முல்லேரியாப் போரில் முஸ்லிம்களின் பங்கேற்பு

54

போர்த்துக்கேயருக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் நடைபெற்ற முல்லேரியப் போர், இலங்கையின் வரலாற்றில் இடம்பெற்ற தீர்மான கரமான ஒரு போராகும். ஏனெனில், முல்லேரியப் போரில் போர்த்துக்கேயர் தோற்கடிக்கப்பட்டனர். உள்ளூர் வரலாற்று ஏடுகளின்படி செழுமைமிக்க முல்லேரிய நிலம்போர்த்துகேய இன சம்ஹாரத்தினால் செந்நிறமாகியது. இவ்வெற்றியின் மூலம் சீதவாக்கை இராஜ்யம் போர்த்துக்கேயரின் விஸ்தரிப்பை சவாலுக்கு உட்படுத்தும் அளவுக்கு இராணுவப் பலம் பெற்றது.

1538 இல் ரைகம் பண்டாரவின் மரணத்தை அடுத்து மாயாதுன்னை ரைகம பகுதியை சீதவாக்கையுடன் இணைத்தபோது கோட்டை இராஜ்யத்தையும் ஆக்கிரமித்தான். எவ்வாறாயினும். 7 ஆம் புவனேகபாகு மன்னன் போர்த்துக்கேயரின் உதவியோடு மாயாதுன்னையின் படையை தோற்கடிக்கச் செய்தான். இறுதியில் மாயாதுன்னையும் புவனேகபாகுவும் தற்காலிக அமைதி ஒப்பந்தத்திற்கு வந்தனர்.

சீதவாக்கை இராஜ்யத்திற்கு எதிராக போர்த்துக்கேயர் முழு அளிவலான தாக்குதல் ஒன்றை நடாத்துவதற்கு விளைந்தபோது, 7 ஆம் புவனேகபாகு அதனை ஆதரிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. தனது ராஜ்யத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கத்தில் மட்டுமே அவன் போர்த்துக்கேயரின் உதவியைப் பெற்று வந்தான்.

1551 இல் 7 ஆம் புவனேகபாகு இறந்தான். அவனது இறப்புக்குப் பின்னர் அவனது கிறிஸ்தவத்தைத் தழுவியிருந்த பேரனாகிய தர்மபால கோட்டை மன்னனாக முடிசூடினான். ஆனால், அவன் நாம் முன்னர் குறிப்பிட்டதுபோன்று போர்த்துக்கேய ஆதிக்கத்தின் கீழ் ஒரு பொம்மை மன்னனாகவே செயல்பட்டான். இக்காலகட்டத்தில் மாயாதுன்னை கோட்டையின் எல்லைப் புறத்தை ஆக்கிரமித்து சீதவாக்கையின் செல்வாக்கை விரிவுபடுத்தினான்.

1557 – 1558 காலப் பகுதியில் கோட்டையை முழுமையாக தன் வசம் ஈர்ப்பதற்கு மாயாதுன்னை முயற்சித்தான். ஆயினும் போர்த்துக்கேயர் அம்முயற்சியை முறியடித்தனர். மாயாதுன்னையின் சீதவாக்கை தமக்கு அச்சுறுத்தல் எனக் கருதிய போர்த்துக்கேயர் சீதவாக்கையை ஆக்கிரமிப்பதற்குத் திட்டம் தீட்டினர்.

1562 ஆம் ஆண்டில் முல்லோரியா எனும் இடத்தில் போர்த்துக்கேயத் தளபதி எபென்சோ பெரீரா டி லகேதா என்பவனின் தலைமையில் சீதவாக்கையை ஆக்கிரமிக்கச் சென்ற படை மாயாதுன்னையின் படைகளால் தோற்கடிக்கப்பட்டது. அல்பொன்சோ மலேரியாவினால் பாதிக்கப்பட்டு, பின்னர் கோமா நிலைக்குச் சென்றதனால் இந்தியாவின் கோவாவில் நிலைகொண்டிருந்த போர்த்துக்கேயர் ஜோர்ஜ் டி மெனசஸ் எனும் இராணுவத் தளபதியின் தலைமையில் ஒரு படைப் பிரிவை இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.

அவன் இலங்கை வந்தபோது சீதவாக்கை சாம்ராஜ்யத்தை வேரோடு அழிப்பதாக சபதமிட்டான். அவனது ஆத்திரமூட்டும் ஒவ்வொரு நடவடிக்கையும் இறுதியில் முல்லேரிய யுத்தத்திற்கு வழிகோலியது. போர்த்துக்கேயர் களனி கங்கையின் தென் கரைப் பகுதியினால் வராகொட ஊடாக முல்லேரியாவை நோக்கி முன்னேறிச் சென்றனர். அவர்களின் நோக்கம் களனி கங்கையின் வடக்குக் கரையில் அமைந்திருந்த மாபிடிகம பாதுகாப்பு அரணைக் கைப்பற்றுவதாக இருந்தது. அது ஒரு கேந்திரஸ்தானமாக விளங்கியது. சீதவாக்கைக்கான நில ரீதியான பாதை மற்றும் களனி ஆற்றைக் கட்டுப்படுத்தும் அரணாக அது கருதப்பட்டது. எனவே, இதனைக் கைப்பற்றுவதன் மூலம் சீதவாக்கையை முழுமையாக ஆக்கிரமிக்கலாம் என்று போர்த்துக்கேயர் எதிர்பார்த்தனர்.

போர்த்துக்கேயரின் இந்த ஆக்கிரமிப்புத் திட்டம் குறித்த செய்தி மன்னன் மாயாதுன்னையை எட்டியது. விழிப்படைந்த அவன், விரைந்து செயல்படலானான். அவனது மகன் டிக்கிரி பண்டார தலைமையில் ஹேவாகமையை நோக்கி ஒரு படையை அனுப்பினான். அப்படை ஹேவாகமயை வந்து சேர்ந்தது. அத்துரகிரி கோரள, ஹேவகம் கோரள, போரத்தொட, ஹோகந்தர போன்ற பிரதேசங்களிலிருந்தும் படையினரை ஒன்றுதிரட்டி சீதவாக்கை படையைப் பலப்படுத்திக் கொண்டான்.

இதற்கிடையில் மனசெஸ் மற்றும் மெலோ ஆகியோர் தலைமையிலான போர்த்துக்கேயப் படை சீதவாக்கை எல்லைப் புறத்திலிருந்து குறிப்பிட்ட சில தாக்குதல்களை நடத்தி விட்டு பின்வாங்கினர்.

அதன் மூலம் களனி கங்கையின் தென் கரையில் காணப்பட்ட சிறியதொரு காப்பரணைக் கைப்பற்றினர். இத்தாக்குதலில் காப்பரணில் இருந்த 300 பேர் கொல்லப்பட்டனர். இச்சிறு வெற்றியினால் உற்சாகமடைந்த போர்த்துக்கேயர் மாபிடிகம பெரும் காப்பரணை முழுமையாகக் கைப்பற்றுவதற்கு தமது படைகளைத் தயார் செய்தனர். இச்சந்தர்ப்பத்தில் சீதவாக்கை படையினர் ஹேவாகமயில் தங்கியிருப்பதான செய்தி மெனசஸை எட்டியது. அங்கு விரைந்து செல்லுமாறு தனது படைக்குக் கட்டளையிட்டான்.

மெனசஸின் நகர்வுகளை அறிந்துகொண்ட டிக்கிரி பண்டார விக்ரம சிங்க முதலி என்பவரின் தலைமையில் ஒரு படையை அனுப்பி வைத்தான். அதிகாலை வேளை முல்லேரியாவ கிராமத்தில் இவ்விரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன.

முதல் முல்லேரியப் போர்

முல்லேரிய யுத்தத்தை வரலாற்றாசிரியர்கள் இரண்டாகப் பிரித்து நோக்குகின்றனர். முதலாவது முல்லேரிய யுத்தம் ஒரு சில நாட்களே நடந்தன. அதில் சீதவாக்கை தோற்கடிக்கப்பட்டது. 200 இறந்த உடல்களை விட்டு விட்டு சீதவாக்கை படை ஹேவாகமையை நோக்கிப் பின்வாங்கியது.

விக்ரமசிங்க முதலி கூட இந்த யுத்தத்தில் கடும் காயமடைந்தார். மெனசஸ் சீதவாக்கையை அழிப்பதற்கு முழு மூச்சுடன் போரில் ஈடுபட்டான். பின்வாங்கிச் சென்ற சீதவாக்கை படை இடையில் ஓரிடத்தில் தங்கியது. அவ்விடத்தைத் தாக்குமாறு மெனசஸ் தனது படைக்குக் கட்டளையிட்டான். ஆனால், விக்ரசிங்க முதலியாரால் போர்த்துக்கேயப் படையை பின்வாங்கச் செய்ய முடிந்தது.

திருப்பித் தாக்குமாறு மெனசஸால் இடப்பட்ட கட்டளையை அவனது படையினரால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. அவர்கள் வேகமாகப் பின்வாங்கிச் சென்றனர். போர்த்துக்கேயர் கொண்டு வந்த பெருமளவு வெடிபொருட்கள் அவர்களால் கைவிட்டுச் செல்லப்பட்டது. அவற்றை முதலி கைப்பற்றிக் கொண்டார்.

இரண்டாம் முல்லேரியப் போர்