இரண்டாம் முல்லேரியப் போரில் முஸ்லிம்கள்

119

போர்த்துக்கேயப் படை முல்லேரியாவை நோக்கி மீண்டு வருகின்றது என்பதை அறிந்து கொண்ட டிக்கிரி பண்டார அவனது படையை இரு குழுக்களாகப் பிரித்தான். முதற் குழுவில் அத்துருகிரிய, ஹேவாகம, போரத்தொட, ஹோகந்தர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நேரடி இராணுவப் படை உள்ளடங்கியிருந்தது. இரண்டாவது குழுவில் 1000 வாள் வீச்சு வீரர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.

இம்முறை டிக்கிரி பண்டார இப்போரில் பக்கவாட்டு மூலோபாயத்தைக் கையாண்டான். எதிரிகள் பின்வாங்கிச் செல்லாது பின்புறமாக இருந்து தாக்குதல் நடத்துவதே பொதுவாக பக்கவாட்டு தந்திரோபாயம் எனப்படுகின்றது. பின்னர் அவன் விக்ரமசிங்க முதலியின் எஞ்சியிருந்த படையை யானைகளைக் கொண்டும் இலக்கு வைத்து தாக்குபவர்களைக் கொண்டும் பலப்படுத்தினான்.

முல்லேரியா கிராமத்தின் இடம், வலம் ஆகிய இரு மருங்குகளிலும் அவர்கள் நிறுத்தப்பட்டனர். இறுதியில் எஞ்சியிருந்த இலக்கு வைத்துத் தாக்குபவர்கள், போர் யானைகள், குதிரை வீரர்களை உள்ளடக்கிய ஒரு படையை டிக்கிரி பண்டார போர்க் களத்தின் மையப் பகுதியை நோக்கி வழிநடத்திச் சென்றான்.

இதற்கிடையில் போர்த்துக்கேயப் படை அடர்ந்த மரங்களால் தமது பின் பக்கம் தப்பிச் செல்ல முடியாதவாறு இருப்பதைக் கண்டனர். எதிரிகளும் பெருகி விட்டனர். எனவே அவர்கள் தம்மை போருக்கு தயார்படுத்திக் கொண்டனர். டிக்கிரி பண்டார ஒரு குதிரையில் உட்கார்ந்து போர் முன்னணியில் கலந்துகொண்டான். அவனது படை இரண்டு பிரிவுகளாக பிரிந்து சென்று தாக்குதலை ஆரம்பித்தது.

ஏற்கனவே அவனால் பிரிக்கப்பட்ட படைக் குழுக்கள் (இலக்கு வைத்துத் தாக்குபவர்கள், போர் யானைகள், குதிரைப் படையினர்) போர்த்துக்கேயர் தமது துப்பாக்கிகளுக்கான ரவைகளை மீளப் பொருத்தா வண்ணம் தடுப்பதற்கு ஒன்றுகலந்தனர். இதனால் போர்த்துக்கேயரால் துப்பாக்கிகளைப் பயன்படுத்த முடியாமல் போனது. இலக்கு வைத்துத் தாக்குபவர்கள் யானைகளுக்குப் பின்னால் நகர்ந்தவாறு போர்த்துக்கேயரை நோக்கி முன்னேறினர். அதேநேரம், ஒன்றுபட்ட மூன்று படைப் பிரிவும் பின்புறமாக இருந்து வந்த பக்கவாட்டு இராணுவமும் போரில் ஒன்றுதிரண்டது.

இந்தப் பக்கவாட்டு தந்திரோபாயம் வெற்றி கண்டது. யானைப் படை போர்த்துக்கேயரை நோக்கிச் சென்றது. அவர்களது முகாம்களை உடைத்துக்கொண்டு முன்னேறியது. போர் இப்போது உக்கிரமடைந்தது. போர்த்துக்கேயருக்கு தமது துப்பாக்கிகளை ரவைகளால் நிரப்ப முடியாத நிலை தோன்றியது. அவர்கள் தம் வசம் இருந்த கைத் துப்பாக்கிகளை மாத்திரம் பயன்படுத்தினர்.

டிக்கிரி பண்டார விவேகத்துடன் போரை வழிநடத்தினான். எவ்வாறாயினும், போர்த்துக்கேயர் சிறியதோர் இடைவெளி ஊடாக பின்வாங்கிச் செல்ல முயன்றனர். அப்போது பின்வாங்குவதற்கான வழியை சீதவாக்கப் படை மூடிக் கொண்டது. இறுதியில் போர்த்துக்கேயப் படை தோற்கடிக்கப்பட்டு சிலர் காயங்களோடு தப்பியோடினர். அவர்கள் ஏற்கனவே கைப்பற்றியிருந்த சிறிய காப்பரணில் தஞ்சமடைந்தனர்.

முல்லேரியப் போர்களில் முஸ்லிம்கள் கலந்து சீதவாக்கைப் படையின் பக்கம் நின்று டிக்கிரி பண்டாவுக்கு ஆதரவாக போராடிய செய்தியை சிங்கள வரலாற்று ஏடான ராஜவலிய பதிவு செய்யத் தவறியுள்ளது. ஆனால், போர்த்துக்கேய வரலாற்று ஆசிரியர் Fernao de Queyros (1687) முல்லேரியப் போரில் முஸ்லிம்கள் பங்குபற்றி வீரதீரத்தோடு போராடினர் எனவும் சிலர் போர்க் களத்தில் உயிர் நீத்ததாகவும் அவரது The Temporal and Spiritual Conquest of Ceylon எனும் நூலில் இவ்விடயம் குறித்து பிரஸ்தாபித்துள்ளார்.

எஸ்ஜே. பெரேரா இந்நூலை போர்த்துக்கல் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார்.  “முஸ்லிம்கள் சீதவாக்கைப் படையுடன் சேர்ந்து போர்த்துக்கேயருக்கு எதிராக போர் செய்தனர். சீதவாக்கை மன்னன் ராஜசிங்க (டிக்கிரி பண்டார) இந்த யுத்தத்தை 3000 படைகளோடு வழிநடத்தினான். அதில் முஸ்லிம்களும் கலந்துகொண்டனர்.

மற்றொரு போர்த்துக்கேய வரலாற்றாசிரியர் ரிபைரோ தனது The Historic Tragedy of the Island of Seilao -(1650) எனும் நூலில் பின்வருமாறு எழுதுகின்றார். முஸ்லிம் படைவீரர்களும் சிங்கள மன்னனின் பக்கம் நின்று போராடினர். அவர்கள் துப்பாக்கி வீரர்களாக மிகுந்த துணிச்சலோடும் வீர தீரத்தோடும் போராடினர். 1550, 1552, 1561, 1562, 1583 ஆகிய ஆண்டுகளில் சீதவாக்கை மன்னன் போர்த்துக்கேயருக்கு எதிராக நடத்திய பல்வேறு யுத்தங்களில் முஸ்லிம்களும் போர் வீரர்களாகக் கலந்துகொண்டுள்ளனர். இப்போர் வெற்றிகளுக்குப் பின்னரே ராஜசிங்க எனப்படும் டிக்கிரி பண்டார கடுவெல, ரக்காஹவத்த ஆகிய ஆற்றுப் பிரதேசங்களில் பீரங்கிப் படைகளையும் பாதுகாப்பு அரண்களையும் உருவாக்கி அவற்றைப் பலப்படுத்திக் கொண்டான்.

முல்லேரியப் போரில் தோல்வியடைந்த போர்த்துக்கேயர் இந்தியாவின் கோவாலிருந்து  மாபிடிகம காவல் அரணைத் தாக்குவதற்குப் படைகளைத் தருவித்தபோது கள்ளிக்கோட்டையிலிருந்து முஸ்லிம் படைவீரர்கள் இலங்கை வந்ததாகவும் இலங்கை முஸ்லிம் படைவீரர்களோடு சேர்ந்து அவர்கள் போர்த்துக்கேயருக்கு எதிராக தீவிரமாகப் போராடியதாகவும் போர்த்துக்கேய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ரிபைரோவின் கருத்தில் மாபிடிகம தாக்குதலில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் மாபிடிகமயிலேயே அடக்கம் செய்யப்பட்டன.