EDITORIAL | சுதந்திரத்தின் வாரிசுகள்

0
20

சில அரபு, முஸ்லிம் நாடுகளின் உதவியுடன் இலங்கையில் உள்ள சில ஜமாஅத்துகள் இலங்கையை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்காக முயற்சித்து வருவதாக ‘திவயின’ சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையை இஸ்லாமிய நாடாக மாற்றப் போவதாக செய்திகள் வருவது இது முதல் தடவையல்ல. கிழக்கு மாகாணத்தில் நஸரிஸ்தான் என்ற பெயரில் முஸ்லிம் நாடு உருவாகப் போவதாக முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் ஆரம்பத்திலேயே செய்திகள் வெளிவந்தன. முஸ்லிம்கள் இது தொடர்பில் யோசிக்காவிட்டாலும் சிங்கள ஊடகங்கள் விடுவதாயில்லை போலத்தான் தெரிகிறது.

இலங்கை சுதந்திரமடைந்து 69 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில் இவ்வாறான செய்திகள் வருவது நோக்கத்தக்கது. இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கும் நாட்டின் சுதந்திரத்துக்கும் இடையிலான தொப்புள் கொடி உறவை இலங்கை முஸ்லிம்கள் ஓங்கி ஒலிப்பதற்கான சந்தர்ப்பமாக இம்முறை சுதந்திர தினத்தையும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது என்கின்ற அந்த முக்கிய செய்தியை முஸ்லிம் சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கைக்கு வர்த்தக நோக்கத்துடன் இஸ்லாமியர்கள் வந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகின்றன. இஸ்லாமிய சாம்ராஜ்யம் உலகில் கோலோச்சிய காலப்பிரிவிலே அறபு நாடுகளின் முஸ்லிம்கள் இலங்கையை வியாபாரத் தளமாகக் கொண்டு இயங்கினார்கள். அவர்கள் இலங்கை மன்னர்களின் நன்மதிப்பை வென்று தமது வர்த்தகத்தை சிறப்பாக நடத்தினார்கள். அறபு நாடுகளுக்குத் தேவையான வாசனைத் திரவியங்களும் மாணிக்கமும் இலங்கையில் அவர்களுக்குப் பெருவாரியாகக் கிடைத்த போதும், அறபு நாட்டு வணிகத்துக்கான பிரதான கப்பல் பாதையாக இலங்கைத் துறைமுகத்தை அவர்கள் பயன்படுத்திய போதும் இலங்கையை மொத்தமாக ஆக்கிரமித்து அறபு நாடுகளுடன் இணைத்து விடுகின்ற காலனித்துவத்தை அவர்கள் செய்யவில்லை.

அதுபோல இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருந்த நிலையிலும் இலங்கையை ஒரு இஸ்லாமிய நாடாக மாற்ற முயற்சிக்காமல் தாம் வசித்த நாட்டுக்கு விசுவாசமாக நடந்தார்களேயல்லாமல் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தில் இணைகின்ற நாடுகளோடு இலங்கையையும் உள்வாங்குவதற்கு அவர்கள் முயற்சிக்கவில்லை. பக்கத்து நாடான இந்தியா எண்ணூறு வருடங்களாக முகலாயர்களால் ஆளப்பட்ட போதும் இலங்கையை முஸ்லிம் நாடாக மாற்றுவதற்கு அவர்களும் முயற்சிக்கவில்லை. இலங்கையில் அன்று முதல் இன்று வரை முஸ்லிம்கள் எந்தத் தொந்தரவுகளும் இன்றி வாழ்ந்து வருவது இதற்கான காரணமாக இருந்திருக்கலாம்.

பல நூற்றாண்டுகள் அமைதியாக தமது வர்த்தகத்தில் முஸ்லிம்கள் ஈடுபட்டிருந்த வேளையில்தான், அதே வர்த்தக நோக்குடன் போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாக இலங்கையை ஆக்கிரமித்தனர். தமது வர்த்தகத்துக்குப் போட்டியாக வந்தவர்களை எதிர்த்து முஸ்லிம் நாடுகளின் படைப் பலத்தின் உதவியுடன் போராடி இலங்கையைக் கைப்பற்றிக் கொள்ளக் கூடிய அவகாசம் இருந்தாலும் இலங்கை முஸ்லிம்கள் அவ்வாறு செய்யவில்லை.

காலனித்துவவாதிகளால் மன்னராட்சி பலவீனப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், மன்னருடன் இஸ்லாமியர்களுக்கு இருந்த உறவை வைத்து நாட்டை இஸ்லாமியர்களின் நாடாக மாற்றுகின்ற வாய்ப்பு அப்போதைய முஸ்லிம்களுக்கு இருந்தது. இந்த நிலையிலும் முஸ்லிம் நாடுகளில் இருந்து படைப் பலத்தை வரவழைத்து எதிரிகளுக்கு எதிராக மன்னர்களுடன் இணைந்து  போராடினார்களே தவிர, எதிரியுடன் இணைந்து கொண்டு நாட்டை தாரைவார்க்கவில்லை.

காலனித்துவவாதிகளிடம் இருந்து இலங்கை சுதந்திரம் அடைகின்ற பொழுது தமக்கென எதையும் கேட்டுப் பெற முடியுமான நிலை இருந்தும் இலங்கையில் இஸ்லாமிய நாட்டுக்கான பிரதேசமொன்றையோ அல்லது நாட்டில் ஒரு பங்கையோ முஸ்லிம்கள் கோரவில்லை.

இலங்கையின் சுதந்திரத்துக்கும் இறைமைக்கும் எந்தப் பங்கமும் விளைவிக்காத இந்த முஸ்லிம்களின் வாரிசுகள்தான் இலங்கையில் இன்றும் வாழ்கிறார்கள். அன்றுபோல் இன்றும் அநீதிக்கும் அநியாயத்துக்கும் எதிராக அவர்கள் போராடுவார் களேயன்றி நாட்டின் சுதந்திரத்துக்கும் இறைமைக்கும் எதிராக ஒருபோதும் போராட மாட்டார்கள். அண்மைக்கால முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் போதும் நாட்டின் ஸ்திரத்தன்மை குலைந்து விடக் கூடாதே என்பதற்காக தமக்கு நேர்ந்த இழப்புக்களை பொறுமையுடன் சகித்துக் கொண்டார்கள்.

சுதந்திரத்துக்கான எங்களது பரம்பரைப் பங்களிப்பை சுதந்திரத்தின் வாரிசுகள் நாட்டுக்கு உணர்த்த வேண்டிய சந்தர்ப்பமாக இந்தச் சுதந்திர தினத்தைப் பயன்படுத்த வேண்டும். நாடு பெற்றுக் கொண்ட சுதந்திரத்தைப் பூரணப்படுத்துவதற்கு முஸ்லிம் சமூகம் பங்களிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.   நீதியும் சுபீட்சமும் நிலவுகின்ற அபிவிருத்தி அடைந்த இலங்கையொன்றுக்காக உழைக்கின்ற முஸ்லிம்களைப் பற்றி நாட்டுக்குப் பறைசாற்றுவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here