வெளியாகிறது இலங்கை மீதான UNHRC போர்குற்ற அறிக்கை!

0
3
bfe64111e3ca83ccb8a49c806580336c_L
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முப்பதாவது கூட்டத்தொடர் ஆணையாளர் செய்யித் ரா-அத் அல் ஹுசைன் தலைமையில் இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகியது.
ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் 42 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த அமர்வில் சிரியா மீதான விசாரணை ஆணையகம், வடகொரியாவின் மனித உரிமை விடயம், உலக போதைப்பொருள் பிரச்சினை மற்றும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றம் ஆகியன முக்கிய விடயங்களாக கருதப்படுகின்றன.
இலங்கையில் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த உள்நாட்டுப் யுத்தத்தின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணையை நடத்த இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக மனித உரிமைகள் பேரவை குற்றஞ்சாட்டியிருந்தது.
இந்நிலையில், அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான தீர்மானத்தை கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பேரவை நிறைவேற்றியிருந்தது.
மேலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக் குழு நாட்டிற்கு விஜயம் செய்ய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை, எனினும் இலங்கைக்கு வெளியில் இருந்தே குறித்த குழு விசாரணைகளை நடத்தியிருந்தது.
இந்த விசாரணை அறிக்கை இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் அமர்விலேயே வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் இலங்கையில் பதவியேற்றிருந்த புதிய அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கும் வகையில், செப்டெம்பர் மாத அமர்வு வரை இந்த அறிக்கை வெளியீடு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த விசாரணை அறிக்கையின் பிரதி கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை அரசாங்கத்தின் பதிலுக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உள்ளக பொறிமுறையிலான விசாரணையே நடத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கமும் அறிவித்துள்ளது.
மேலும் 2012, 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான மூன்று தீர்மானங்களையும் கொண்டுவருவதில் முதன்மையாக செயற்பட்ட அமெரிக்காவும், இலங்கையின் உள்ளக பொறிமுறையிலான விசாரணைக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.
இவ்வாறானதொரு நிலைமையிலேயே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான மிகப்பெரிய குழு ஒன்று ஜெனீவா சென்றுள்ளதோடு, அவர்கள் இலங்கை தொடர்பிலான அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்கின்றனர்.
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சில தமிழர் தரப்புக் கட்சிகளும் தங்கள் பிரதிநிதிகளை ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்கேற்கச் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்யித் ரா-அத் அல் ஹுசைன், எதிர்வரும் புதன்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான போர் குற்ற அறிக்கை வெளியாகின்றது என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here