பஸ் மற்றும் ட்ரக் வண்டிகளின் சாரதிகளை மாத்திரம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது நியாயமற்றதாகும்.

19

15 பேர் உயிர் துறக்கவும் 30 இற்கும் அதிகமானோர் படுகாயமடையவும் காரணமாக இருந்த பதுளை, பஸ்ஸர 13ம் மைல் கல் பஸ் விபத்து இலங்கை முழுவதும் பாரிய சோகத்தை ஏற்படுத்தி விட்ட,  கவனயீனச் செயற்பாடாகும்.

இலங்கையில் அரச மற்றும் தனியார் பஸ் வண்டிகளின் சாரதிகளில் அதிகமானோர் பொதுவாகவே மிகவும் கவனயீனமாக நடந்து கொள்வதுண்டு. அவர்களுக்கிடையிலான போட்டித் தன்மை மற்றும் கவனயீனம் காரணமாக கடந்த காலங்களில்  இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் பல சந்தர்ப்பங்களில் பாரிய விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரை விட்டுள்ளனர்.

இது போன்ற துயரச் சம்பவங்கள் உற்பட சகல   நலவு கெடுதிகளும் அள்ளாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என்பது எமது நம்பிக்கையாகும். இருந்த போதும் இவ்வாறான துயரச் சம்பவங்கள் இடம்பெறும் போது அவற்றிலிருந்து போதுமான படிப்பினைகளைப் பெற்றுக் கொள்வது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பாரிய கடமையாகும்.

பதுளை, பஸ்ஸர 13ம் மைல் கல் பஸ் விபத்தைப் பொறுத்த வரை அதற்கான   பொறுப்புக் கூறல் கடமை குறித்த பஸ் சாரதி மற்றும் அவ்விடத்தில் காணப்பட்ட ட்ரக் சாரதி ஆகிய இருவருடன் மாத்திரம் சுருங்கி விடக்கூடியதன்று. குறித்த இரு சாரதிகள் மாத்திரம் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதும்,  குற்றவாளிகளாக்கப்பட்டிருப்பதும் நியாயமற்ற செயலாகும். பஸ் சாரதி பாரிய தவறொன்றை மேற்கொண்டிருப்பது வீடியோ காணொளிகளில் தெளிவாகத் தெரிகின்றது. எனினும் குறித்த ட்ரக் சாரதி என்ன தவறு செய்திருந்தார் ? எதற்காக கைது செய்யப்பட்டார் ?  என்பதற்கான தெளிவுகள் எதுவும் இதுவரை வழங்கப்பட வில்லை.

பஸ் வண்டியானது பாதையை விட்டும் விலகி பள்ளத்தை நோக்கிச் சென்ற இடம் பாரிய அளவில் ஏற்கனவே இடிந்து போய் உள்ளது என்பதையும், பாதையில் அதே இடத்தின் மறு புரத்தில் 05 மாதங்களிற்கு முன்பு மலையில் இருந்து சரிந்து விழுந்த பாரிய பாராங் கல் ஒன்று காணப்படுவதையும் விபத்து சம்பந்தமாக வெளியாகி இருந்த பல வீடியோக்கள் தெளிவாகவே காண்பிக்கின்றன. குறித்த கல்லானது கடந்த 05 மாத காலமாக பாதையின் 30 விகிதத்திற்கும் அதிகமான இடத்தை பிடித்துக் கொண்டிருந்ததாக பிரதேச வாசிகள் விசனம் தெரிவித்திருந்தனர்.

குறித்த பதுளை செங்கலடி பிரதான பாதை நாட்டின் மிக முக்கிய பாதைகளுல் ஒன்றாகும். நாட்டின் முக்கிய நகரங்கள் பலவற்றை போக்குவரத்து ரீதியாக இணைப்பதற்கு அப் பாதை காரணமாகவுள்ளது. அன்றாடம் குறித்த பாதையைப் பயன்படுத்தி ஆயிரக் கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. ஆக அவ்வாறானதொரு பாதையின் ஒரே இடத்தில் ஒரு பகுதி பாரிய அளவில் இடிந்தும், மறு பகுதியின் பெரும் பகுதி பாரிய பாராங் கல் ஒன்றினால் தடைப்பட்டும் உள்ள நிலையில் அவற்றை அவசரமாக திருத்தியமைத்திருக்க வேண்டிய பாரியதொரு பொறுப்பை RDA மற்றும் குறித்த பகுதியிற்கான போக்குவரத்து மற்றும் பாதை சீர் திருத்த வேலைகளுக்குப் பொறுப்பான ஊரியர்கள் கொண்டிருந்தனர். குறித்த இரு வகையான பொறுப்புக்களையும் அவர்கள் மேற்கொள்ளாது மிகவும் அசமந்தப் போக்குடன் பல மாதங்களை அவர்கள் கடந்தி இருப்பது குறித்த விபத்து இடம்பெறுவதற்கு மிகவும் முக்கிய காரணியாக அமைந்து விட்டது.

போக்குவரத்துத் துறையுடன் சம்பந்தப்பட்ட குறித்த அதிகாரிகளுக்கு எதிராகவும் கடினமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சு அதிகாரிகளின் கடமையாகும். அரச அதிகாரிகள் என்பதால் தவறுகள் இடம்பெறும் போது அவர்களைக் காப்பாற்ற முயல்வது அல்லது தப்பிக்க விடுவது மேலும் மேலும் இது போன்ற விபத்துக்கள் ஏற்படவும், அப்பாவி மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்படவுமே வழிவகை செய்யும்.

விபத்திற்குப் பிரதான காரணங்களில் ஒன்றாக இருந்த குறித்த பாராங் கல் பற்றிய விமர்சனங்கள் சூடு பிடித்துள்ள நிலையில் அது பற்றித் துளியும் அளட்டிக் கொள்ளாது இரு சாரதிகள் மீதுமே முழுக் குற்றத்தையும் சுமத்தி விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.