அறிவு மையங்களாக தொழிற்பட வேண்டிய பள்ளிவாயில்கள்

0
4

– பிஸ்தாமி –

பள்ளிவாயில்கள் வெறுமனே ஆன்மீக தரிசனங்களுக்கு உபயோகமாகும் இடம் என்ற பிழையான புரிதல் அதிகமான பிரச்சினைகளுக்கு இட்டுச்சென்றுள்ளது. நபியவர்கள் மீது கொள்கை அளவில் பற்றுக்கொண்டுள்ள அதே அளவில் அவரது தஃவா வழிமுறைகள் தொடர்பில் கற்றுக்கொள்ளாத சமூகமாக நாம் இருப்பது தவறானது. இறைதூதர் காலத்திலும் அதன் பிற்பாடும் பள்ளியானது அறிவுக்கருவூலங்களின் ஊற்றாக இருந்துவந்துள்ளது. அவ்வாறே அறிஞர்கள் சந்திக்கும் தளமாக கலாசார, நாகரிக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அது செயற்பட்டுள்ளது. சிந்தனையாளர்கள் எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பாளர்கள் உருவாகிய இடம்தான் பள்ளிவாயில்கள்.
ஆன்மீக ஈடேற்றம் மட்டுமன்றி அறிவெழுச்சி பரிணமிக்கும் இடமாக இஸ்லாமிய மறுமலர்ச்சி ஆரம்பிக்கும் இடமாக பள்ளிகள் காணப்பட வேண்டும்.அதனது புறத்தோற்ற அழகை மேம்படுத்தி மெருகூட்டும் பணிகளை,திருத்த வேலைகளை, அல்லது கட்டுமானப்பணிகளை செய்வதில் அல்லும்பகலும் அயராது ஈடுபட்டு தமது நிருவாகக்காலத்துக்கு முற்றுபுள்ளி வைப்பதை விட நிர்வாகிகளின் முக்கியமான பொறுப்பான பணிகளை அல்லாஹ் சொல்கிறான். அவர்கள் இந்த விடயங்களின் பாலும் தமது அவதானத்தை செலுத்த முன்வரவேண்டும். எமது சமூகம் எதிர்கொள்ளும் மிகப்பிரதான பிரச்சினைகளுள் கல்வி முன்னணி வகிக்கிறது. அதற்கான காரணம் இறைவன் சொன்ன முதலாவது கட்டளையை நாம் கை விட்டமை தான். எனவே பிரச்சினைக்குத்தான் தீர்வு காணவேண்டும்.

ஆன்மீக சுகம் காண அறிவை புறக்கணிப்பதின் படுபயங்கர விளைவு தான் இது.பள்ளிவாயில்கள் நூல்நிலையமாக இருக்கவும் வேண்டும் என்ற உள்ளார்ந்த கருத்தை இவ்வசனம் சொல்கிறது.ஒரு சமூகத்தில் சிந்தனை மாற்றம் வேண்டுமாயின் அதன் தொடக்கப்புள்ளி பள்ளிவாயில்களே தான்.பாடசாலையில் ஒருவிதமான கல்வியை அவன் பெற்றாலும் அதனை இஸ்லாமியப்படுத்தி நன்மை நோக்கம் கருதி இறை திருப்தியுடன் செய்வதற்கு உந்துதல் வழங்கும் மையமாக பள்ளிவாயில்கள் காணப்பட வேண்டும்.எனவேதான் பள்ளி நிர்வாகிகளுக்கு இறையச்சம் கண்டிப்பான நிபந்தனையாக ஆக்கப்பட்டுள்ளது.அறிவின்றி ஆன்மீக செயற்பாடுகளில் ஈடுபடும் சமூகம் அசைவியக்கமற்ற சமூகமாக(non –dynamic society)காணப்படும்.செயற்களத்துக்கு உதவாததாக ஆன்மிகம் இருக்க முடியாது.
ஆன்மிகம் வெறும் ஒரு “விசை”(force)எனின் அறிவு ஒரு இயங்குதிறன்வாய்ந்தவிசை(dynamic) செய்த்தானிய மேலாதிக்கத்தை (hegemony) தவிடு பொடியாக ஆக்கும் வலிமை அறிவுக்கு மட்டுமே உண்டு.அதனால்தான் அறிஞர்கள் இறைவனை அதிகம் பயந்துநடக்கின்றனர்.அறிவு எம்மை செயற்பட வைக்க வேண்டும்.ஒரு இறைவசனத்தையாயினும் சரி ஒரு நபிமொழியையாயினும் சரி கற்றுவிட்டும் கேட்டுவிட்டும் செல்வதை விட செயற்பாட்டுக்கு கொண்டுவருவதுதான் ஏற்றமானது.”செயற்படும் சமூகத்தால் தான் மாற்றங்களை நிகழ்த்த முடியும்” என்பது இமாம் ஹசனுள் பன்னாவின் அசையாத நம்பிக்கை.


கற்ற கல்வியை அறிவை வாழ்வுடன் இணைத்து நடைமுறைக்கு கொண்டுவரும் இடமாக பள்ளிவாயில்கள் மாறவேண்டும். அசைவியக்கமற்ற (non –dynamic nature) சமூகமாக இருந்தது போதும். மூடுண்ட சமூகமாக(closed) இருந்து நாம் எதையுமே சாதிக்கவில்லை.இஸ்லாமிய எழுசிக்காலத்தில் பள்ளிவாயில்கள் ஆற்றிய காத்திரமான பணியை நாமும் செய்ய முன்வர வேண்டும். சமூக மாற்றத்தின் முக்கிய மையஸ்தானம் பள்ளிவாயில்கள் என்ற அசையாத நம்பிக்கை ஊர்மக்களுக்கும் நிர்வாகத்துக்கும் கதீப்களுக்கும் எத்திவைக்கப்படின் இன்னும் பல படிகள் மேலேறிச் செல்லலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here