Editorial | சமூகம் பகடைக்காயாகக் கூடாது

0
0

முஸ்லிம் சமூகத்தின் சோகமான தலைவிதி தொடர்ந்தவண்ணமுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் விரோத சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்தனர். இதற்கு ஆட்சியில் இருந்த அரசாங்கம் எந்த எதிர்நடவடிக்கையும் எடுக்காமல் ஆதரவளித்து வந்தது.

நாட்டு மக்களுடன் இணைந்து முஸ்லிம்கள் ஆட்சி மாற்றமொன்றுக்கு ஒத்துழைத்ததன் பயனாக முஸ்லிம் விரோத செயற்பாடுகள் தணிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜனாதிபதியும் நீதியமைச்சரும் குறித்த முஸ்லிம் விரோதச் சக்திகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். முஸ்லிம் விரோதச் சக்திகளின் செயற்பாடுகளின் தீவிரம் தற்போது தணிந்துள்ளது. ஆனாலும் இந்தப் பொறுப்பை அவர்களிடம் இருந்து அரசாங்கம் ஏற்றுள்ளதா என்று எண்ணத் தோன்றும் வகையிலேயே அரச மட்ட செயற்பாடுகள் தற்போது நடந்தேறிவருகின்றன.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமது தாயகம் திரும்புவதற்கான காணி வசதிகளை இராணுவத்திடம் இருந்து அரசாங்கம் இன்னும் மீட்டுத் தரவில்லை. இந்த நிலையில் கருமலையூற்று பள்ளிவாசல் காணிகளையும் இராணுவம் தனது கையகப்படுத்தியுள்ளது. முசலி பிரதேச சபைக்குட்பட்ட 22 முஸ்லிம் கிராமங்களிலும் இராணுவம், குறிப்பாக கடற்படை, தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது. இதற்கு ஒத்துழைக்குமாற்போல அரசாங்கம் முஸ்லிம்களின் குடியிருப்புக் காணிகள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட ஓரிலட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலத்தை மக்களிடமிருந்து பறித்து காடுகளுக்கும் காட்டு விலங்குகளுக்குமென ஒதுக்கியுள்ளது.

முஸ்லிம் சமூகம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட போது நாடு முழுவதிலும் இருந்து முஸ்லிம்கள் திரண்டு வந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்கள். அளுத்கமை கறுப்பு ஜூன் அனர்த்தத்தின் பின்னர் கோடி கோடியாக முஸ்லிம்கள் உதவிகளைக் கொண்டு வந்து கொட்டினார்கள். கிண்ணியாவில் டெங்கு நுளம்பு பரவுகின்ற போது பல்வேறு பள்ளிவாசல்களிலும் திரண்டிருந்து முஸ்லிம்கள் துஆச் செய்தார்கள், நிவாரணங்களை வழங்கினார்கள்.

இவை அனைத்தையும் விட முஸ்லிம்களுடைய நிலங்கள் அபகரிக்கப்பட்டு அவர்களது சொந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு பூர்வீகமற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு சமூகம் என்ன செய்ய முன்வந்திருக்கிறது ? நிலமற்றவர்களாக மாற்றி முஸ்லிம்களை நாடற்றவர்களாகச் செய்யும் இந்த அனர்த்தத்துக்கு முஸ்லிம் சமூகம் வழங்கப் போகும் நிவாரணம் என்ன? வெள்ளத்தின் போதும், உடைமைகள் தீயிட்டுக் கொழுத்தப்பட்ட போதும் ஓடி வந்த சமூகம், இவ்வளவு பெரிய அநியாயம் முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போதும் துடித்து எழாமல் மௌனமாக இருப்பது ஏன் ? ஒரு சிறிய கோடை வந்தாலே துஆக் கேட்கச் சொல்லும் எமது தலைமைகள் சமூகத்தின் இருப்பையே பாதிக்கின்ற இந்த அநீதியின் போது வாயை மூடிக் கொண்டிருப்பதன் அர்த்தம் என்ன ?

2012 இல் சுவீகரிக்கப்பட்ட நிலங்களைப் பற்றி யாருமே குரல் கொடுக்காததுதான் மீண்டும் முஸ்லிம்களின் காணிகளில் கைவைக்கின்ற தைரியத்தை உரியவர்களுக்குக் கொடுத்திருக்கிறது. முசலிப் பிரதேச மக்களின் பிரச்சினையை ஒரு சமூகப் பிரச்சினையாகப் பார்ப்பதற்கு முஸ்லிம் சமூகத்தின் அனைத்துத் தலைமைகளும் தவறிவிட்டன. கண்முன்னே தனது சமூகம் துகிலுறியப் படுகின்ற போதும் ஆளையாள் சுட்டிக் காட்டி தப்பித்துக் கொள்கின்ற வழமையான பல்லவியே இந்த நாட்டில் நடந்தேறுகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி தனது இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்கு என்ன செய்யலாம் என்றே அனைத்துத் தரப்புகளும் சிந்திப்பதாகத் தோன்றுகின்றது.

மக்களுடைய முட்டாள்தனமும் இதற்குக் காரணம். என்னதான் அநியாயத்தை செய்தாலும் அதைத் தட்டிக் கேட்கின்ற துணிச்சலான சமூகமாக இந்தச் சமூகம் இல்லை. இந்தத் தலைவிதியை மாற்றுகின்ற சக்தி மக்களிடமே இருக்கிறது. தம்மைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி சமூகத்தை எரிய விட்டு அதிலே குளிர்காய்கின்ற புல்லுருவிகளிடம் இருந்து சமூகத்தை மீட்டெடுப்பது சமூகத்தின் கடமை. சுயலாபங்களில் இருந்து விடுபட்டு உண்மையானதொரு போராட்டத்தை நோக்கி இந்தச் சமூகத்தை வழிநடத்துவதற்கு மக்கள் சக்தியாலேயே முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here