சிங்கள பௌத்த மதம் மஹாவம்சத்தின் திரிபு

0
6

 – திஸரணி குணசேகர –

தமிழில் – ஹெட்டி ரம்ஸி

“ஒரு குழுவின் பகைமை ஏனையவர்களின் பகைமைக்கு வழிகோலலாம்”

– அமிர்தியாசென்

(‘வாதம்புரியும் இந்தியர்கள்’ என்னும் நூலிலிருந்து)

இலங்கையில் புனை கதைக்கும் வரலாற்றுக்குமிடையிலான எல்லைக்கோடு, மிகப் பயங்கரமான முறையில் ஒழுங்கற்றுப் போயுள்ளது. இலங்கையின் அரசியலில் அத்தகைய இருள் உலகம் வகிக்கும் பாத்திரம் மிகவும் தீர்மானமிக்கதாகும்.

இந்து-ஆர்ய இளவரசியொருத்தி சிங்கமொன்றுடன் ஓடிச் சென்றதனால் தோற்றம் பெற்ற இனமொன்றிற்கு தாம் சொந்தமுடையவர்கள் என்பதாக சிங்களப் பாடசாலைகளில் மாணர்களுக்கு போதிக்கப்படுகின்றது. மாணவர்கள் இதனை கதை வடிவிலான பாடமொன்றாக அல்லாமல் வரலாற்றுப் பாடமொன்றாகவே கற்கின்றார்கள்.

பெரும்பான்மையான பௌத்த சிங்களவர்கள் புனிதமானதொரு வரலாற்று நூலாக போற்றி வழிபடுகின்ற மஹாவம்சத்திலேயே இத்தகைய சிங்கம் பற்றிய புனை கதை இடம்பெற்றுள்ளது. மேற்குறிப்பிட்ட இள வரசியினதும் சிங்கத்தினதும் பேரப்பிள்ளையான விஜயனை சிங்கள இனத்தின் நிறுவுன ராக மஹாவம்சம் குறிப்பிடுகின்றது.

மஹாவம்சத்தின்படி, விஜயன் முரட்டுத்தனமான இயல்புடையவர். விஜயனும் அவனுடைய சகபாடிகளும் வன்முறைகளிலும் குற்றங்களிலும் ஈடுபட்டு வந்ததனால்  தந்தை அரசனுக்கு, விஜயனோடு அவர்கள் எல்லோரையும் நாடு கடத்த நேர்ந்தது.

புராணக் கதையில் குறிப்பிடப்பட்டுள்ள தன்படி, இவ்வாறு நாடு கடத்தப்பட்ட விஜயனும் அவனுடைய தோழர்களும் தமது கடல் வழிப் பயண இறுதியில் புத்தபெருமான் பரிநிர்வாணமடைந்த தினத்திலேயே இலங்கையில் தரையிறங்குகிறார்கள். மஹாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி, புத்தபெருமான் பரிநிர்வாண தருவாயில் இருந்து கொண்டு, தெய்வங்களுக்கு அதிபதி சக்கர தேவேந்திரனை அழைத்து பின்வருமாறு உபதேசித்துள்ளார்.

“லால தேசத்திலிருந்து சிங்க பாகு அரசனின் புதல்வரான விஜயன், 700 ஆதரவாளர்கள் புடைசூழ இலங்கை வந்தடைந்துள்ளார். இலங்கையில் அவர்கள் எனது மதத்தை நிறுவுவார்கள். அதனால், சக்கரதேவனே! பரி வாரங்களுடன் வந்தடைந்துள்ள விஜயனை யும் இலங்கையையும் பாதுகாத்திடுங்கள்.”

இவ்வகையில், புனிதத் தன்மை பெற்ற வாய்ப்பொன்றுக்காக தெரிவுசெய்யப்பட்ட இனமொன்றினது போலியான நம்பிக்கைகள் (பொய்மைகள்) மஹாவம்சத்திலிருந்து உருவானது. இலங்கையில் விருந்தோம்பல் பண்பாட்டுக் கருத்தின் (விஜயனை உபசரித்தல்) அடிப்படையாக இருப்பது இப்போலியான நம்பிக்கைகளாகும்.

இதன் பிரகாரம், இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கே உரித்தாகும்; அதன் உண்மையான ஒரே சொந்தக்காரர்கள் அவர்களாவர்; எந்த வழிமுறையிலேனும் தீங்குகள், தொந் தரவுகள், அழிச்சாட்டியங்களை புரிந்தாவது இந்த புனிதச் சொத்தை பாதுகாக்க வேண்டியுள்ளது.

புத்தரின் போதனைகளில் புனித யுத்தமொன்று பற்றிய கோட்பாடொன்றில்லை. மதத்தை அல்லது அதைப் பின்பற்றுகின்றவர்களை பாதுகாப்பதற்காக வேண்டி தீங்குகளை செய்வது, பலாத்காரம் புரிவது போன்ற விடயங்கள் புத்தரின் போதனைகளில் இல்லை. விலங்கொன்றினை கொல்வதற்குக் கூட எவ்வகையிலேனும் அனுமதியொன்றில்லாத மதத்தில் ‘பௌத்த மதத்தை பாதுகாப்பதற்காக வேண்டி’ மனிதர்களைக் கொல்வதை நியாயமானதாக்க வேண்டும் என்றால் அம்மதத்தில் முக்கியமான புதிய அத்தியாய மொன்றை இணைத்துவிட வேண்டியிருந்தது.

பௌத்த துட்டகைமுனுவுக்கும் இந்து எல்லாளனுக்குமிடையில் அரசியல் ஆதிக்க அதிகாரத்திற்காக வேண்டி புரியப்பட்ட யுத்தத்தை ‘சிங்களத்தின் புனித யுத்தம்’ ஒன்றாக கொண்டுவந்ததன் மூலம் மஹாவம்சத்தின் ஆசிரியர் வரலாற்றையே திரிபுபடுத்தி விட்டார்.

மஹாவம்சத்தின் பிரகாரம், எல்லாளன் மனிதர்களினதும் தெய்வங்களினதும் பாராட்டுதலுக்கு பாத்திரமான நேர்மையான அரசனொருவன்; அவன் சிறந்ததொரு நேர்மையான ஆட்சியாளன்; அதுவல்லாமல் வன் முறைச் சுயரூபமிக்க திருட்டுச் செயல்களுக்கு அடிபணிந்த ஆக்கிரமிப்பாளன் ஒருவனோ அல்லது அரச கொடும்பாதத்தினால் மக்களை மிதிக்கும் கொடிய ஆட்சியாளன் ஒருவனோ அல்ல.

ஆனால் எல்லாளனின் இத்தகைய பாராட்டுதல் குணாதிசயங்களுக்கு எவ்வித முக்கியத்துவங்களும் பொருத்தப்பாடுகளும் இல்லை. ஏனெனில் அவன் பிற சமயத்தைச் சார்ந்த மத நம்பிக்கையாளன் என்பதன் காரணத்திலாகும். அதனால் சிங்கள பௌத்த மதத்தையும் அதற்காக வேண்டி தெரிவு செய்யப்பட்ட தேசமான இலங்கையையும் வெளி எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் புனித திட்டத்தின் கட்டாயமான ஓர் அங்கமாக எல்லாளனை விரட்டியடிக்க வேண்டியிருந்தது; கொலை செய்ய வேண்டியிருந்தது.

மஹாவம்சத்தின் நட்சத்திரம் துட்டகை முனு ஆவான். இவனுக்குப் பின் ஆட்சிக்குவந்த சகல மன்னர்களினதும் தரத்தை உருவாக்கிய சிங்கள பௌத்த மதத்தின் வீர அரசன் அவனாவான். மஹாவம்சத்தின் பிரகாரம் விரிந்து செல்லும் அவனுடைய வாழ்க்கை சரிதத்தில் உள்ள மிகவும் யதார்த்தமான, மானிட தெய்வத்தன்மை வாய்ந்த தனிச் சிறப்பம்சங்களுக்குரிய கலவைகளை, நவீனயுக இலங்கைக்குள்ளும் நிஜமான வரலாறொன்றாகக் காட்டப்படுகின்றது.

தெய்வீ முறையில் கர்ப்பம் தரித்ததாகக் கூறப்படுகின்ற துட்டகைமுனுவுக்கு நாடெங்கும் பௌத்த ஆட்சியை ஸ்தாபிக்கும் தெய்வீகப் பொறுப்பொன்று ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. ‘பௌத்த அருள்’ தொடர்பில் போலியான கதைப் பின்னலுக்கூடாக விருந்தோம்பல் அதாவது விருந்தினர்களை உபசரிக்கும் சிந்தனை நோக்குடைய அடிப்படையொன்று வழங்கப்படுவதோடு, அவ்வகையில் நிலவும் சட்ட திட்டங்களை மீறுகின்ற விருந்தினர்களை எவ்வகையில் கவனிக்க வேண்டும் என்பது தொடர்பில் துட்டகைமுனு கதைப் பகுதிக்கூடாக எடுத்துக் காட்டப்படுகின்றது.

கருவிலுள்ள சிசுவினைப் போன்று உறங்கிக் கொண்டிருப்பது ஏன் என தாயார் வின வியதற்கு, துட்டகைமுனு இளவரசர் அளித்த பதில், பூமியில் உயிர் வாழ்வது தொடர்பில் சிக்கல்களை காட்டும் விதமாக உள்ளது. “தாயாரே! வீட்டுக்கு அப்பால் தமிழர்கள் உள்ளார்கள். மறுபுறத்தில் பெரும் கடல் உள்ளது. நான் எப்படி கை கால்களை விரித்து சுகமாக உறங்குவது?”

அத்தோடு, இளவரசர் துட்டகைமுனுவை பிரசவிக்கும்போது அவருடைய தாயார் விகாரமஹாதேவிக்கு கனவில் உதித்த மூன்று கற்பனை ஆசைகள் (கனவுகள்) தொடர்பிலான கதையில் எதிரி இனங் காணப்படுகின்றார். தன்னுடைய கணவனான அரசனிடம் அக் கற்பனைகளில் ஒன்றை அவள் பின்வருமாறு கூறுகிறாள்: “இலங்கைத் தீவிலுள்ள வனப்பு மிகு அநுராதபுரத்தில் எல்லாள அரசனின் முதன்மைக் காவலாளியான இராட்சத அரக்கனின் தலையைக் கொய்து வாள்மீது நட்டி தங்கப் பாத்திரத்தில் நீரூற்றி அதை அவ்வரக்கனின் தலைமீது நின்று கொண்டு அருந்துவேன்.”

இக்கனவு தொடர்பில் அரசன் குறி சொல்பவர்களிடம் வினவினான். அதற்கு அவர்கள் “தெய்வமே! உங்களுடைய புதல்வர் (துட்டகைமுனு) தமிழர்களைக் கொன்று தேசத்தை ஒன்றுபடுத்தி பௌத்த சமயத்தை ஒளிரச் செய்வார்” என்று கூறினார்கள்.

யுத்தத்தின்போது தனது கரங்களால் கொல்லப்பட்ட எதிரிகளின் உயிர்தொடர் பில் துட்டகைமுனு அரசனுக்குள் ஏற்பட்ட மன உளைச்சல் தொடர்பில் கேள்வியுற்ற துறவிகள் 8 பேர் அரசனின் உள்ளத்தை ஆற்றுப்படுத்த செய்த உபதேசம் ‘சிங்கள புனித யுத்தம்’ பற்றிய சிந்தனைக்கு உதாரணமாக உள்ளது. அவர்கள் புரிந்த உபதேசம் பின்வருமாறு உள்ளது.

“அரசனே! பயப்படாதீர். பௌத்தத்திலும் அதன் மும்மணிகளிலும் உள்ள எவராவது இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் மனிதர்களாவர். இம் முன்வினைச் செயல்கள் உங்களுடைய சுவனப் பாதைக்கு பாதிப்பு ஏற்படுத்தப் போவதில்லை. போர்க்களத்தில் லட்சோப லட்ச படையணிக்கிடையில் ஒன்றரை மனிதர்களே கொல்லப்பட்டார்கள். அதில் ஒரு தரப்பினர் பேணுதலுடையவர்கள். மறுதரப்பினர் ஐம்பெரும் பாவச் செயல்களை விட்டும் விலகி இருப்பவர்கள். ஏனையவர்கள் மூடநம்பிக்கைகள் கொண்ட துர்க்குணமிக்கவர்கள்; அவர்கள் மிருகங்களை ஒத்தவர்கள்.”

கௌத்தம சித்தார்த்தரின் (புத்தரின்) பௌத்த மதம் சிங்கள பௌத்த மதமாக பெயர்க்கப்பட்ட சந்தர்ப்பம் அதுவாகும். அது மஹாவம்சம் என்னும் நூலிற்கூடாக உருவாக்கப்பட்ட புதிய மதமாகும். இப்புதிய மதத்திற்குள் போலி நம்பிக்கையாளர்களுக்கு எதிரான யுத்தம் பாவமற்ற புனித முன்வினைப் பயனொன்றாக அர்த்தம் கொடுக்கப்பட்டது. அது சிலுவை யுத்தம், ஜிஹாத் போராட்டங்களுக்கு ஒப்பானதாக விண்ணுலகப் பேரின்பத்தை நேரடியாக அடைந்துகொள்ளக் கூடிய மார்க்கமொன்றாகக் கொள்ளப்பட்டது.

துட்டகைமுனு உயரிய மறு உலகத்தில் பிறந்தார் என்பது மாத்திரமல்லா மல், மஹாவம்சத்தின்படி அவர் அன்பு மிகு புத்தரின் நெருங்கிய மாணவர்களுள் ஒருவராவார். அவருடைய தந்தையான காக்க வன்னியதிஸ்ஸ அரசன் அன்புக்குரிய புத்தரின் தந்தையாவார். அவருடைய தாயாரான விஹாரதேவி அன்புக்குரிய புத்தரின் தாயாவாள். அவருடைய கனிஷ்ட சகோதரனான சத்தாதிஸ்ஸ மன்னன் அன்புக்குரிய புத்தரின் இரண் டாவது நெருங்கிய மாணவராவார். அவருடைய புதல்வரான சாலிய இளவரசர் அன்புக்குரிய புத்தரின் புதல்வராவார்.

புனித யுத்தத்தின் நற்கூலிகள் பரிசுத்தப் போர்க் கள வீரனுக்கு மாத்திரமல் லாமல் அவனுடைய முழுக் குடும்பத்திற்கும் கிடைப்பதாகக் கூறும் மஹா வம்சம், பௌத்த மதத்திற்காக வேண்டி முன்னெடுக்கப்படுகின்ற அத்தகைய புனித யுத்தமொன்றின் பிரதிபலன்கள் தொடர்பிலும் தர்க்கிக்கின்றது.

துட்டகைமுனு – எல்லாளன் யுத்தம் இடம்பெற்று ஏழு நூற்றாண்டுகளுக்கு பின்னரே அரசியல் வேலைத்திட்டமொன்றுடன் கூடிய பௌத்த துறவியொரு வரினால் (மஹாநாம தேரரினால்) மஹா வம்சம் எழுதப்பட்டது. துறவறம் பூணு வதற்கு எல்லா ஆசாபாசங்களையும் விட்டொதுங்குவது அத்தியாவசியம் என்பது புத்தரின் மதம் தொடர்பில் குறைந்தபட்ச அறிவுள்ள ஒருவருக்குக் கூட தெரிந்த விடயமாகும். ஆசாபாசங்களில் ஒட்டிக்கொள்ளும் ஆணோ அல்லது பெண்ணோ அவை எந்தளவு தூரம் நேர்மையானதாக, மனச் சாட்சிப்படி இருந்தாலும் அக்கட்டுப்பாடுகளே முழு வாழ்வையும் கட்டிப் போடுகிறது.

துறவறம் பூணுகின்ற ஒருவர் நாடு, இனம் அல்லது மதம் உள்ளிட்ட எந்த வொரு விடயங்களிலும் ஒட்டிக் கொள்வ தில்லை. எந்தவொரு கொலையையும் அனுமதிப்பதற்கு அவர்களுக்கு முடியாது. அவ்வாறு துறவு நிலைக்குட்பட்ட பிக்கு ஒருவரினால் மதத்தின் பெயரால் மனிதக் கொலைகளை நியாயப்படுத்தியதாக மஹாவம்சத்தின் எழுத்தாளரான மஹாநாம தேரர் கூறுவது பாரியதொரு பொய்யாகும். ஆனால், பௌத்தத்தின் பஞ்சசீலங்களில் முதற் சீலத்தை மீறி, அந்த பாரிய பொய் இன்று உயர் அந்தஸ்தில் முடி சூடப்பட்டுள்ளது.

சமாதானத்தை விரும்பிய மனிதரொருவரான யேசுநாதரை போராட்டத்தின் இளவரசர் ஒருவராக மாற்றுவதற்கு கொன்ஸ்டைன் அரசனுக்கும்  அவனைப் பின்தொடர்ந்து வருபவர்களுக்கும் முடிந்தது. அதற்காக வேண்டி அவர்கள் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருந்த பின்னால் துரத்தி பழிவாங்கும் கடவுள் ஒன்று தொடர்பிலான கொள்கையை பயன்படுத்தினார்கள்.

மஹாநாம தேரருக்கு அத்தகைய கொள்கை உதவிகள் புத்தரின் சமயத்தி லிருந்து கிடைக்கவில்லை. எனவே, அவர் தானாகவே அக்கொள்கையை நிர் மாணித்துக் கொண்டார். தேசிய ஹெல உறுமய மற்றும் பொது பலசேனா அமைப்புக்களின் தலைவர்களுடைய உண்மையான தீர்க்கதரிசி (அருட் போதகர்) மஹாநாம தேரரேயன்றி புத்தபெருமானல்ல.

பொய்மையை விதியாக்கிக் கொள்ளல்

மஹாவம்ச கதைகள் வெறும் வம்சக் கதைகளில் வருகின்ற புகழ்பெற்ற புரா ணக் கதைகளாக மாத்திரம் சிங்களவர்களால் நோக்கப்படுவதில்லை. நவீன இலங்கையின் பயணத் திசையும் அவற்றிக் கூடாக தீர்மானிக்கப்பட்டு விட்டது. அநகாரிக தர்மபாலவின் தலைமைத்துவத்தின் கீழ் 19 ஆவது நூற்றாண்டில் முன்னெடுக்கப்பட்ட பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்திற்குள் நிலவிவந்த சிறுபான்மை எதிர்ப்புச் சுபாவம் மஹாவம்ச புனைக் கதைகளுக்கூடாகவே முதிர்ச்சி பெற்றது. இப்புனைக் கதைகளின் அடி மையாகமாறியதனால் நெறிபிறழ்ந்து போன சிங்கள பௌத்த மதம் தமிழர் களுக்கு போதனை புரியும் சக்தியை இழந்துகொண்டது.

இலங்கைக்குரிய கலாநிதி அம்பேத்கர் ஒருவரை உருவாக்கி கொள்வதில் தோற்றுப் போனது. தேரவாத பௌத்த மதத்திற்குள் ஒலிக்கும் குரலாக பெருமளவு பௌத்த தமிழர்கள் அன்று உருவாகியிருந்தால் எங்களுடைய சுதந்திரத்திற்கு பிந்திய வரலாறு இதைவிடவும் குறைந்த பட்ச அழிவுப் பாதையைக் கொண்டிருக்கும்.

எவ்வாறிருப்பினும் தமிழ் மக்கள் பௌத்த சமயத்தை தழுவ வேண்டுமென்றால் சிங்கள மேலாதிக்கச் சிந்தனை அடையாளங்களை ஒரு புறத்தில் வைத்துவிட்டு, மஹாவம்சத்திற்கு முன்னர் பௌத்த சமயத்திற்குள் காணப்பட்ட உயர்ப் பண்புகளை மீண்டும் கைப்பற்றிக் கொள்ள வேண்டியுள்ளது.

“நட்புத் தொடர்புகள் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் பொறுமையுடனா வது நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு எமக்கு முடியுமான விதத்தில் ஏதாவது ஒரு வேலைத்திட்டமொன்றை ஏற்படுத்திக் கொள்வதே எமது முன்னாலுள்ள சவாலாகும்” என்பதாக பிரான்ஸ் தேசத்து நாவலாசிரியரான ‘அந்ரோ மல்ரோ’ விடம் ஒரு தடவை ஜவகர்லால் நேரு கூறியிருந்தார்.

எந்தவொரு பல்லின நாடும் எதிர் கொள்ளும் சவாலே இது. மஹாவம்ச புனை கதைகளுக்குள் புதையுண்டியிருக்கும் காலமெல்லாம் மேற்படி சவாலை வெற்றி கொள்வதற்கு இலங்கைக்கு முடியாமல் போகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here