புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளைத் திரட்டுவதற்கான ‘இலத்திரனியல் தளம்’ ஆரம்பம்.

20

ஒரு நாட்டின் சிந்தனைப் பாங்கும் அதன் தத்துவார்த்தங்களும் அந்நாட்டின் கல்வி முறை மூலமே பட்டைதீட்டப்பட வேண்டும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலங்கடந்த கல்வி முறையானது நவீன உலகுடன் ஒத்துச் சென்று ஈடுகொடுக்க முடியாத ஒரு சமூகத்தைத்தான் உருவாக்கும் எனவும் பரந்த நோக்கிலானதும் பொது மக்கள் பங்களிப்புடனும் கூடிய ஒரு முறைமையே ஓர் அரசாங்கத்தின் மாற்றத்தால் மாற்றப்பட முடியாத முறைமை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கல்விச் சீர்திருத்திற்கான முன்மொழிவுகளையும் அபிப்பிராயங்களையும் பொதுமக்கள் பதிவிடுவதற்கான இலத்திரனியல் தளம் (Digital Platform) ஒன்றை இம்மாதம் 26 ம் திகதி அலரி மாளிகையில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த இலத்திரனியல் தளமானது நிலையான கல்விக் கொள்ளைச் சட்டகம்
( Sustainable Education Policy Framework ) ஒன்றை ஏற்படுத்துவதற்க பொதுமக்கள் தங்களது அபிப்பிராயங்களையும் முன்மொழிவுகளையும் முன்வைப்பதற்கான பெரும் சந்தர்ப்பமாகும் எனவும் 21ம் நூற்றாண்டிற்குப் பொருத்தமான அறிவுப் பின்னணியுடன் கூடிய மனித மூலதனத்தை வடிவமைத்துப் போஷிப்பது தேசியக் கொள்கைச் சட்டகத்தின் பிரதான இலக்குகளில் ஒன்றாகும் எனவும் அந்த இலக்கை அடைவதற்காகப் பல்வேறு கல்விச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டு அமுல்படுத்தப்படவேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார். அத்துடன் இக்கல்விச் சீர்திருத்தங்கள் மூலம் தேசத்தின் எதிர்காலச் சந்ததியினர் அறிவையும் திறமைகளையும் ஆயுதங்களாகத் தரித்த ஒரு தலைமுறையினராக உலகின்முன் எழுந்திருப்பதைக் காணத் தான் அவாக் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.