இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் மியன்மார்

33

பெப்ரவரி 21 இல் இராணுவப் புரட்சி இடம்பெற்ற மியன்மாரில் இரத்தம் சிந்தத் தொடங்கியுள்ளது. இதுவரை எதிர்ப்பில் ஈடுபட்ட 50 பேரை இராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. கடந்த வாரம் 19 வயதான யுவதி ஒருவர் மீது மியன்மார் இராணுவம் சுட்டதில் அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார். கடந்த 4 ஆம் திகதி 26 வயது நிரம்பிய இளைஞர் ஒருவரின் கழுத்தில் சுடப்பட்ட போது ஸ்தலத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார். இராணுவம் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் நிலைக்கு வந்துள்ளது.

ஐ.நா. பாதுகாப்புச் சபை மியன்மார் விவகாரத்தில் இரண்டுபட்டுள்ளதாக மியன்மாருக்கான ஐ.நா. தூதுவர் கவலை வெளியிட்டுள்ளார். இதுவரை 50 பொதுமக்கள் இராணுவத்தினரின் நேரடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். மியன்மாரில் இதற்கு முன்னரும் பலமுறை இராணுவம் ஆயுதப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. ஆனால், இதுபோன்ற மக்கள் எதிர்ப்பு அப்போது எழவில்லை.

இராணுவத்தினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்குமாறும் ஜனநாயக விழுமியங்களுக்கு இடம் வழங்குமாறும் கோரிக்கை விடுத்து மில்லியன் கணக்கான மக்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இராணுவத்தின் நேரடி துப்பாக்கிச் சூட்டுக்கு அப்பால் இராணுவத்தின் கையாட்கள் ஆர்ப்பாட்டங்களை வழிநடத்துகின்றவர்களை இனங்கண்டு கூரிய ஆயுதங்களால் அவர்களைத் தாக்கும் சம்பவங்கள் பதவிவாகியுள்ளன.கொல்லப்பட்டவர்களில் சிலர் கூரிய கத்திகளால் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கைகள் காட்டுகின்றன.

நெகுவே பிராந்தியத்தில் இத்தகைய சம்பவங்கள் பதவிவாகியுள்ளன. இராணுவத்தின் அடக்குமுறைகளையும் பொருட்படுத்தாமல் மக்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்வதால் எதிர்ப்பில் ஈடுபடுபவர்கள் மென்மேலும் கொல்லப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகின்றது.

வணிகத் தலைநகரமான யங்கோனில் பெருந்திரளான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தெற்கிலுள்ள கரேன் மாநிலத்திலும் மக்கள் கொந்தளிக்கின்றனர். ஆனால், இராணுவ ஆட்சி மீது சர்வதேச அழுத்தம் போதுமானதாக இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. மியன்மாருக்கான ஐ.நா.வின் விசேட தூதுவர் கிறிஸ்டின் பேர்கனர் பாதுகாப்புச் சபை விரைந்து செயல்பட வேண்டும் என்றும் அமைதி ஆர்ப்பாட்டங்கள் மீது இராணுவம் வன்முறைகளைப் பிரயோகிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கிறஸ்டின் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மியன்மார் இராணுவத்தை நாம் எவ்வளவு காலத்திற்கு அனுமதிக்கப் போகின்றறோம். இங்கே பாரிய மனிதாபிமான நெருக்கடியொன்று தலைதூக்கியுள்ளது. 50 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டு இராணுவம் ஜனநாயகத்திற்கு இடம்கொடுக்க வேண்டும். இதற்கு பாதுகாப்புச் சபை தலையிட வேண்டும் என்று கிறிஸ்டின் அனுப்பியுள்ள அவரசக் கடிதத்தில் வேண்டியுள்ளார்.

மியன்மார் இராணுவப் புரட்சியை மறைமுகமாக ஆதரிக்கும் சீனா கூட வன்முறைகளைப் பிரயோகிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ரஷ்ய, சீனா என்பன பாதுகாப்புச் சபையில் மியன்மார் இராணுவத்திற்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களை எதிர்த்து வருவதாகக் கூறப்படுகின்றது. இதனால் ஒன்றிணைந்த தீர்மானமொன்றை நிறைவேற்றுவதில் நெருக்கடிகள் தோன்றியுள்ளமை கவலைக்கிடமானது என கிறிஸ்டின் தெரிவித்துள்ளர்.

பெப்ரவரி 01 இல் இராணுவம் அரசாங்கத்தைக் கைப்பற்றியதை அடுத்து நாட்டில் மிகப் பெரும் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் மூலம் அரசாங்கத்தைக் கைப்பற்றிய ஜனநாயகத்திற்கான தேசிய லீக் தலைவர்கள் இராணுவத்தினரால் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் அக்கட்சியின் தலைவரான ஆன்சாங் சூகியும் அடங்கியுள்ளார். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களைக் கலைப்பதற்கு உண்மையான ரவைகளையும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் பயன்படுத்துவதனால் இதுவரை 50 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

மியன்மாரின் இன்றைய நிலை சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளபோதும் உருப்படியான தீர்மானங்கள் எதனையும் பாதுகாப்புச் சபை வெளியிடாததால் இராணுவம் தனது போக்கை எந்தத் தயக்கமுமின்றி முன்னெடுத்து வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.