மெய்வல்லுநர் போட்டி அட்டவணை – 2021

58

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் பல மெய்வல்லுநர் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வருடத்துக்கான மெய்வல்லுநர் அட்டவணையை இலங்கை மெய்வல்லுநர் சங்கம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, இந்த வருடத்தின் முதலாவது மெய்வல்லுநர் போட்டியாக தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெறுகின்ற தேசிய மரதன் ஓட்டம் மற்றும் வேகநடைப் போட்டிகள் இம்மாதம் 28ஆம் 29ஆம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தினால் குறித்த போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய மெய்வல்லுநர் தகுதிகாண் போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இதில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களை எதிர்வரும் மே மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் போலந்தில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுநர் அஞ்சலோட்ட சம்பியன்ஷிப்பில் பங்குபற்றச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 99ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இது டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை பெறுவதற்கான இறுதி தகுதிகாண் போட்டியாக அமையவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, சுமார் ஒரு வருடமாக எந்தவொரு மெய்வல்லுநர் போட்டிகளிலும் பங்குகொள்ளாத கனிஷ்ட வீரர்களை இலக்காகக் கொண்டு தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடரை ஜுன் மாதம் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

குறித்த தொடரில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்கள், ஆகஸ்ட் மாதம் கென்யாவில் நடைபெறவுள்ள உலக கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடருக்கு தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.