமான ஜமால் கசூகியின் கொலையாளிகள் விமானம் சொந்தமானது.

வழமை போன்று சவூதி அதிகார வர்க்கம் அமெரிக்கப் புலனாய்வு அறிக்கையை ஒருதலைப்பட்சமாக நிராகரித்துள்ளது. சாம்ராஜ்யத்தின் தலைமை குறித்து அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள முடிவுரை பிழையானது எனவும் நற்பெயருக்குக் களங்கம் கற்பிப்பவை எனவும் சவூதியின் வெளிவிவகார  அமைச்சு கூறியுள்ளது.

ஜோ பைடன் உலகம் எதிர்பார்த்தது போன்று ஒரு நேர்மையானதும் நடுநிலையானதுமான ஜனநாயகத் தலைவராக இருக்க மாட்டார் என்பதை கசூகியின் படுகொலை தொடர்பான அவரது நிலைப்பாடு உறுதி செய்துள்ளது. சவூதியின் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதித் தலைவர் அஹ்மத் அல் அஸ்ரி உட்பட சில சவூதிப் பிரஜைகள் மீது பயணத் தடைகளை விதித்ததோடு பைடன் நிர்வாகம் அறிக்கையிலிருந்து விலகிச் சென்றுள்ளது.

இதேவேளை, அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஹேக் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இஸ்ரேலை விசாரணைக்கு உட்படுத்துவதை தாம் ஆதரிக்கவில்லை என கருத்து வெளியிட்டுள்ளார். பைடன் நிர்வாகம் கசூகி கொலை தொடர்பில் சவூதி இளவரசரைத் தண்டிப்பதற்கு மறுப்பதானது சவூதி ஆட்சியாளர்களோடு கருத்து முரண்பாடு கொண்டவர்களுக்கு மென்மேலும் அச்சுறுத்தலாக அமையும் என வெளிநாடுகளில் வாழும் சவூதி அரச எதிர்ப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். ஏற்கனவே வெளிநாடுகளில் வாழும் பின் சல்மான் எதிர்ப்பாளர்களுக்கு சவூதி புலனாய்வு அதிகாரிகளால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

லண்டனிலிருந்து வெளியாகும் காடியன் பத்திரிகைக்கு சமீபத்தில் சவூதி பிரஜை ஒருவர் வழங்கிய பேட்டியில் பின் சல்மான் மீது வெள்ளை மாளிகை தேவையான தடையுத்தரவுகளைப் பிறப்பிக்காவிட்டால் 35 வயது நிரம்பிய இளவரசரை அது மென்மேலும் பலப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

சவூதி அரசாங்கத்தின் தீவிர விமர்சகர் காலித் அல் ஜப்ரி இந்த அறிக்கை குறித்து கருத்து வெளியிடுகையில் இந்த அறிக்கை வரவேற்கத்தக்கது. ஆனால், இக்கொலைக்கு முஹம்மத் பின் சல்மானின் நேரடிப் பொறுப்பு காட்டமாக வலியுறுத்தப்படாமை அவரை மேலும் ஆபத்தானவராக மாற்றி விடும்.

ஜப்ரி சவூதி அறேபியாவின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரியான சஅத் அல் ஜப்ரியின் மகனாவார். தற்போது கனடாவில் வசித்து வருகின்றார். அவரது சகோதரர்களான சாரா மற்றும் உமர் ஆகியோர் சவூதி அறேபியாவில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அல் ஜப்ரி ஐக்கிய அமெரிக்க நீதிமன்றமொன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அதில் பின் சல்மான் ஒரு கொலைக் குழுவை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்றும் தான் விரும்புகின்றவர்களைக் கொலை செய்வதற்கு அக்குழுவைப் பயன்படுத்துகிறார் என்றும் தனக்கும் அத்தகைய கொலை அச்சுறுத்தல் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தன்னைப் போன்ற பலர் பின் சல்மானின் கொலைப் பட்டியலில் உள்ளதாக ஜப்ரி சவூதி இளவரசருக்கு எதிரான வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

2018 ஒக்டோபர் 02 இல் ஜமால் கசூகி துருக்கி நகரான ஸ்தன்பூலில் அமைந்துள்ள சவூதி துணைத் தூதுவராலயத்தில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அவரது கொலை சர்வதேச சமூகத்தை திடுக்கிட வைத்தது. பாதுகாப்பு அச்சுறுத்தலின் காரணமாக நீண்டகாலமாக அமெரிக்காவில் வாழ்ந்து வந்த ஜமால் கசூகி, சவூதி ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை தோலுரித்து வந்த சர்வதேச புகழ்பெற்ற ஒரு பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.