மனித உரிமைப் பேரவையில் விவாதிக்கப்படும் உய்குர் நெருக்கடி

92
  • முஷாஹித் அஹ்மத்

சீனா உய்குர் சிறுபான்மை மக்கள் தொடர்பாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல் என கனடாவும் பிரிட்டனும் தமது கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளன. சீனாவுக்கு எதிரான தீர்மானங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதில் மேற்கத்தேய நாடுகள் கருத்தொருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. ஆயினும் அது எவ்வளவு தூரம் நடைமுறைக்கு வரும் என்பது சந்தேகத்திற்கிடமானது.

மனித உரிமை கூட்டத் தொடர்களில் மாத்திரம் இப்பிரச்சினை விவாதிக்கப்படுவதனால் பயனேதும் கிட்டப் போவதில்லை. மாறாக, ஐ.நா. பாதுகாப்புச் சபை சில தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது மட்டுமே உய்குர் சிறுபான்மை மக்களின் ஜீவமரணப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர இயலும் என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 70 ஆண்டுகளாக உய்குர் முஸ்லிம்கள் சீன அரசாங்கத்தின் பல்வேறு அரசியல் பாதுகாப்பு நெருக்குவாரங்களுக்கு உட்படுத்தப்பட்டு, தற்போது அவர்கள் மீதான அடக்குமுறை உச்ச கட்டத்திற்குச் சென்றுள்ளது. தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற இஸ்லாத்தின் அடிப்படை வணக்க வழிபாடுகளில் ஈடுபட முடியாது தடுக்கும் சட்டம் அமுலில் உள்ளது. மக்களின் உணவுச் சுதந்திரம் கூட மறுக்கப்பட்டுள்ளது.

2019 இல் சிங்ஜியாங் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிரமாண்டமான பன்றிப் பண்ணை உய்குர் முஸ்லிம்களை இலக்கு வைத்துள்ளது. ஒவ்வொரு வெள்ளி தினத்திலும் இம்மக்களுக்கு பன்றி இறைச்சி வற்புறுத்தலாக ஊட்டப்பட்டு வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

தற்போது சுமார் ஒரு மில்லியன் உய்குர் சிறுபான்மை முஸ்லிம்கள் 380 பெரும் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சீன இராணுவ அதிகாரிகள் கால்நடைகளை விடவும் மோசமாக நடாத்தி வருகின்றனர். இம்முகாம்களுக்கு சீன கம்யூனிஸ அரசு மீள்கல்வியளிக்கும் முகாம்கள் (Re-education Camp) என பெயர் சூட்டியுள்ளது. ஆனால்  இம்முகாம்களோ சித்திரவதைக் கூடங்களாகவும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தும் சிறைக் கூடங்களாகவுமே காட்சியளிக்கின்றன.

பெப்ரவரி மாதம் பிபிசி செய்திச் சேவை செய்மதியூடான காணொளிகள் மூலம் சிங்ஜியாங் சிறைக் கூடங்களில் நடப்பவற்றை உலகத்தின் பார்வைக்குக் கொண்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த சீன அரசாங்கம் பீஜிங்கில் உள்ள பிபிசி அலுவலகத்தை மூடியதோடு, அந்நிறுவனத்தின் அதிகாரிகளையும் நாட்டை விட்டு வெளியேற்றியது. தற்போது எந்த சர்வதேச ஊடக நிறுவனமும் இம்மாகாணத்தில் நுழைய முடியாத வகையில் கம்யூனிஸ இரும்புத் திரை போடப்பட்டுள்ளது.

சிங்ஜியாங் உய்குர் மக்கள் யார்?

140 கோடி மக்களைக் கொண்ட சீனாவில் 22 மாகாணங்கள் உள்ளன. அவற்றுள் சிங்ஜியாங் எனப்படும் 23 ஆவது மாகாணத்தில் வாழும் சிறுபான்மை மக்களே உய்குர் என அழைக்கப்படுகின்றனர். இவர்களின் சமயம் இஸ்லாம். மொழி துருக்கிய மொழிக்கு நெருக்கமானது. இன அடிப்படையில் துருக்கியர்களுக்கு நெருக்கமானவர்கள். மத்திய ஆசியாவின் பட்டுப்பாதை அருகில் ஒரு காலத்தில் கிழக்கு துருக்கிஸ்தான் என்ற சுதந்திரக் குடியரசொன்றில் வாழ்ந்தவர்களே உய்குர் சிறுபான்மை மக்கள்.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை ஒரு தனித்துவமான, சுதந்திரமான குடியரசாக தம்மைத் தாமே ஆண்டு வந்தவர்கள் உய்குர் முஸ்லிம்கள். 18 ஆம் நூற்றாண்டில் சீனா கிழக்கு துருகிஸ்தானை ஆக்கிரமிக்கும்வரை 90 வீதம் முஸ்லிம்களைக் கொண்ட அப்பிராந்தியத்தை முஸ்லிம்களே ஆண்டு வந்தனர். துருக்கியை அடுத்து இம்முஸ்லிம்கள் வரலாற்று ரீதியாக கஸகஸ்தான், கிரிகிஸ்தான், தாஜிகிஸ்தான் ஆகிய நாடுகளோடும் வரலாறுடனும் பின்னிப் பிணைந்தவர்கள்.

சீனா 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உய்குர் முஸ்லிம்களின் கிழக்கு துருகிஸ்தான் நாட்டை சட்டவிரோதமாக சீனாவுடன் இணைத்தது. சீனாவிடமிருந்த இராணுவப் படையைப் பயன்படுத்தி துருகிஸ்தான் ஆட்சியாளர்களை அது அடிபணிய  வைத்தது. இராணுவ ரீதியான படையெடுப்பின் மூலம் இவ்வாக்கிரமிப்பு நிகழ்ந்தமை ஆச்சரியத்திற்குரியதல்ல. எவ்வாறாயினும், எதிர்க் கிளர்ச்சியில் ஈடுபட்ட உய்குர் மக்கள் கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டனர்.

1949 வரையும் சீனாவின் ஆட்சியின் கீழ் இருந்த இப்பிராந்தியம் சுயாட்சிப் பிரதேசமாகவே இயங்கி வந்தது. மாவோ சே துங் சீனத் தலைவராக பதவி வகித்தபோது உய்குர் முஸ்லிம்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை நீடிப்பதாக வாக்குறுதியளித்தார். ஆனால், அவருக்குப் பின் வந்த சீனத் தலைவர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு துருகிஸ்தானை சீனாவுடன் இணைக்கப்பட்டதற்குப் பின்னர் சிங்ஜியாங் என அழைத்ததோடு, தன்னாட்சி அதிகாரத்தையும் இல்லாதொழித்தனர்.

சிங்ஜியாங் என்பது சீன மொழியில் புதிய பிராந்தியம் எனப் பொருள்படுகின்றது. அந்தப் பெயரிலிருந்தே அது ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியம் என்பது உறுதி. தற்போதைய சீனாவின் 23 ஆவது மாகாணமாக சீன அரசாங்கம் கருதும் சிங்ஜியாங்கில் கடந்த 70 ஆண்டுகளாக சீனா பின்பற்றி வரும் கொள்கைகளும் நடைமுறைகளும் உய்குர் மக்களை தனிமைப்படுத்தி, மன உளைச்சலுக்கு உட்படுத்தி வந்துள்ளது.

உய்குர் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு துருகிஸ்தான் சீனாவுடன் இணைக்கப்பட்ட பின்னரும் சிங்ஜியாங்கில் அவர்களே பெரும்பான்மை. ஆயினும், ஹான் இன சீனர்கள் அங்கு சிறுபான்மையாக உள்ளனர். கீழ்க்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களில் பெரும்பான்மை உய்குர் மக்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டனர். ஹான் இனத்தவர்கள் வாழும் பிரதேசங்கள் பெரும் அபிவிருத்தி கண்டன. தொழில் வாய்ப்பிலும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

படித்த, தகுதி வாய்ந்த உய்குர் மக்கள் அரச தொழிற்துறையில் புறக்கணிக்கப்பட்டனர். விவசாயமும் வணிகமும் இப்பிராந்தியத்தின் முக்கிய பொருளாதார மூலங்களாகும். ஆனால், உய்குர் மக்களின் விவசாய அபிவிருத்திக்கு சீன அரசாங்கம் எந்த வசதிகளையும் ஏற்படுத்தவில்லை. இதனால், உய்குர் மக்களின் பொருளாதாரம் திட்டமிட்டு மந்தமாக்கப்பட்டது. கல்வித் துறையிலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். பாடசாலை கல்வி மட்டுமன்றி உயர் கல்வித்துறை வாய்ப்புக்களும் இம்மக்களுக்கு மறுக்கப்பட்டன.

சீனாவின் இந்த அரச பயங்கரவாதம் கலாசார, மத, ஒடுக்குமுறையாகவும் மாற்றமடைந்தது. இஸ்லாத்தைப் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை சீனா மெதுமெதுவாக நீக்கி வந்தது. இயங்கும் பள்ளிவாயல்களின் எண்ணிக்கையைக் குறைத்ததோடு, புதிய பள்ளிவாசல்கள் நிர்மாணத்தைத் தடைசெய்தது. மத போதனைகளுக்கான பாடசாலைகளை இழுத்து மூடியது. பெண்கள் ஹிஜாப் அணிவதையும் ஆண்கள் ஜுப்பா அணிந்து தாடி வைப்பதையும் அரசு தடை செய்தது.

அரசாங்கத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் ரமழான் காலத்தில் நோன்பு நோற்க முடியாது என்று 2013 இல் சட்டம் இயற்றப்பட்டது. அவர்கள் ஜும்ஆ தினத்தில் தொழுகைக்காக செல்ல முடியாது என்றும் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன. 2015 இல் முஸ்லிம்களை அச்சமூட்டும் வகையில் சிங்ஜியாங்கில் கலவரங்கள் மூட்டப்பட்டன. பல்வேறு இடங்களில் நடந்த கலவரங்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 2013 ஏப்ரல், ஜூன் மாதங்களிலும் இனக் கலவரங்கள் மூட்டப்பட்டன. 2014 மே, ஜூலை மாதங்களில் பள்ளிவாயல்களில் இமாம்களாகப் பணியாற்றியவர்கள் அரச ஆதரவுக் கும்பல்களால் கத்திக் குத்துகளுக்கு உட்பட்டு, கொலை செய்யப்பட்டனர்.

2009 ஆம் ஆண்டிலிருந்தே தலைநகர் உரும்கியில் ஆரம்பிக்கப்பட்ட இனக்கலவரங்கள் 2016 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது என சர்வதேச மன்னிப்புச் சபை ஒரு நீண்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவ்வறிக்கையின்படி முஸ்லிம்கள் தமது சமய, கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடுவது “சட்டவிரோத மத நடவடிக்கைகள்” என முத்திரை குத்தப்பட்டது. தாடி, தொப்பி, ஹிஜாப் போன்ற கலாசார அடையாளங்களை வெளிப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றங்களாக அறிவிக்கப்பட்டன.

2016 இல் சுமார் ஒரு மில்லியன் மக்கள் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு, கால்நடைகளை விடவும் மோசமாக நடத்தப்பட்டு வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில் உய்குர் சிறுபான்மை மக்கள் மீது சீன அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துள்ள உள, உடல், சித்திரவதைகளும் கலாச்சார, மதத் தாக்குதல்களும் அவர்களில் பெரும்பான்மையானோரை மனநலம் குன்றியவர்களாக மாற்றும் உள்நோக்கம் கொண்டது என்ற விமர்சனம் இப்போது உலக அரங்கில் வெளிப்படுத்தப்படுகின்றது. அதை நிறுவும் ஆதாரங்களும் அடுக்கப்படுகின்றன.

கடந்த ஆண்டில் சும்ருத் தாவுத் எனப்படும் ஒரு பெண்மணி அதிஷ்டவசமாக இத்தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது அவர் ஐக்கிய அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் சீனாவின் தடுப்பு முகாம்களில் பல்வேறு விதமான துன்பங்களையும் நெருக்குவாரங்களையும் எதிர்கொண்டு வரும் உய்குர் சிறுபான்மை மக்கள் குறித்த ஒரு நூலையும் அவர் எழுதி வெளியிட்டுள்ளார். அவரை அல் ஜஸீரா நேர்கண்டபோது தடுப்பு முகாம்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நடத்தப்படும் விதம் குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்கள் பலரையும் கதறி அழ வைத்தது.

வெள்ளிக் கிழமைகளில் ஊட்டப்படும் பன்றி இறைச்சியை உண்ணாதவர்களுக்கு சீன அதிகாரிகளால் என்ன நடக்கும் என்பதை அவர் வர்ணித்தபோது, அவரது கண்களில் கண்ணீர் மழ்கியது. ஒரு சிறுபான்மை மக்களுக்கு உள்ள உணவுச் சுதந்திரத்தைக் கூட சீன அரச பயங்கரவாதம் மறுத்து வருவதை அவர் கண்டிக்கின்றார்.

சிங்ஜியாங் (பழைய கிழக்கு துருகிஸ்தான்)

சீனா எல்லை விஸ்தரிப்பில் வேகமாக இயங்கும் நாடு. ஆசியாவின் பெரும் பகுதியை விழுங்கியுள்ள சீனா, இந்தியாவின் டலாக்கியா எல்லைப் புறம் வரை நிலங்களை விழுங்கி, அசை போட்டு வருகின்றது. சிங்ஜியாங் எனும் புதிய சட்டவிரோத மாகாணம் எட்டு நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது. மங்கோலியா, ரஷ்யா, கஸகஸ்தான், கிரிகிஸ்தான், தாஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா என்பனவே அவை.

சிங்ஜியாங்கின் பெரும்பான்மை மக்கள் உய்குர் இனத்தவர்கள். 30 வீதமானவர்கள் ஹான் சீன இனத்தவர்கள். 1949 ஆம் ஆண்டே சிங்ஜியாங் உத்தியோகபூர்வமாக சீனாவுடன் இணைக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் ஆக்கிரமித்தபோதும் உத்தியோகபூர்வ இணைப்பு இந்த ஆண்டிலேயே நிகழ்ந்தது. சோவியத் யூனியனின் உடைவைத் தொடர்ந்து மத்தியாசிய நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிலிருந்து பிரிந்து முன்னர் இருந்தது போன்று தனிக் குடியரசுகளாக மாற்றமடைந்தன.

சீனாவின் அடக்குமுறை ஒருபுறம், பிற நாடுகள் தனிக் குடியரசாக மாறுவது இன்னொரு புறம் என உய்குர் மக்களிடம் விடுதலை வேட்டை படிப்படியாக மலர்ந்து அவர்களுக்கு மத்தியில் கிழக்கு துருகிஸ்தான் விடுதலை இயக்கம் என்ற ஒரு கருத்தியல் சார் இயக்கம் 1990 களிலிருந்து வளரத் தொடங்கியது. அவர்களிடம் சீன அரசாங்கத்தை எதிர்கொள்ளும் ஆயுதப் பலமோ, இராணுவப் படைகளோ இல்லை. சாத்வீக வழியில் ஜனநாயகப் போராட்டங்களினூடே ஒன்றில் சீனாவின் ஏனைய பிரஜைகள் போன்று தாம் சமத்துவமான பிரஜைகளாக மதிக்கப்பட வேண்டும். அல்லது வரலாற்றில் இருந்தது போன்று சுதந்திரக் குடியரசாக தாம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என இரண்டு தெரிவுகளை முன்னிறுத்தி அவர்கள் இயங்கத் தொடங்கினர்.

அரச பதவிகளிலும் தொழிலும் உயர் கல்வியிலும் முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட இம்மக்கள் தமக்கான சமய, கலாசார சுதந்திரங்களும் மறுக்கப்படும் நிலையில் விடுதலை உணர்வுக்கு உட்படுவது இயல்பானதே. இந்நிலையில் அம்மக்களை அடக்கி ஒடுக்கி, மூளைச் சலவை செய்வதற்கான சீனாவின் திட்டங்கள் இவ்வமைப்பைப் பயங்கரவாதிகளாக முத்திரை குத்துவதிலிருந்து ஆரம்பித்தது. இன்று பயங்கரவாத அமைப்பைத் தடைசெய்யவே நாம் இம்மக்களுக்கு கல்வி போதிக்கின்றோம் என்று சீன அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் காதில் பூச்செருகுகின்றது.

சிங்ஜியாங்கில் சுமா ஒரு கோடி உய்குர் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இமாம் ஷகீப் அர்ஸலான் 80 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய நூலொன்றில் (சமகால இஸ்லாமிய உலகம்) அவரது சமகாலத்தில் சீன முஸ்லிம் சனத்தொகை 8 கோடி என்று கணிப்பிட்டிருந்தார். அதன்படி தற்போது ஒட்டுமொத்த சீனாவிலும் சுமார் 100 மில்லியன் (10 கோடி) முஸ்லிம்கள் இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. சீன அரசாங்கம் இந்திய அரசாங்கம் போன்று இத்தொகையை குறைத்தே காண்பிக்கின்றது.

உண்மையில் சிங்ஜியாங் என்பது வரலாற்றில் கிழக்கு துருகிஸ்தானாக இருந்த பிராந்தியமாகும். ஒரு மக்கள் சமூகத்தின் நாட்டை ஆயுத பலம் கொண்டு ஆக்கிரமித்து, அவர்களை ஒரு நாட்டுடன் இணைத்து சிறுபான்மையாக மாற்றி ஒவ்வொரு துறையிலும் படிப்படியாகப் புறக்கணித்து இரண்டாம் பட்சப் பிரஜைகளாக்கி, அவர்களின் விடுதலை வேட்கையை கொலை வெறி கொண்டு நசுக்கும் இந்த அரச பயங்கரவாதத்தை சீனா மட்டுமன்றி ரஷ்யா, இந்தியா, இஸ்ரேல், மியன்மார் ஆகிய மேலும் நான்கு உதாரணங்கள் உள்ளன.

வரலாற்றில் சுதந்திர சமஸ்தானமாக விளங்கிய காஷ்மீர் இன்று கண்ணீர் விடுகிறது என்றால், இந்தியா அதனை சட்டவிரோதமான இணைத்திருப்பதுதான் காரணம். அரக்கான் சுதந்திரக் குடியரசு மியன்மாருடன் இணைக்கப்பட்டதுதான் இன்றைய ரோஹிங்யர்களின் சோகக் கதைக்கான காரணம். இதே தவறை செச்னியாவை தம் பக்கம் இணைத்து ரஷ்ய அரசாங்கம் இழைத்துள்ளது. பலஸ்தீனர்களின் மண்ணில் சட்டவிரோதமாக இஸ்ரேல் உருவாக்கப்பட்டு, தம் சொந்த நாட்டிலேயே அவர்கள் கைதிகளாக்கப்பட்டுள்ளனர்.

இதே துயர வரலாறுதான் இன்று சீனாவின் சிங்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்களுக்கு நேர்ந்துள்ளது. அவர்களது கிழக்கு துருகிஸ்தான் சீனாவினால் ஆக்கிரமிக்கப்படாதிருந்திருந்தால் இந்நிலை இன்று தோன்றியிருக்காது.

எனவே, சர்வதேச சமூகம் உய்குர் சிறுபான்மை மக்களின் சமத்துவமான பிரஜைத்துவத்தை உறுதிசெய்ய வேண்டும். அல்லது விடுதலை வேட்கையை அங்கீகரிக்க வேண்டும்.