மசாய் முஸ்லிம்கள்

28

ஆஷிக் அஹமட்

2000-ஆம் ஆண்டு ஆப்ரிக்காவின் மசாய் பழங்குடியின முஸ்லிம்களுக்கு ஒரு திருப்புமுனை வருடமாகும். மிக சமீபமாகவே இஸ்லாம் இவர்களிடம் அறிமுகமான நிலையில், இச்சமுதாயத்தில் இருந்து ஆறு பெரியவர்கள் ஹஜ் புனித யாத்திரைக்கு புறப்படுகின்றனர். தங்கள் பயணத்தை வித்தியாசமாக திட்டமிடுகின்றனர். தங்கள் நகரமான கில்கொரிஸ்சில் இருந்து கென்யாவின் இரண்டாவது பெரிய நகரமான மொம்பாசாவிற்கு நடந்தே செல்வது. பின்னர் அங்கிருந்து சவுதிக்கு பயணமாவது என்பது திட்டம்.
இந்த இரண்டு நகரங்களுக்கு இடையேயான 803 கிமீ தூரத்தை 22 நாட்கள் இவர்கள் நடந்தே கடந்ததற்கு காரணம், செல்லும் வழியில் தாங்கள் சந்திக்கும் முஸ்லிம்களிடம், தங்கள் பகுதியில் இஸ்லாமிய மையம் அமைவதற்கான பொருளாதாரத்தை திரட்டுவது தான். இவர்கள் திட்டமிட்ட இஸ்லாமிய மையமானது பள்ளிவாசல், மதரசா, சுகாதார நிலையம் மற்றும் ஆரம்ப பள்ளி ஆகியவை உள்ளடங்கிய கட்டிடமாகும். கணிசமான பொருளாதாரத்தை இந்த நடைப்பயணத்தின் மூலம் திரட்டிய இவர்களுக்கு, துபாய் முஸ்லிம்களும் இஸ்லாமிய வங்கி மூலம் உதவி செய்ய இவர்களின் திட்டம் உயிர்பெற்றது.
இன்றிலிருந்து பார்க்கும் போது மசாய் முஸ்லிம்கள் கடந்து வந்த பாதை மிக கடினமானது என்பதை புரிந்துக்கொள்ளலாம். கென்யா மற்றும் தான்சானியாவின் எல்லை பகுதிகளில் வசிக்கின்றனர் மசாய் பழங்குடி மக்கள். பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கட்தொகை கொண்ட இவர்கள் எவ்விதமான வெளிவுலக தொடர்பையும் எச்சரிக்கையுடனே அணுகியிருக்கின்றனர். 30 வருடங்களுக்கு முன்பாக இஸ்லாம் இவர்களிடம் அறிமுகமான போது, இந்த புதிய மார்க்கத்தை ஏற்பவர்களை சபிப்போம் என்றார்கள் மசாய் சமூக பெரியோர்கள். இஸ்லாமை ஏற்றவர்கள் தங்கள் குடும்பத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார்கள்.
அன்று விதைக்கப்பட்ட விதை இன்று வேகமாக வளர்ந்திருக்கிறது. 1986-ல் ஒருவர் மட்டுமே முஸ்லிம் என்றிருந்த நிலையில், இன்று, 5000-த்திற்கும் மேற்பட்ட மசாய் மக்கள் தங்களை முஸ்லிம்களாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். குறிப்பிடத்தக்க அளவிலான பள்ளிவாசல்கள், மதரசாக்கள் காணப்படுகின்றன. மசாய் மரா பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்களுக்கான அசோசியேஷன் செயல்படுகிறது. மசாய் இனத்தவர் கென்யாவின் இஸ்லாமிய அறிஞர் குழுவிலும் இடம்பெற்றிருக்கின்றனர்.
ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தாலும், மசாய் இனத்தவர் இஸ்லாம் நோக்கி ஈர்க்கப்பட முக்கிய காரணம், தங்களின் கலாச்சாரத்துடன் இஸ்லாம் ஒற்றுமைகளை கொண்டுள்ளதாக இவர்கள் எண்ணுவது தான். ஓரிறை வழிபாட்டை கொண்டவர்கள் மசாய்க்கள். கிழக்கு திசையை நோக்கியே தங்கள் வழிப்பாட்டை மேற்கொள்கின்றனர். ஆப்பிரிக்க முஸ்லிம்களும் கிழக்கு திசை நோக்கி தங்கள் வழிப்பாட்டை மேற்கொள்வது இஸ்லாமுடன் இவர்கள் எளிதில் தொடர்புப்படுத்திக்கொள்ள உதவுகிறது. மேலும், குடும்ப அமைப்பில் பெண்களின் பங்கும் இஸ்லாமை நோக்கி இவர்கள் வர காரணமாக இருக்கிறது.
டென்மார்க், இங்கிலாந்து மற்றும் துருக்கியை சேர்ந்த இஸ்லாமிய குழுக்கள் மசாய் முஸ்லிம்களின் இந்த வளர்ச்சியில் பெரும் பங்காற்றியிருக்கின்றன என்றால் அது மிகையல்ல. தங்கள் சமுதாய பிரச்சனைகளை மார்க்கம் தொடர்பில் எதிர்க்கொள்ளும் நம்பிக்கை பிறந்துள்ளதாக கூறும் மசாய் முஸ்லிம்கள் தங்கள் எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் காணப்படுகின்றனர்.
மசாய் பகுதியில் டென்மார்க் இஸ்லாமிய குழு
பதிவுக்கான ஆதாரங்கள்:
1. The Standard Media, Kenya
2. Maasai Mara Muslim Community Facebook Page
3. Wikipedia
4. IERA
5. Anadolu Agency