சிந்தனை பயங்கரவாதத்தின் மூல வேர் எது?

91

முஹம்மத் பகீஹுத்தீன்

*”எங்கள் எண்ணங்களே நம்மை உருவாக்குகின்றன. நமது மனம் போகும் பாதை தான் நமது விதிகளை தீர்மானிக்கும் முதல் காரணியாகும்”* இது டேல் கார்னெகி (Dale Carnegie1888 – 1955) எனும் அமெரிக்க எழுத்தாளரின் வாசகமாகும்.

பயங்கரவாதம் என்பது ஒருவனது மனதில் ஒருதலைபட்சமாக ஒரு தீவிர சிந்தனையாகவே தொடங்குகிறது. அந்த சிந்தனை தான் இறுதியில் அவனது நடத்தையாக வெளிப்படுகிறது. இத்தகைய தீவிர சிந்தனை கொண்டவனின் அடிப்படை பிரச்சினை என்னவென்றால் அவன் தனது பகுத்தறிவுக்குக் கூட சரி பிழை பார்க்க இடம் கொடுக்க மாட்டான். அடுத்தவர்களது கருத்தையும் அங்கீகரிக்க மாட்டான். மாற்றுக் கருத்துக்கள் மீது வெறும் ஒரு பார்வை கூட செலுத்த விரும்பமாட்டான். புதிய சிந்தனைகளை அறிய வேண்டும் என்ற ஆர்வம் கொஞ்சம் கூட அவனுக்கு இருக்காது. அவன் தனது கருத்தில் மாத்திரமே பிடிவாதமாக இருப்பான். அந்தக் கருத்து தவறானது அல்லது அதனால்
குழப்பங்களும் தீங்குகளும் ஏற்படுவது நிச்சயம் என தெளிவாக தெரிந்தாலும் கூட விட்டுக்கொடுக்க மாட்டான். இத்தகைய மனோபாவம் கொண்ட மனிதன் தன்னை அறியாமலேயே இறைவனின் வேலையை செய்வதற்கு முற்படுகிறான்.

அறியாமை தான் இதற்கு அடிப்படை காரணம். வடிகட்டிய இந்த மடமை மனித குலத்திற்கு பெரும் சோதனையாகும். அறியாமையை அறிவு என்று பார்க்கும் இந்த நோயை குணப்படுத்துவது கடினமானது. மூடிய சிந்தனை போக்கு உள்ளதால் விழிப்புணர்வு செய்வதற்கும் கஷ்டம். உள்ளம் மூடியிருந்தால் எதைச் சொல்லி என்ன பயன்?

*இஸ்லாத்தின் பார்வையில் சிலைவணக்கம் ஒரு அறியாமை என்றால் அறியாமை என்பதும் நிதர்சனமாக ஒரு சிலை வணக்கமாகும். ஏனெனில் அறியாமை சிந்தனைகளை தருவதில்லை, சிலைகளையே செதுக்குகின்றன.* (மாலிக் பின் நபி)

தவறு நிகழலாம் என்பதை ஏற்காத மனம் கண்மூடித்தனமாகவே முடிவுகளை எடுக்கும். அதனால் அடுத்தவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை பெருட்படுத்த மாட்டார்கள். இதனால் உண்மை பொய்யாகும் பொல்லாத நிலை உருவாகும்.

இத்தகையை சிந்தனைகளின் பிடிவாதம் காரணமாக மார்க்கத்திலும் பிழையான சிந்தனைகள் ஊடுருவுகிறது. இளைய பரம்பரை அதனால் பீடிக்கப்படுகிறது. இறுக்கமான மார்க்க சிந்தனையின் விளைவாக எழுச்சி நோக்கி அந்த சமூகம் பயணிக்க முடியாமல் தடுமாறும்.
ஐசிஸ் போன்ற தீவிரவாத ஆயுதக் குழுக்கள் தோன்றுவதும் இத்தகைய பிடிவாத சிந்தனை முகாம்களின் வெளிப்பாடுகளே.

எனவே சிந்தனை சீர்திருத்தம் மூலமாக மாத்திரமே சிதைந்து போயுள்ள சமூகத்தை நடுநிலைக்கு கொண்டு வர முடியும். இங்கு உள்ளம் பிரதான புள்ளியாகும். அது சீராகும் போது தான் எல்லாம் சீராகும்.