மாணவர்களின் பாடசாலை மட்டத் தலைமைத்துவம் – மொழி, தகவல், தொழில்நுட்பத் தேர்ச்சிகள்

19

மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை விருத்தி செய்யும் முக்கிய காரணிகளில் மொழியின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். மொழி என்பது கருத்துள்ள ஒலிகளினதும் படிவங்களினதும் ஒருங்கமைப்பாகும். மனித வரலாற்றுக் கண்டுபிடிப்புக்களில் தலைசிறந்தது மொழியைக் கண்டுபிடித்தமையே. மனித உணர்வுகளினதும் கருத்துக்களினதும் பரிமாற்று ஊடகமாக மொழி தொழிற்படுகின்றது. வெகுசன தொடர்புபடுத்தல், பின்னூட்டல் போன்ற செயற்பாடுகளுக்கும் மொழி அவசியமாகின்றது.

இனப் பண்பாடுகளை வெளிப்படுத்தும் ஊடகமாகவும் தாய்மொழி விளங்குகின்றது. தாய்மொழி ஆற்றல் உள்ளவர்கள் ஏனைய மொழியாற்றல்களையும் வளர்த்து சிறந்த தலைமைத்துவ பண்புகளைக் கொண்டவர்களாக இருப்பர் என நவீன மொழி உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வரலாற்றோட்டத்தில் அறிவியல் புரட்சி, தொழிற் புரட்சி போன்றன ஏற்படுத்திய சமூக, பொருளாதார, மனித வள விளைவுகளைத் தொடர்ந்து இன்று ஏற்பட்டு வரும் தகவல் புரட்சியும் அதற்கு அடிப்படையிலான இலத்திரனியல் புரட்சியும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் நாகரிக வாழ்விலும் பண்பாட்டிலும் எண்ணற்ற விருத்திகளை ஏற்படுத்தி வருகின்றன.

நிகழ்கால கல்விச் சீர்திருத்தங்கள் இவற்றை உள்வாங்கி கல்வி முறையை செழுமைப்படுத்தி, எதிர்கால சந்ததியினரான இன்றைய மாணவர்கள் தலைமைத்துவப் பண்புகளை செழித்தோங்கச் செய்கின்றன. அதனால், இந்த நீரோட்டத்தில் எமது மாணவர்களை விரைவில் இணைக்க வேண்டியுள்ளது. சர்வதேச மொழியான ஆங்கிலம், மற்றும் சீன மொழிகளில் எம் மாணவர்களில் தேர்ச்சி பெறவும் கணினி அறிவை அனைவரும் பெறவும் நாம் வழிசெய்ய வேண்டும்.

இன்றைய உலகம் முழுவதும் தகவல் ஆட்சியே (இதூஞஞுணூஞிணூச்ஞிதூ) நடக்கின்றது. தகவல்களை ஆள்பவர்கள் உலகை ஆள்பவர்களாக உள்ளனர். பொதுவாக தகவல்களின் அசைவியக்கம் விரைவாக நிகழ்கின்ற உலகில் ஒரு சமூகத்தில் பரவச் செய்வதில் தங்கியுள்ளது. இச்செயன்முறையில் பாடசாலையின் கணினி அறைகளும் வகுப்பறைகளும் நூலகங்களும் மிக முக்கிய பங்கை வழங்குகின்றன. இவற்றினூடாகவும் சுற்றாடல் தொடர்பான கள ஆய்வு வேலைகளூடாகவும் சுற்றாடலையும் புரிந்து மாணவர்கள் தமது தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக் கொள்வர்.

இணைப்பாடவிதானமும் தலைமைத்துவமும்

மாணவர்களின் பலதரப்பட்ட ஆளுமையையும் அதனூடாக தலைமைத்துவப் பண்புகளையும் விருத்தி செய்வதில் பாடசாலை இணைப்பாடவிதான செயற்பாடுகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இவை மாணவர்களின் கூட்டுறவுக்கு வகை செய்வதோடு, ஒத்துழைத்துச் செயலாற்றும் தன்மையை வளர்க்கின்றது.

விளையாட்டு நடவடிக்கைகள் வெற்றி, தோல்விகளை ஏற்று தலைமைத்துவ ஆளுமைப் பண்புகளை பல்வேறு பரிமாணங்களில் விரித்தி செய்கின்றது. மட்டுமன்றி, உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றது. சாரணியம், சமூகத் தொண்டுகள், இலக்கிய, நுண்கலை, விஞ்ஞான, மொழியியல் மன்றங்கள், நூல் வெளியீடுகள் மாணவர்களிடம் பல்வேறு திறன் விருத்திகளை உருவாக்குகின்றன.

புதிய கல்விச் சீர்திருத்தத்தில் சமய பாடம் விழுமிய ரீதியான தலைமைத்துவ ஆற்றலைப் பெற வைக்கின்றது. மனித வாழ்வின் உயர் மதிப்புக்களாக உள்ள வாய்மை அல்லது உண்மைப் பற்று, நேர்மையான நடத்தை, அமைதி நாட்டம், பிறரிடம் அன்பு காட்டல் என்பவை தனிப்பட்டவரது வாழ்க்கையில் மனநிறைவையும் நடைமுறையில் சமய பாடத்தில் சிறந்த ஏ பெறுபேறு எடுக்கும் மாணவர்களுக்கு தொழுகையில் ஓதுவது தெரியாது இருக்கின்றது. எனவே சமய பாடத்தை நடைமுறை வாழ்வுடன் இணைத்து கற்பிக்கும்போதே மாணவர்கள் அதன் மூலம் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக் கொள்வர்.

சுய கற்றலினூடாக கற்பதற்குக் கற்றல்

புதிய கல்விச் சீர்திருத்த செயல்நெறிகளில் மாணவர்களிடையே தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதற்கு வாழ்நாள் முழுவதும் கற்றல் என்ற எண்ணக்கரு முதன்மை நிலையில் உள்ளது. அத்துடன் இணைந்ததாக கற்பதற்குக் கற்றல் தேர்ச்சி அனைத்துப் பாடங்களினூடாகவும் பிரயோகிக்கப்படுகின்றது. இந்த கற்றலுக்காகக் கற்றல் எனும் தேர்ச்சி சுயகற்றலினூடாக, சுய ஆக்கத்திறனூடாக வளர்கின்றது.

அறிவுக்கும் தேர்ச்சிக்கும் முதலிடம் வழங்கும் காலப் பகுதியில் நாம் வாழ்ந்து வருகின்றோம். பண்டைக் காலத்தில் உடற்பலம் கொண்டவன் சமூகத்தில் அதிகாரம் செலுத்தினான். மானிய முறைச் சமூகத்தில் நில உடைமையாளரும் முதலாளித்துவ சமூகத்தில் மூலதனம் படைத்தவனும் அதிகாரமும் செல்வாக்கும் செலுத்தினர். ஆனால், இன்றைய நவீன சமூகத்தில் கல்விப் புலமையும் நிபுணத்துவ அறிவும் கொண்டோர் அதிகாரம் செலுத்துவதைக் காண முடிகின்றது. இது கற்பதற்குக் கற்றல் எனும் வாழ்நாள் கல்வியின் அவசியத்தை உணர்த்தி நிற்கின்றது.