இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் பரவும் அபாயம்?

20

பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் புற்றுநோய் ஏற்படுவதற்கான இரசாயனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை தரநிர்ணய கட்டளைகள் நிறுவனம் இதனை இன்று உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் சுங்கதிணைக்களத்திற்கு குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தேங்காய் எண்ணெயில் ரசாயனம் சேர்க்கக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் விரைவாக குறித்த எண்ணெய் கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்வதற்கு சுங்கதிணைக்களம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் இதேவேளை குறித்த எண்ணெய் கொள்கலன்கள் களஞ்சிய படுத்தப்பட்டு அவற்றை நுகர்வோருக்கு வழங்கியுள்ள நிறுவனங்கள் தொடர்பில் அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகள் தொடர்பான பரிசோதனை அறிக்கை இலங்கை சுங்கத்திணைக்களத்திடம் இன்று முற்பகல் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த பரிசோதனை அறிக்கையினை இலங்கை தரநிர்ணய கட்டளைகள் நிறுவனம் சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் இன்று கையளித்துள்ளது.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் சிலவற்றில் இரசாயனம் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சினூடாக சுங்க திணைக்களத்திறகு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த எண்ணெய் கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்யும் வரை சுங்கபாதுகாப்பில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்திருந்தார்.

எனினும் பாவனைக்கு உதவாத ஒரு தொகை எண்ணெய் கொழும்பு துறைமுகத்தின் ஊடாக விடுவிக்கப்பட்டதாக பாராம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியிருந்தது.

இந்த நிலையில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காக 5 மாவட்டங்களில்ல் இருந்து எண்ணெய் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.