பொருளாதாரம் நல்ல நிலைக்குத் திரும்ப ஒரு தசாப்தம் எடுக்கும் – முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

65

தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடருமானால், நாட்டு மக்கள் தமது ஒரு நாள் உணவைத் தவிர்க்க வேண்டியிருக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பொரள்ள பிரதேசத்தில் இளைஞர்கள் முன்னிலையில் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

வியாபாரம் இன்று நஷ்டத்தில் செல்கிறது. கம்பனிகள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இது 2022 ஆம் ஆண்டிலும் தொடரும். பொருளாதாரம் மீளவும் முன்னேற ஒரு தசாப்தம் ஆகும். நாங்கள் அரசாங்கத்தில் இருந்த போது ஒரு நல்ல அடித்தளத்தை இட்டோம். சுகாதார சேவைகளை மேம்படுத்தினோம்.

கடன்களைச் செலுத்துவதற்கும் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்யவும் எமது ஆட்சியின் போது ஆரம்பித்த வேலைத்திட்டம் இன்று சிதைந்துவிட்டதை நினைத்து வருத்தப்படுகிறேன். 1977 க்குப் பிறகு திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் நாடு பெற்றுக் கொண்டதை இழக்க நேரிடும் என்பதையிட்டு நான் கவலைப்படுகிறேன். தற்போதைய நெருக்கடி தொடர்ந்தால் மக்கள் தமது ஒருவேளை உணவைத் தவிர்க்க வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் வெளிநாட்டு இருப்பு 4.5 பில்லியன் டொலராக குறைவடைந்துள்ளது. அதே நேரத்தில் இந்த ஆண்டுக்கான வெளிநாட்டு கடன் சேவைகளும் அதே தொகையாக இருக்கப் போகிறது. இதுவே முதலாவது நெருக்கடியாகும். முந்தைய அரசாங்கத்தால் வெளிநாட்டு இருப்புக்களை 7.5 பில்லியன் டொலரிலிருந்து 8 பில்லியன் டொலராக உயர்த்த முடிந்தது. அன்றாட அரசாங்க செலவினங்களை பூர்த்தி செய்ய போதுமான வருவாயை எங்களால் நிர்வகிக்க முடிந்தது. கடன் தீர்ப்பதற்கு ஓரளவிற்கு எம்மிடம் நிதி இருந்தது.

தற்போதைய ஆட்சி பாரிய கம்பனிகளுக்கு அதிக வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. இதனால் வருவாய் இழக்கப்பட்டுள்ளது. விளைவாக, அரசாங்கம் பணத்தை அச்சிடத் தொடங்கியது. தற்போதைய அரசாங்கம் அச்சிட்டுள்ள பணத்தின் அளவானது முன்னைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் எமது அரசாங்கமும் அச்சிட்ட தொகையை விட மூன்று மடங்கு அதிகமாகும். இதன் காரணத்தினால் விலைகள் உயர்ந்துள்ளன. இது ஒரு ஆரம்பம் மட்டுமே எனவும் அவர் கூறினார்.

“இந்தியா மற்றும் சீனாவிலிருந்து 2 பில்லியன் டாலர்களை அரசாங்கம் கேட்டிருக்கிறது. அந்தத் தொகையைப் பெற முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதில் ஒரு பகுதியைப் பெற்றாலும் செலவினங்களைச் சமாளிக்க அது போதாது எனவும் அவர் தெரிவித்தார்.