சமூகங்களுக்கிடையிலான இணைப்புப் பாலமாக செயற்படும் வாய்ப்பு இலங்கை முஸ்லிம்களுக்கு உள்ளது

1
2

மீள்பார்வை பத்திரிகையில் வெளியான கோம்பை S. அன்வர் அவர்களுடனான பிரத்தியேக நேர்காணல் இதோ..

உங்களைப் பற்றி?

நான் தமிழகத்தின் தேனி மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவன். அது இந்தியாவின் மேற்கு மலையடி வாரத்திலுள்ள மலையடிப் பிரதேசம். அதுவே எனது சொந்த ஊர். காட்சித் தகவலியல் துறையில் (visual Communications)நான் படிப்பைத் தொடர்ந்தேன். வரலாற்றில் இயல்பாக எனக்கு ஆர்வமுள்ளது. திராவிட இயக்க கருத்தி யலை ஒருமித்துச் செல்கிறேன். அந்த கருத்தியல் ஒருமித்து போகக் கூடியது. அதுவே எனது பின்னணி.

நான் படிப்பை முடித்து விட்டு காட்சித் தகவலியல் துறையில் ஒரு புகைப் படக்கலைஞனாகவும் பத்திரிகையாள னாகவும் பணியாற்றியுள்ளேன். தமிழக வரலாற்றில் எனக்கு ஆர்வமுள்ளது. அதில் முஸ்லிம்களுடைய வரலாறு சரியாக சொல்லப்படவில்லை என்கின்ற எண்ணம் என்னுள் இருந்தது.

முஸ்லிம்களுக்கெதிராக முன்வைக்கக் கூடிய பல குற்றச்சாட்டுக்கள் தவறானவை. அந்தத் தவறுகளுக்கெல்லாம் வரலாறு ஆதாரமாகக் காட்டப்படுகிறது. எனவே, ஒரு தவறான வரலாறு உள்ளது. அது சரி செய்யப்பட வேண்டும் என்ற எண்ணம் என்னுள் உதித்தது.

கடந்த சில வருடங்களாக காட்சித் தகவலியல் துறையில் பணிபுரிவதற்கு மேலதிகமாக தமிழ் முஸ்லிம் வரலாறு தொடர்பில் ஆய்வு செய்து வருகிறேன். இவ்வாறு சரியாகச் சொல்லப்படாத, தவறாக சித்திரிக்கப்பட்ட வரலாற்றை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்பது தான் என்னுடைய அவா.

 உங்களுடைய ஆவணப்படுத்தல் முயற்சிகளைப் பற்றி குறிப்பிட முடியுமா?

எனக்கு வரலாற்றில் ஆர்வம் அதிகம். தவறாக சித்திரிக்கப்பட்டுள்ள வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக ஆவணப்படுத்தல் முயற்சிகளை ஆரம்பித்தேன். பத்திரிகைகளில் கேள்வி கேட்க வேண்டும். பத்திரி கைகளில் ஒரு பொய்யை திரும்பத் திரும்ப கூறும்போது Globals Lie அது உண்மையாகிவிடும். அதுபோல முஸ்லிம்களுக்கெதிராக கட்டமைக்கக் கூடிய பல விடயங்களை எதிர்கொள்ள வேண்டுமென்பதற்காகவும் இத்துறையை ஆரம்பித்தேன்.

பத்திரிகைகளில் ஓரளவுக்கு இவ்விடயத்தை கதைக்க முடியுமாக இருந்தது. இதை பொது மேடைகளில் பேசும்போது ஓரளவு வரவேற்பு இருந்தது. வரவேற்பு இருந்தாலும் கூட, அது சிரியதொரு கூட்டத்துடன் நின்றுவிடுகிறது. இதனை பெரிய கிராமங்களுக்குப் போய் கதைத்துக் கொண்டிருக்கவும் முடியாது. அதற்கு நேரமில்லை. தொழில்களை கவனிக்க வேண்டும். அதற்கான குறுக்கு வழியாக ஆவணப்படுத்தல் முயற்சியை ஆரம்பித்தேன். இதனால் எனது முயற்சியை உலகம் முழுக்க அனுப்ப முடிந்தது.

மிக இலகுவாக அந்தப் படம் 100 பேரை சென்றடையக்கூடிய வாய்ப்புள் ளது. இதனால் நான் தமிழ் முஸ்லிம் தொடர்பான ஆவணப்படுத்தல் முயற்சியில் இறங்கினேன். ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமனானது. எனவே, இதனை தொலைக்காட்சியில் இலகுவாக முன்கொண்டு செல்லலாம். நமது கருத் துக்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும். எனவே, நான் ஆவணப்படுத்தல் முயற்சியை தேர்ந்தெடுத்தேன்.

இந்தத் துறையில் இளைஞர்களை எவ்வாறு பயிற்றுவிக்கலாம்?

தகவல் தொழில்நுட்பம் இன்று தாராளமயமாகியுள்ளது. சாதனங்களின் விலைகள் குறைந்துள்ளன. அவை எல்லோர் கையிலும் கிடைக்கும் விதத்தில் உள்ளன. தொலைபேசியொன்று கையில் இருந்தால் அதன் மூலம் கதைக்கவும் முடியும்; காட்சிப்படுத்தவும் முடியும்.

ஆவணப்படுத்தல் குறித்து தவறான புரிதல் ஒன்றுள்ளது. ஒருவரை அமர வைத்து பேசுவதென்பது என்றாலே ஆவணப்படம் என்று கூறுவார்கள். பல்வேறு ஆர்வத்தில் நிறையப் பேர் வருவார்கள். ஆனால் சரியான புரிதல் இல்லாமல் பண்ணும்போது ஒரு சிக்கல் நிலை உருவாகும். அதாவது effective இல்லாமல் போகின்றது.

இத்துறையில் கால் பதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு நான் கூறுவது என்ன வென்றால், நல்ல தரமான ஆய்வுகளை செய்துவிட்டு இத்துறையில் வரவேண் டும். சொல்லக்கூடிய கருத்துக்களை பல்வேறு துறைகளில் ஆய்வு செய்து விட்டு வரவேண்டும். அத்தோடு Visual Knowledge இருக்க வேண்டும். அது மிக முக்கியம். நாம் visual Language ஐ உள்வாங்க வேண்டும். கருத்துக்களை மட்டும் பார்க்கக் கூடாது. visual Language நன்றாக இருந்தால்தான் பார்வையாளர்களை உட்காரவைக்க முடியும். அதுமிக முக்கியம்.

யாதும் என்னும் ஆவணப்படத்தை ஏன் எடுத்தீர்கள்? அவ்வாறானதொரு எண்ணம் எவ்வாறு உருவானது?

முஸ்லிம்களைப் பற்றி சமூகத்தில் பல தவறான சித்திரிப்புகள் உள்ளன. இன்றைய சமூகத்தை வளர்ந்து வரக்கூடிய நாகரிக சமூகம் என்று கூறுகின்றோம். இன்று சமூகம் நகர்ப்புற மயமாகிக் கொண்டுள்ளது. மனிதன் ஒரு இயந்திரகதியான வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளான். யாருக்கும் அதிக நேரம் கிடையாது.

நகரங்களில் வாழ்ந்தாலும் கூட ஆங்கிலத்தில் சொல்வது போன்று Getto மாதிரியான வாழ்க்கையே வாழ்கின்றார்கள். நாலு சுவருக்குள் வாழ்க்கை. அதைத் தவிர உலகத்தைப் பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது. இது தவறான புரிதல்களுக்கு வழிவகுத்துள்ளது.

இன்னொரு சமூகத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் மற்றொருவர் சொல்வதை வைத்து இதுதான் என்று ஒரு வேகமான முடிவுக்கு வருகின்றோம். அதைப் போக்க வேண்டும். தவறான புரிதல்களைகளைய வேண்டும். முஸ்லிம்களுக்கெதிராக பல கருத்துக்கள் வேண்டுமென்றே முன்வைக்கப்பட்டுள்ளன. தவறான புரிதலினாலும் காலனிய ஆதிக்கவாதிகளின் கால கட்டத்திலும் இந்தக் கருத்துக்கள் அதிகமாக முன்வைக்கப்பட்டன. மக்களை ஆள்வதற்காக வேண்டி பிரித்தாளும் கொள்கையில் சில விடயங்கள் கட்டமைக்கப்பட்டன.

இவையெல்லாம் இன்று முஸ்லிம்களுக்கு  பெரிய பிரச்சினையாக உள்ளன. அவர்கள் உபயோகிக்கக் கூடிய சொற்கள் முஹமதியர் படையெடுப்பு, கட்டாய மதமாற்றம் இவையெல்லாம் முஸ்லிம் களுக்கெதிராக பொது சமூகத்தை திரு ப்பி விடக் கூடியதாக உள்ளது.

இதுபோன்று எழுதப்பட்ட வரலாறுகளை நாம் கேள்வி கேட்காதவரை முஸ்லிம் சமூகம் மறுபடியும் அடிவாங்கிக் கொண்டுதான் இருக்கும். பல்வேறு இடங்களில் இது இடம்பெற்றுள்ளன. நேற்று இலங்கையாக இருக்கலாம் இன்று இந்தியாவாக இருக்கலாம், நாளை மியன்மாராக இருக்கலாம். இவ் வாறு பல்வேறு இடங்களில் இந்த வரலாற்று தவறுகளை சரி செய்யாமல் நாம் ஒன்றையும் எதிர்கொள்ள முடியாது. அதற்கான முயற்சிதான் ‘யாதும்’ என் கின்ற ஆவணப்படம்.

பொதுவாக தமிழ் முஸ்லிம் உறவுகள் எவ்வாறு அமைய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

எம்மைப் பொறுத்தவரையில் நாம் இரு இனங்களையும் பிரித்துப் பார்ப்ப தில்லை. இந்தியாவில் கிட்டத்தட்ட அண்ணன்-தம்பி உறவு முறையிலேயே இது உள்ளது. ஒருவேளை இலங்கையில் கூட அவ்வாறு இருந்திருக்கலாம். 19 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் அதுபோன்ற உறவு முறைகள் இருந்திருக்கலாம். மேற் கத்தேய தேசியம் வந்ததன் பின்னர் எல் லோரும் மத ரீதியாக பிரிந்து செயற்பட ஆரம்பித்தார்கள்.

தமிழ்நாட்டிலும் கூட இனங்களுக் கிடையில் சச்சரவுகள் ஏற்படும். அது நீண்ட நாள் பகையாக பேணப்பட மாட் டாது. உடனடியாக ஒன்றுபடுவார்கள். நாயக்கர் சமூகம் மாமா மாப்பிள்ளை உறவைப் பேணியது. பிரன்மலைக்கள்ளர் என்று சொல்லக் கூடிய தேவர் சமூ கத்தில் சீயான் என்று சொல்லக் கூடிய உறவு முறை பேணப்பட்டது.

இவ்வகையில் ஒவ்வொரு சமூகத்தில் ஏதாவதொரு உறவுமுறையில் தமிழ் முஸ்லிம்கள் கிட்டத்தட்ட ஒரு குடும்ப சூழலில் எல்லோரும்  ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள். அந்தநிலை இங்கும் வரவேண்டும். தமிழ் முஸ்லிம்கள் மாத்திரமல்ல பொதுவாக இலங்கையிலுள்ள சகல இனங்களும் வரலாற்றில் ஒன்றாகவே இருந்து வந்துள்ளார்கள்.

இவ்வளவு அழிவுகளை சந்தித்துள்ளார்கள். ஒட்டுமொத்த இலங்கை சமூகமும் அழிவுகளுக்கு முகம்கொடுத்துள்ளன. ஆனாலும், கடந்த காலத்தை மறந்து புதிய இலங்கையை கட்டியெ ழுப்புவதற்கு இரண்டு சமூகங்களுக்கு மத்தியில் (இந்து-சிங்களம்) இணைப்பு பாலமாக இருந்து செயற்படக்கூடிய வாய்ப்பு முஸ்லிம்களுக்குள்ளது. அதை செய்வது முக்கியம்; உறவு முறையை இந்தியாவில் உள்ளது போன்று இங்கும் பலப்படுத்த வேண்டும்.

போருக்கு பிந்திய சூழலில் தமிழ் முஸ்லிம் உறவுகள் அவ்வளவு பலமானதாக அமையவில்லை. அதை எவ்வாறு கட்டியெழுப்பலாம்?

என்னுடைய ஆவணப்படுத்தல் முயற்சிகளை பார்க்கும் பொழுது பல முக்கியமான விடயங்களை அவதானிக்கலாம். நமது உறவுமுறையை பலப்படுத்தக் கூடிய பல ஆவணப்படுத்தல்களை உருவாக்கியுள்ளேன். ஜோடி குரூசன் என்பவரை வைத்து ஒரு ஆவணப்படுத் தலைச் செய்தேன். அவர் மீனவ சமூகத்தைச் சார்ந்தவர்.

வரலாற்று ரீதியாக கிட்டத்தட்ட 500 வருடங்களுக்கு முன்னர் முதல் முதலாக கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டது பரதவ சமூகம்தான். அதற்குக் காரணம்,  முஸ்லிம்களுக்கும் அவர்களுக்குமிடையில் மூண்ட சண்டையாகும். அதில் அச்ச முற்ற அம்மக்கள் (பரதவர்கள்) பாதுகாப்புத் தேடி போர்த்துக்கீசர்களை நாடினார்கள். நீங்கள் மதமாறினால் நாம் பாதுகாப்புத் தருவோம் என்பதாக போர்த் துக்கீசர்கள் கூறினார்கள். அம்மக்கள் மதம் மாறினார்கள். இவ்வாறுதான் மதமாற்றம் வெடித்தன.

அதன் பின்னர் முஸ்லிம்களுடன் இருந்த நாயக்கர் ஆட்சியாளர்களும் அவர்களுக்கெதிராக போர்த்துக்கீசர் பரதர்கள் என்றும் பல இடங்களில் போராட்டங்கள் இடம்பெற்றன. கிட்டத்தட்ட 100 வரு டங்களுக்குமேல் இந்தச் சண்டைகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தன.

முஸ்லிம் கிராமங்கள் சூறையாடப்பட்டன. அதேபோல் பரதவ கிராமங்கள் சூறையாடப்பட்டன. ஒரு காலகட்டத்தில் போர்த்துக்கீசர்கள் சென்றுவிட்டார்கள். அடுத்து டச்சுக்காரர்கள் வந்தார்கள். அதன் பின்னர் ஆங்கிலேயர்கள் வந்தார்கள். அப்போது இவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். ஆக்கிரமிப்பாளர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் நாம் இங்கு நிரந்தமாக இருப்பவர்கள். நாம் சண்டை பிடித்துக் கொண்டிருப்பது எமக்குத்தான் பேரழிவை ஏற்படுத்தும் என்று கூறி ஒரு உடன்படிக்கைக்கு வந்தார்கள்.

ஒரு உறவு முறையைக் கொண்டு வந்தார்கள். சித்தப்பா சித்தி சாச்சா சாச்சி உறவுமுறைகளை கொண்டு வந்து நமக் குள் எதுக்கு சண்டை என்று கூறினார்கள். இன்று அந்தக் கிராமங்களில் ஓர் அமைதி நிலவுகின்றது. எல்லோரும் ஒன்றாக முன்னேறியுள்ளார்கள். அவ்வாறான விட் டுக் கொடுத்து போகக் கூடிய மனப் பான்மை வர வேண்டும்.

எல்லாவற்றுக்கும் இழப்புள்ளது. போரினால் பயன்பெற்றவர்கள் யாரும் கிடையாது. ஏகப் பட்ட இழப்புகள் இடம்பெற்றன. தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையில் மன்னிப்போம்; மறந்தோம் எனும் நிலைப்பாடு தேவை. நாம் பழைய விடயங்களை நடந்த தவறுகளை பொறுப்பேற்க வேண்டும். அதற்குரியவர்கள் தண்டிக் கப்பட வேண்டும். ஆனால், அதைத் தாண்டி உறவுகளைப் பலப்படுத்தக்கூடிய வேலைகளை சமூகமும் சமூகத் தலைமைகளும் செய்ய முன்வர வேண்டும்.

தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

ஆவணப்படுத்தல் முயற்சி என்பது ஒரு தொடர்சியான செயற்பாடு. யாதும் எனது முதல் பகுதி. இரண்டாவது பகுதியை தற்பொழுது ஆரம்பித்துள்ளேன். அதன் தலைப்பு புலம்பெயர் தமிழர்கள். என்னுடைய தமிழ், முஸ்லிம் அடையாளத்தில் புலம்பெயர் தமிழர்களை சேர்க் காமல் ஆவணப்படுத்தலை கொண்டுவர முடியாது. ஏனெனில் உறவு முறைப் பழக்க வழக்கங்களில் அந்த தாக்கம் உள்ளது. அதை பதிவு செய்ய வேண்டும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன்.

1 COMMENT

  1. முக்கியமாக முல்லைத்தீவு மாவட்டத்திலேயே தமிழ் முஸ்லீம் மக்கள் என்று ஒன்றாக வாழ்ந்தவர்கள் நாங்கள் இப்படிப்பட்ட உங்கள் ஆவணப்படுத்தல் உறவுகளைப் புதுப்பிக்க பாலமாக அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here